பரிபாடலில் "பாவை' நோன்பு!

நாடு செழிக்கவும், நல்ல கணவர் வாய்க்கவும் பெண்கள் பல நோன்புகளையும், விரதங்களையும் கைக்கொள்வர். அவற்றுள் மிகச் சிறந்தது - உயர்ந்தது பாவை நோன்பு.
பரிபாடலில் "பாவை' நோன்பு!

நாடு செழிக்கவும், நல்ல கணவர் வாய்க்கவும் பெண்கள் பல நோன்புகளையும், விரதங்களையும் கைக்கொள்வர். அவற்றுள் மிகச் சிறந்தது - உயர்ந்தது பாவை நோன்பு.
 பாவை நோன்பு "காத்யாயினி' நோன்பின் மறுவடிவம் என்பர். அதாவது "வடவர் நோன்பு தமிழர் பண்பாட்டோடு இரண்டறக் கலந்தது' என்பார், திருவெம்பாவைக்கு உரை எழுதிய பி.ஸ்ரீ. இந்த இணைப்பின் அடிப்படையில் "கன்னிப் பெண்கள் மழைவளம் வேண்டியும், நாடு செழிக்கவும், பீடுடைய துணைவரைப் பெறவும் மலைமகளாம் உமையம்மையை நோக்கி நோன்பு இருப்பர்.
 விடியற் காலையில் எழுந்து, தூய்மை செய்து, திருநீறணிந்து பாடிக் கொண்டு தாயுடன் சென்று மற்ற கன்னியரையும் எழுப்பி நீராடும் துறைக்குச் செல்வர். அங்கு ஈர மணலால் மலைமகள் வடிவப் பாவைப் செய்து, அதனை வழிபட்டு நீராடுவர் எனக் குறிப்பிடுகிறார். பழந்தமிழர் இந்நோன்பின் சடங்காக நீராடலைக் கொண்டிருந்தனர். அதனால் இதைத் "தைந்நீராடல்' எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடு
 கின்றன.
 "நறுவி ஐம்பான் மகளிராடும் தை இத்தண் கயம் போல' (ஜங். 84:34) என ஜங்குறுநூறு சுட்டுகிறது. "தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ' எனக் கலித்தொகையும் சுட்டுகிறது. இத்தை நீராடலை - பாவை நோன்பை "அம்பா நீராடல்' என்பார் புலவர் நல்லத்துவனார். வையை பற்றிய பரிபாடலில், பாவை நோன்பை விரிவாகவே எடுத்துரைக்கிறார்.
 தலைவியின் மனம்போல அவள் விரும்பியவனையே மணப்பதற்கு அவளுடைய பெற்றோர் சம்மதிக்கின்றனர். இந்த நற்செய்தியை அறிந்த தோழி, தலைவியை வாழ்த்துகிறாள். அந்த வாழ்த்தில் தலைவி நோன்பு நோற்று வையையில் தைந்நீராடியதே அவள் பெற்ற நற்பேற்றிற்குக் காரணம் என மகிழ்வாகக் குறிப்பிடுகிறாள்.
 சூரியன் கடுமையாகக் காயாததும் குளிர்ந்த பின் மழையையும் உடைய மார்கழி மாதத்தின் முழுநிலவு நிறைந்த ஆதிரை நாளில் அந்தணர்கள் சிவனுக்குரிய விழாவினைத் தொடங்குவர்; வேறு சில அந்தணர்கள் பொற்கலசங்களில் பூசைப் பொருள்களை ஏந்தி நிற்பர். அத்திருவாதிரை நாளில் இளம் பெண்கள் "இந்த உலகம் வெயிலால் வெம்பாது மழையில் குளிர்க!' என்று வாழ்த்தித் தைந்நீராடுவர். அவ்வாறு நீராடுவதற்குரிய சடங்கு முறைகளை இளம் பெண்களுக்கு முதுபெண்டிர் காட்டுவர்.
