இந்த வாரம் கலாரசிகன் (21/06/2020)

இந்தியப் பொருளாதாரத்தின் அத்தனை பரிமாணங்களையும் அவர் எடுத்தியம்பி விளக்கி இருப்பதைப் பார்க்கும்போது இந்தியத் திட்டக் கமிஷனில் அவரை ஏன்  உறுப்பினராக்கவில்லை என்கிற ஆத்திரம் எழுகிறது.
இந்த வாரம் கலாரசிகன் (21/06/2020)


ஒரு புத்தகம் என்னை உலுக்கி எடுத்துவிட்டது. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் ஒரு மனிதரால் இவ்வளவு தெளிவாகவும், தொலைநோக்குப் பார்வையுடனும் எப்படிச் சிந்திக்க முடிந்தது என்பதை நினைக்கும்போது பிரம்மாண்ட இமயமாக வளர்ந்து நிற்கிறார்.

நான் கல்லூரியில் படிக்கும்போது "தினமணி' நாளிதழில் வெளிவந்த கட்டுரைகளை, அதிலும் குறிப்பாக "கணக்கன்' என்கிற பெயரில்  அன்றைய ஆசிரியர் பெரியவர் ஏ.என். சிவராமன் எழுதும் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்திருக்கிறேன். இப்போது பல பொருளாதார நிகழ்வுகளை நான் சுலபமாகப் புரிந்து கொள்ளக் காரணம்,  அவர் அப்போது கற்றுத்தந்த பாடம்தான் எனது பொருளாதாரப் புரிதலின் பின்னணி என்பது இப்போது விளங்குகிறது.

தன்னிடம் இருந்த சில முக்கியமான புத்தகங்களை கோவைக் கம்பன் கழகம் நஞ்சுண்டன் எடுத்துச் செல்லப் பணித்ததை முன்பே பதிவு செய்திருக்கிறேன். அவற்றுள் ஒன்றுதான் 1969-இல் அன்றைய "தினமணி' ஆசிரியர் ஏ.என்.சிவராமன் எழுதிய "பொருளாதார முன்னேற்றத்தில் குறுக்கிடும் இடர்ப்பாடுகள்' என்கிற புத்தகம். "கணக்கன்' என்கிற பெயரில் "தினமணி' நாளிதழில் தொடர்ந்து வெளிவந்த அவருடைய கட்டுரைகளின் தொகுப்பு அது.

இந்தியப் பொருளாதாரத்தின் அத்தனை பரிமாணங்களையும் அவர் எடுத்தியம்பி விளக்கி இருப்பதைப் பார்க்கும்போது இந்தியத் திட்டக் கமிஷனில் அவரை ஏன்  உறுப்பினராக்கவில்லை என்கிற ஆத்திரம் எழுகிறது. அப்பப்பா.. எத்தனை விஷயங்களை அவர் போகிறபோக்கில் சாமானியனுக்கும் புரியும் விதத்தில் விளக்கிச் செல்கிறார்! 

வறுமையின் அறிகுறிகள், வறுமையைப் போக்குவதில் முதலீட்டின் பங்கு என்று தொடங்கி, இந்தியா ஏன் ஏழை நாடு என்பதையும், "இஸம்'கள் என்கிற பூஜை வேளைக் கரடி,  ஐந்தாண்டுத் திட்டங்கள், வெளிநாட்டுக் கடனும் விளைவுகளும், இந்தியா கடன்பட  ஆரம்பித்தது ஏன், கடனைவிட அந்நிய முதலீடு மேல், அந்நிய தொழில்நுட்ப உதவியால் ஏற்படும் பிரச்னைகள்,  "பேட்டன்ட்'  எனப்படும் உரிமம், அந்நியச் செலாவணிப் பிரச்னைகள்,  வங்கிகளின் பங்கு, சர்வதேச நிதியத்தின் உதவிகள், ஏகபோகம், குவியல், போட்டிப் பாதுகாப்புச் சட்டங்கள் என்று ஒன்றன் பின் ஒன்றாக அவர் விளக்கிச் சொல்லிக் கற்பிக்கும் வித்தகத்தின் முன்னால் "ஹார்வர்ட்' பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பிச்சை வாங்க வேண்டும்.

ஜி.டி.பி., ஜி.எஸ்.டி குறித்தெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் விளக்கி இருப்பதைப் படிக்கப் படிக்க மலைத்துப் போய்விட்டேன். இந்தக் கட்டுரைத் தொடரை தான் ஏன் எழுதினேன் என்பதற்கு ஏ. என்.எஸ். கூறும் காரணம் தெரியுமா?  ""அழுது கொண்டிருக்காதே,  உழுது கொண்டிரு என்பார்கள். அழுது கொண்டிருக்கும் நேரத்தில் எழுதிக் கொண்டிருக்கலாமே என்று நான் எண்ணினேன்'' என்கிறார் கால் நூற்றாண்டு சுதந்திர இந்தியாவின் நிலை குறித்த வேதனையில் அந்த விடுதலை வேள்வித் தியாகி.

