​ஈ​ரங்​கொல்-பிறந்த-கதை​

"ஈரங்​கொல்லி' என்ற சொல்​லுக்கு, வண்​ணான், துணி வெளுப்​ப​வர் என்றே அக​ரா​தி​கள் அனைத்​தும் பொரு​ளு​ரைத்​துள்​ளன.
​ஈ​ரங்​கொல்-பிறந்த-கதை​


உயிர்க்​கொல்லி, ஈரு​கொல்லி, பயங்​கொள்ளி, பூச்​சிக்​கொல்லி, ஆட்கொல்லி எனப் பேச்​சு​வ​ழக்​கி​லும், "சேர்ந்​தா​ரைக் கொல்​லி'(​கு​றள்:306) என்று இலக்​கிய வழக்​கி​லு​முள்ள சில தொடர்​க​ளைப் போன்று கல்​வெட்​டு​க​ளி​லும், வைணவ உரை​க​ளி​லும் இடம்​பெ​றும், "ஈரங்​கொல்லி'  என்ற சொல்​லுக்கு வண்​ணான், வண்​ணாத்​தார்​கள், துணி வெளுப்​ப​வர் எனப் பொருள் கூறப்​பட்​டுள்​ளது. 

"ஈரங்​கொல்லி' என்ற சொல்​லுக்கு, வண்​ணான், துணி வெளுப்​ப​வர் என்றே அக​ரா​தி​கள் அனைத்​தும் பொரு​ளு​ரைத்​துள்​ளன. உயர்​தி​ணைப் பெயர்​க​ளா​னாலோ அல்​லது தொழில் அடிப்​ப​டை​யி​லான உயர்​தி​ணைப் பெயர்​க​ளா​னாலோ குய​வன், கொல்​லன் என "னக​ர'​வீற்​றுப் பெயர்​க​ளா​க​வும், குய​வர், கொல்​லர் என "ரக​ர'​வீற்​றுப் பெயர்​க​ளா​க​வும் குறிப்​ப​தும் வழங்​கு​வ​து​வுமே தமிழ்​ம​ரபு. அஃறி​ணை​யைக் குறிப்​ப​து​போன்று இப்​பெ​யர் அமைந்​துள்​ள​மை​யால், இக்​கால அக​ரா​தி​கள் "சல​வைக்​கா​ரம்' என்​றும் பொரு​ளு​ரைத்​துள்​ளன. 

ஈரம்​போ​கு​மாறு, (ஈரம்​கொன்று) காய​வைத்​துக் கொடுத்​த​தன் கார​ண​மாக ஈரங்​கொல்லி என்ற இப்​பெ​யர் தோன்​றி​யி​ருக்​க​லாம் என்​பது சரி​யல்ல. "ஈரங்​கொல்லி' என்ற சொல்​லுக்கு நேர​டிப் பொருள் கொள்​வ​தா​லேயே இவ்​வா​றெல்​லாம் பொருண்​மை​கள் கூறப்​பெற்​றுள்​ளன. அவ்​வாறு நேர​டிப்​பொ​ருள் கொள்​ளு​தல் தவறு. ஏனெ​னில், "ஈரங்​கொல்லி' என்ற இச்​சொல் ஒரு மரூ​உச் சொல். துணி வெளுப்​ப​வ​ரான வண்​ணாத்​தாரை கல்​வெட்​டு​கள், வைணவ உரை​கள் ஈரங்​கொல்லி எனக் குறிப்​பிட்​டி​ருப்​பி​னும், அவற்​றை​வி​டக் காலத்​தால் முந்​தைய நிகண்​டு​கள், ஈரங்​கோ​லி​யர், ஈரங்​கொல்​லி​யர் என உயர்​திணை ஈற்​றுப்​பெ​யர்​க​ளா​கவே குறித்​துள்​ளன. 