 "கனைக்கும் அதிர்குரல் கார்வனம் நீங்கப்
 பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
 ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளித்து
 மாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரை
 விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
 புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப
 வெம்பா தாக வியனில வரைப் பென
 அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
 முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட'
 (பரி 11: 74-82)
 என்பது பரிபாடல் காட்டும் பாவை நோன்பின் நீராடல் முறைமை. அந்த முறைமையை சைவ, வைணவப் பாவைப் பாடல்கள் இரண்டும் சிற்றம் சிறுகாலையில் எழுந்து நீராடச் சொல்கின்றன. திருப்பாவையில் ஆண்டாள், பாவை நோன்புக்குரிய கிரிசைகளை - சடங்குகளை 2ஆவது பாடலில் குறிப்பிடுகிறார். அதாவது, பால் பொருள்களை உணவில் நீக்கி, அதிகாலையில் எழுந்து நீராடி, தம்மை அலங்கரித்துக் கொள்வதைத் தவிர்த்து, செய்யக் கூடாத செயல்களைச் செய்யாது, தீய சொற்களைக் கூறாது, பிறருக்கு ஈகை செய்ய வேண்டும். இதுவே பாவை நோன்புக்குரிய சடங்குகளாகும். இவற்றைக் குறிப்பாக, "முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட' என்பார் பரிபாடல் ஆசிரியர்.
 பாவை நோன்பின் இன்றியமையாத சடங்குச் செயல்பாடு நாட்காலை நேரத்தில் நீராடுவது ஆகும். இதை, "கோழியுங் கூவின குக்கில் அழைத்தன' என யாப்பருங்கல விருத்தியின் உரையில் இடம்பெற்றுள்ள பாவைப் பாடல் ஒன்று இப்புலர் காலை நீராடலை வலியுறுத்துகிறது.
 பழந்தமிழகத்தில் பெண்கள் வையையில் நீராடுகின்றனர். பனிமிகுந்த ஊதைக் காற்று வீசுகிறது. அதிகாலையில் நோன்பு நோற்று நீராடிய இளம் பெண்கள் அந்த ஊதைக் காற்றால் நடுங்குகின்றனர். தமது ஈர ஆடையை உலர்த்திக் கொள்வதற்காக ஆதிரை நாள் விழாவிற்காக அந்தணர்கள் வளர்க்கின்ற வேள்வித் தீக்கு அருகில் அம்மகளிர் விரும்பிச் செல்கின்றனர்.
 தமிழர் பண்பாட்டில் வடவர் மரபுகளும் சடங்களும் கலந்தமையைப் பரிபாடலில் காணமுடியும் என்பர். அந்த வழியில் ஆதிரைநாள் விழாவிற்காக அந்தணர்கள் வேள்வி ஆற்றுகின்றனர்; மண்ணின் மணத்தோடு மகளிர் நோன்பு நோற்று வையையில் நீராடுகின்றனர் என்கிறார் புலவர் நல்லந்துவனார்.
 திருவாதவூரடிகள் புராணம் (திருவம்பலச் சருக்கம், 40), ஆதிரைக்கு முந்தைய நாள்களில் மகளிர் ஒருவரையொருவர் அழைத்துக்கொண்டு நீர்நிலைகளுக்குச் சென்று நீராடுதலைக் குறிப்பிடுகிறது.
 பாவை நோன்பு நோற்கும் பெண்கள் சிறுமியர் போன்று தம்முடைய தோழியரோடு விளையாடுவர். அவ்விளையாட்டுத் தன்மையை விடுத்துத் தவப்பயன் தரும் தைந்நீராடலைத் தம் தாயாரோடு சேர்ந்து கைக்கொள்கின்றனர் (பரி.11:87-92) எனப் பரிபாடல் காட்டுகிறது.
 இவ்வாறு பாவை நோன்பு நோற்பதால் இறைவனது திருவருள் கிடைக்கும் என்பது பக்திப் பாவைகள் சொல்லும் பலன். "செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்' என ஆண்டாளும், "இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்' என மணிவாசகரும் பேசுவார்கள்.
 பழந்தமிழரின் பாவை நோன்பு நீராடல் தலைவி, தனக்குரிய காதல் தலைவனைப் பெற்றுவிடுகிறாள். ஆம், பாவை நோன்பு மேற்கொண்டு வையையில் நீராடிய தலைவியின் காதல், பெற்றோர் ஒப்புதலுடன் "கரணம்' எனும் திருமணத்தின் வழிபட்ட கற்பாக (பரி.11:131-139) சிறப்புறுகிறது.
 -முனைவர் யாழ். சு.சந்திரா
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com