பாவையின் அழகும் பன்னிரண்டு தலங்களும்
கொட்டாம்பட்டிக் கருப்பையாப் பாவலர் என்ற புலவர் பெருமான் பாடிய தனிப்பாடல் இது. இனிய இலக்கிய நயமும், இரு பொருளும் கொண்டது.


கொட்டாம்பட்டிக் கருப்பையாப் பாவலர் என்ற புலவர் பெருமான் பாடிய தனிப்பாடல் இது. இனிய இலக்கிய நயமும், இரு பொருளும் கொண்டது.
ஓர் அழகிய சிற்றூரின் தலைவன் செந்தில்வேல். அவனுடைய அமைச்சராகவும், இனிய நண்பராகவும், ஏன் தந்தையாகவும் திகழ்பவர் கொட்டாம்பட்டிக் கருப்பையாப் பாவலர்.
ஒரு சமயம் தமிழ்நாட்டிலுள்ள சில திருத்தலங்களுக்குச் சென்று அங்குள்ள இறைவனை வழிபட்டுத் திரும்பும்போது, ஊர்த் தலைவனுக்கேற்ற மணப்பெண்ணையும் அழைத்துக் கொண்டு வந்தார்.
ஊர்த் தலைவன் செந்தில்வேல் அவரை அகமும் முகமும் மலர வரவேற்று, ""தந்தையே! எனக்குப் பொருத்தமான ஒரு பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து வருவதாகக் கூறி, திருத்தல யாத்திரை சென்றீர்களே? எந்தெந்த ஊர்களுக்குச் சென்றீர்கள்? தங்களுடன் வந்திருக்கும் அழகிய பொற் பதுமை போன்ற இந்தப் பெண் யார்?'' என்று அன்பு மேலிட வினவினான்.
புலவர் சொல்லத் தொடங்கினார்: ""செந்தில்வேலே, சொல்கிறேன், கேள்! அழகிய மயிலைப் போன்ற சாயலும், வானத்தின் மீது செல்லும் கரிய மேகத்தைப் போன்ற கூந்தலும், கரும்பு போன்ற உடலும், மொட்டவிழ்ந்த முல்லை மலர் போன்ற வாயில் தந்தம் போன்ற வெண்மையான பற்கள் சிந்தும் புன்னகையும், கொடிய விஷத்தன்மை காட்டக்கூடிய கூர்மையான விழிகளும் கொண்டவள் இந்தப் பெண். உன்னையே நினைத்து வாடும் இவள், உன்னை அணைத்து மகிழும் பாக்கியம் தன் வயத்தில் இல்லாததோ என எண்ணி வருந்தி நிற்கின்றாள். மணிகள் கொண்ட ஆடையும், கை வளையல்களும் கழன்று போகுமாறு விரகதாபம் கொண்டு துன்பத்தால் மெலிந்து, உயர்ந்த மலை போன்ற மார்பகங்கள் விம்மி, கச்சு அறுந்து போகுமாறு புளகாங்கிதம் கொண்டு உன்னை வந்தடைந்தாள். அறத்தின் வடிவானவனே! செந்தில்வேல் என்னும் பெயருடைய மன்னவனே! அத்தகைய இயல்புடைய இப் பெண்ணைத் தழுவி, உன் இல்லத்திற்கு அவளை அனுப்பி வைத்தால், அதனால் வரக்கூடிய பேரின்பம் எனும் பாக்கியம் உன்னைச் சார்ந்ததாகும்'' என்று தான் அழைத்துவந்த பெண்ணை தலைவனிடம் ஒப்படைக்கிறார். மேலும் அவர்,
""இந்தப் பெண்ணாகிய நல்லாளைப் புகழ்ந்து பாடியும், தான் பல திருத்தலங்களுக்குச் சென்று வந்ததையும் ஒரு பாடலாகப் பாடுகிறேன். நீ கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குபவன். இந்தப் பாடலைக்கேட்டு, நான் சென்று வந்த 12 திருத்தலங்களை நீயே கண்டுபிடித்துக் கொள்!'' என்று கூறி, பின்வரும் பாடலைப் பாடுகிறார்.
பாவலர் பாடிய பாடலை ஒரு முறைக்கு இருமுறை கேட்டு அவர் சென்று வந்த திருத்தலங்களையும் தெளிவுற அறிந்து கொண்டு, புலவரைப் பாராட்டி மகிழ்ந்தான் அந்த ஊர்த்தலைவன்.
""திருமயிலை வான்மியூர் முகிலை அன சாயல்
திகழ் கோதைத் திரு வல்லிக் கேணி லைமை உற்ற
ஒரு முல்லை வாயில் நகை ஆலங்காட் டுவிழி
ஒற்றியூர் வதுஅவசமோ எனநொந்துஉன் மயலால்
வரு மணிமே கலைக் காஞ்சித் துகிள் வலைகள் நழுவ
மலைத்து அண்ணா மலை முலையின் வார்கிழிய வந்தாள்;
தரும துரை யே, செந்தில் வேல ரசே, அன்னாள்
தனைப் புலியூருக் கனுப்பின் சார்பாக்கம் உனதே!''
இதில் திரு மயிலை, திருவான்மியூர், திருவல்லிக்கேணி, திருமுல்லைவாயில், திருவாலங்காடு, திருவொற்றியூர், காஞ்சி, திருஅண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், புலியூர், திருவெண்பாக்கம் ஆகிய பன்னிரண்டு திருத்தலங்களும் வரப்பெற்று, அதில் பெண்ணின் நல்லாளையும் வருணிக்கும் வேறு பொருள் தோன்றும் நயம் உய்த்துணர்க.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...