நிகண்​டு​க​ளில் காலத்​தால் முந்​தை​ய​து​வும், முத​லா​வ​து​வு​மான திவா​கர நிகண்​டில் "ஈரங்​கோ​லி​யர்' என்றே இப்​பெ​யர் குறிப்​பி​டப் பெற்​றுள்​ளது. ஆனால், திவா​கர நிகண்​டுக்​குப் பின் தோன்​றிய பிங்​கல நிகண்டு, ஈரங்​கொல்​லி​யர் எனக் குறித்​துள்​ளது. 

திவா​க​ர​ரால் ஈரங்​கோ​லி​யர் எனக் குறிக்​கப்​பெற்ற இச்​சொல் ஈரங்​கொல்​லி​யர் என மருவி வழங்​கப்​பெற்​ற​மை​யைப் பிங்​கல நிகண்டு புலப்​ப​டுத்​து​கி​றது. இவ்​வாறு ஈரங்​கொல்​லி​யர் என மரு​விய அச்​சொல்லே, காலப்​போக்​கில் ஈரங்​கொல்லி என்​றும் மருவி வழங்​கப் பெற்​ற​மை​யைக் கல்​வெட்​டு​க​ளும், வைணவ உரை​க​ளும் உணர்த்​து​கின்​றன.  ஆக,  காலத்​தால் முந்​தைய திவா​கர நிகண்டு குறிப்​பிட்​டுள்ள "ஈரங்​கோ​லி​யர்' என்ற சொல்லே "ஈரங்​கொல்​லி​யர்' என்​றும், பின்​னர் "ஈரங்​கொல்லி' என்​றும் மருவி வழங்​கப்​பட்​டி​ருக்க வேண்​டும்.  


ஈரங்​கோ​லி​யர் என்ற பெய​ருக்​கான கார​ணம் சுவை​யா​னது. "கோலி​கன்' என்​றால் "ஆடை' எனப் பொருள். இச்​சொல்லை, நன்​னூல் சொல்​ல​தி​கா​ரத்​தில் ஆகு​பெ​யர்​க​ளில் கருத்​தா​வாகு பெயர்க்​கான விளக்​க​வு​ரை​யில் காண​லாம்.  
"இவ்​வாடை கோலி​கன்' என்​ பு​ழிக் கோலி​கன் என்​னும் வினை​மு​தலை உணர்த்​தும் பெயர், அவ​னால் நெய்​யப்​பட்ட ஆடைக்கு ஆயி​ன​மை​யாற் கருத்​தா​வாகு பெயர்'. அதா​வது, கோலி​கன் என்​பது நெச​வா​ளனை மட்டு​மின்றி அவ​னால் நெய்​யப்​பட்ட ஆடை​யை​யும் குறிக்​கும். எனவே, கோலி​கன் என்ற சொல்​லுக்கு ஆடை என்று பொரு​ளுண்டு. கோலி​கன் என்ற இச்​சொல்​லுக்​கான வேர்ச்​சொல்​லைச் சங்க இலக்​கி​யத்​தி​லும் காண​மு​டி​கி​றது. 

களங்​காய்க்​கண்​ணி​ நார்​மு​டிச்​சே​ரல் என்ற சேர​வேந்​தன் தன் முடி​யால் சிறப்​புப்​பெ​யர் பெற்​ற​வன். அவன் அணிந்​தி​ருந்த நார்​முடி செய்​யப்​பட்​டி​ருந்த பாங்​கி​னைக் காப்​பி​யாற்​றுக் காப்​பி​ய​னார், பதிற்​றுப்​பத்​தில் அழ​காக உவ​மித்​துப் பாடி​யுள்​ளார்.  அதா​வது, வெள்​ளை​நிற நூல் இழை​க​ளால் அல்​லா​மல் நுண்​ணிய மயிர் இழை​க​ளால் புனை​யப்​பட்​டது போன்ற, மரத்​தில் தொங்​கும் சிலந்தி பின்​னிய அசை​யும் போர்​வையை ஒத்த மெல்​லிய பொன்​னா​லான பட​லத்​தில் நீல​நிற மணிக்​கற்​கள் பதிக்​கப்​பட்​டும், முத்​துக்​கள் பொன் இழை​க​ளில் கோத்​துச் சுற்​றப்​பட்​டு​மா​கப் பட்டொளி வீசும் நார்​மு​டிச்​சே​ரல்' எனப் பாடி​யுள்​ளார். 

