
கஜேந்திரனாகிய யானை முதலை வாய்ப்பட்டபோது, "ஆதிமூலமே' என்றழைத்தது. ஆதிமூலம் என்பது கடவுளுக்கான பொதுப்பெயராக இருப்பினும், புராணப் பாங்கின்படி திருமாலுக்குச் சிறப்புப் பெயராவதைக் கற்பனை நயத்துடன் பாடியுள்ளார் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
"ஆதிமூலமே' என்ற அவலக் குரலைக் கேட்ட சிவன், பிரம்மா போவார் என்று இருந்துவிட, பிரம்மாவோ சிவன் போவார் என இருந்துவிட்டார். ஆனால், "அபயம்' அளிக்கத் திருமால் ஓடோடி வந்தார். அவர் வந்ததைக் குறிக்கும் தண்டபாணி சுவாமிகள், "அவர் போவார் இவர் போவார்' என எண்ணாமல், நாம் போக வேண்டும் என வந்தாய் என நயம்படக் கூறியுள்ளார்.
மேலும், இப்படித் திருமால் முந்திக்கொண்டு போய் கஜேந்திரனைக் காப்பாற்றிய செய்தியைக் கேட்ட சிவனும் பிரம்மாவும் "அவர் போவார் இவர் போவார்' என நாம் இருந்துவிட்டோமே என எண்ணி வெட்கப்பட்டதாகவும் பாடியுள்ளார். இக்கற்பனை நயம்மிக்க பாடல் விழுப்புரம் வட்டத்தைச் சார்ந்த தென்பேறு புதுப்பாளையம் கிராமக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருமால் மீது தண்டபாணி சுவாமிகள் பாடிய விஷ்ணு பதிகத்தில் உள்ளது.
கவலையெனும் பிணிகொண்டு உன்கண்
அருளை மிகநாடித்
தவமுயலும் தமியேனைத் தளரவிடத்
தகுங்கொல்லோ?
அவன் இவன் என்று உரையாடல்
ஆதியெனும் ஆனையின்முன்
சிவன் அயன் கண்டு ஓல்கவந்தாய்
தென்பேற்று நெடுமாலே!
தென்பேற்றில் வீற்றிருக்கும் திருமாலே! உன்னை அடைய வேண்டும் என்ற கவலை கொண்டு உன் அருளை வேண்டித் தவம் கிடக்கும் என்னைத் தாங்காமல் தளரவிடுவது உன் தகுதிக்குத் தகுமோ? என்று தண்டபாணிகள் வேண்டினாலும் இதில் உள் குறிப்பு யாதெனில், "என் தகுதிக்கு உன்னை வணங்குவது போல உன் தகுதிக்கு என்னைத் தாங்குவதுதானே முறை' என உரிமையுடன் கேட்பதுதான் ஆன்மாவின் அச்சமற்ற வேண்டுதல். இந்த உரிமையைச் செய்யவல்ல தகுதி திருமாலுக்கு உண்டென்பதை நினைவுபடுத்தி, ஆதிமூலம் என்ற பெயர் திருமாலாகிய உனக்கு இயல்யாய் அமைந்துவிட்டது என்பதால், அதை என் பொருட்டும் காப்பாற்றிக்கொள்ள வேண்டாமா? என்பதே தண்டபாணியாரின் தண்டமிழ்க் குறிப்பு.
-தமிழாகரர் தெ. முருகசாமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.