பெரியவர் ஏ.என்.சிவராமனின் "பொருளாதார முன்னேற்றத்தில்  குறுக்கிடும் இடர்ப்பாடுகள்'  கட்டுரைகள் வெளிவந்து அரை நூற்றாண்டு கடந்துவிட்டது. இடையில் எத்தனை எத்தனையோ பிரதமர்கள், முதல்வர்கள் வந்து போய்விட்டார்கள். ஆளுங்கட்சிகள் எதிர்க்கட்சியாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியாகவும் பலமுறை புரட்டிப்போடப் பட்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவின் அடிப்படைப் பிரச்னைகள் அப்படியே தொடர்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகம்  உதவியது.

""இதை எழுதுவதால் ஒரு பயன் நிச்சயமாக உண்டு. நாட்டின் சீர்கேட்டைப் பற்றி சரித்திரம் எழுதுபவர்கள், 20 ஆண்டுகளுக்கு முன்னர் தவறுகளை எடுத்துக்காட்டுபவர் இல்லாததால்தான் தவறுகள் நடந்தன என்று எழுத முடியாது. தவறுகளை எடுத்துக்காட்டி எச்சரிப்பவர்கள் இருக்கத்தான் செய்தார்கள் என்று கூறுவதற்கு வரலாற்றுத் தகவலாக உங்கள் கட்டுரைகள் பயன்படும்'' என்று  வாசகர் ஒருவர் குறிப்பிட்டதாகப் பெரியவர் ஏ.என்.எஸ். தெரிவிக்கிறார்.

 "நான் எழுதி என்னவாகிவிடப் போகிறது? ஏன் எழுத வேண்டும்' என்கிற மனச்சோர்வு அவ்வப்போது எனக்கு ஏற்படுவதுண்டு. அந்த மனச்சோர்வை மாற்றும் மாமருந்தாக அமைகிறது மேலே குறிப்பிட்ட வாசகரின் கூற்று.
"விக்கிரமாதித்தன் நாற்காலி' உவமை எனக்கு நினைவுக்கு வருகிறது. "ஆச்சார்ய தேவோ பவ'!  

***

புதுச்சேரி அரசு சட்டத் துறையில்  மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிவரும் முனைவர் சுந்தர முருகன்  27 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து சாகித்ய அகாதெமிக்காகத் தொகுத்திருக்கும் புத்தகம், "இருபத்தோராம் நூற்றாண்டுப் புதுச்சேரி காரைக்கால் தமிழ்ச் சிறுகதைகள்' என்கிற தொகுப்பு. கி.ராஜநாராயணனின் "வேட்டி', பிரபஞ்சனின் "அப்பாவின் வேட்டி' கதைகளுடன் தொடங்கி, பாரதியாரின் "ஆறில் ஒரு பங்கு',  வ.வே.சு.ஐயரின் "குளத்தங்கரை அரச மரம்' கதைகளைப் பின்னிணைப்பாகக் கொண்டு முடிவடைகிறது இத்தொகுப்பு.

தொகுப்பாசிரியர் கூறுவதுபோல, தமிழ் இலக்கியத்தில் புத்திளம் முயற்சிகள் பலவும் புதுவை மண்ணிலிருந்துதான் தொடங்கியுள்ளன. அதற்கு ஏராளமான சான்றுகள் பகரலாம். மேலை நாட்டினரால் உருவாக்கப்பட்ட சிறுகதை இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை  வ.வே.சு. ஐயரைச் சாரும் என்று சிலரும், மகாகவி பாரதியாரின் பங்களிப்பு என்று சிலரும் வாதிடுவதுண்டு. இருவருமே சமகாலத்தில் புதுவையில் வாழ்ந்த நண்பர்கள். யார் முதலில் என்பதல்ல கேள்வி. யாருடையதாக இருந்தாலும் அதன் தொடக்கம் புதுவையில்தான் என்பது உறுதி.

""கதைக்கும் சிறுகதைக்கும் இடையிலானது மெல்லிய இழை போன்ற இடைவெளி. கதை  என்றால், ஒன்றில் தொடங்கி பத்து வரை எண்ணுவது போன்றதாகும்.  சிறுகதை என்றால் திடீரெனத் தொடங்கி  வரிசையாகச் செல்லாமல் தாண்டித் தாண்டிச் சென்று திடீரென முடிந்துவிடும்'' என்கிற சுந்தர முருகனின் கருத்துடன் உடன்பட முடியவில்லை.  அவர் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கும் பெரும்பாலான கதைகளும் சிறுகதை இலக்கணத்துக்கு  உட்பட்டவை என்பதைக் கூறாமல் இருக்கவும் முடியவில்லை. 

கட்செவி அஞ்சலில் அனுப்பித் தரப்பட்டிருந்தது, கவிஞர் கார்க்கிபவா எழுதிய இந்தக் கவிதை. அந்தக் கவிஞர் குறித்தோ, இந்தக் கவிதை எந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது என்றோ எனக்குத் தெரியாது.  ஆனால்,  நிதர்சனத்தை அப்பட்டமாகப் படம்பிடிக்கின்றன கவிதை வரிகள். அதனால் எனக்குப் பிடித்தது. பகிர்ந்து கொள்கிறேன். 

எப்போதும்
தொட்டுவிடும் தூரத்தில்
எல்லோருடைய பின்னும்
சிரித்தபடி
நின்று கொண்டிருக்கின்றன
மரணமும் அன்பும்! 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com