அப்​பா​ட​லில், "​சி​லம்பி கோலிய அலங்​கற் போர்​வை​யின்' ​என்ற அவ்​வ​டியே (பதி.39:13) கவ​னம் பெற​வேண்​டிய அடி​யாகும். 

மரத்​தில் தொங்​கும் சிலம்​பி​யின் கூட்டை, அசை​யும் போர்வை எனக் கூறும் புல​வர், போர்வை போன்ற அவ்​வ​லை​யைப் பின்​னிய சிலந்​தி​யின் செய​லைக் "கோலிய' எனக் குறிப்​பிட்​டுள்​ளார். எனவே, ஆடை​யைக் கோலி​ய​வன் (நெய்​த​வன்) கோலி​யன் எனப்​பெற்​றான். அவ​னால் நெய்​யப்​பெற்ற ஆடை​யும் கோலி​யன் எனப்​பெற்​றது. கோலி​கன், கோலி​யன் இரண்​டும் ஒரு சொல்​லின் மாறு​பட்ட வடி​வங்​களே என்​பதை அக​ரா​தி​கள்,  (கோலி​கன்-​கோ​லி​யன்) குறித்​துள்​ளன. கோலி​கன் என்​றால் ஆடை என்ற பொரு​ளி​லும் அவர்​கள் காலத்​தில் வழங்​கப்​பட்​ட​தால் நன்​னூல் உரை​யா​சி​ரி​யர்​கள், கருத்​தா​வாகு பெயர்க்​கான 
எடுத்​துக்​காட்​டா​கக் கோலி​க​னைக் குறித்​துள்​ள​னர்.

துணி வெளுப்​ப​வர், பிற​ரால் உடுத்​தப்​பெற்ற அழுக்​கான ஆடை​களை நீரி​னால் ஈரப்​ப​டுத்​தி, துவைத்​து, புத்​தா​டை​க​ளாக ஆக்​கித் தரு​வ​தால் "ஈரங்​கோ​லி​யர்' என அழைக்​கப்​பெற்​றுள்​ள​னர். இப்​பெ​யரே மருவி ஈரங்​கொல்லி என வழங்​கப்​பெற்​றுள்​ளது. வண்​ணாத்​தா​ரைக் "காழி​யர்' என்​றும் குறிப்​பி​டு​வர். ஆடை​க​ளைத் தூய்​மைப் படுத்​தி​ய​மை​யால், அவ்​வி​னத்​தா​ரைக்  காழி​யர் என்​றும் அழைத்​துள்​ள​னர். காழ​கம் என்ற சொல்​லுக்​கும் ஆடை என்றே பொருள். (புற.41:9; கலி.7:9,73:17; 92:37; திரு.184; மதுரை.598). கோலி​கர் என்ற சொல் கோலி​யர் என்று வழங்​கப்​பெ​று​வ​து​போல, காழ​கர் என்ற சொல், காழி​கர் என்​றாகி, பின்​னர் காழி​யர் எனத் திரிந்​துள்​ளது. 

கல்​வெட்​டு​க​ளி​லும், வைணவ உரை​க​ளி​லும் பேச்சு வழக்​கான ஈரங்​கொல்லி என்ற பெயர் குறிப்​பி​டப்​பெற்​றி​ருப்​பி​னும், அவ் இனப்​பெ​யர் உயர்​தி​ணைப் பெயர்​க​ளுக்​கு​ரிய இலக்​க​ணப்​படி இல்​லா​மை​யால்,  அக​ரா​தி​க​ளி​லும், பிற​வற்​றி​லும் அவ்​வாறு குறிப்​பி​டு​வ​தைத் தவிர்த்து, திவா​கர நிகண்​டார் குறித்​துள்​ள​து​போல, "ஈரங்​கோ​லி​யர்' என்ற சொல்​லைப் பயன்​ப​டுத்​து​வ​து​தான் சிறப்​பாக இருக்​கும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com