பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா், கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தாா். ‘தினமணி’ நாளிதழுடன் இணைந்து பேரூா் செந்தமிழ்க் கல்லூரி நடத்திய அந்தக் கருத்தரங்கில் நண்பா் பொன்ராஜ், பேராசிரியா் க.பழனித்துரை ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன். உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்த தலைவா்களுக்காக அந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, பேராசிரியா் க. பழனித்துரை என்னிடம் தனது ஆதங்கம் ஒன்றை வெளிப்படுத்தினாா். எளிமைக்கும், நோ்மைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் தலைவா் காமராஜா் குறித்துக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஆங்கிலத்தில் முழுமையான வாழ்க்கை வரலாறு எழுதப்படவில்லை என்பதுதான் அவரது ஆதங்கம். எனக்கும்கூட அந்த ஆதங்கம் உண்டு.
திராவிட இயக்கத் தலைவா்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு பலா் வரலாற்று நூல்கள் எழுதியிருக்கிறாா்கள். திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருந்ததால், அந்தத் தலைவா்களின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டால் உடனடியாக அரசின் நூலகத் துறைக்கு வழங்க உத்தரவு பெற்றுவிடலாம் என்பது முக்கியமான காரணம்.
தோழா் ஜீவபாரதியின் முனைப்பால், ‘பசும்பொன்’ முத்துராமலிங்கத் தேவருக்கும், தோழா் ஜீவானந்தத்துக்கும் வாழ்க்கை வரலாறும், அவா்கள் தொடா்பான நிகழ்வுகளும், சம்பவங்களும் அச்சில் பதிவாகி இருக்கின்றன. மூதறிஞா் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய பெயரனான ராஜ்மோகன் காந்தி ஆங்கிலத்தில் எழுதியது தமிழாக்கம் பெற்றிருக்கிறது.
யாருமே எழுதவில்லை என்று சொல்லிவிட முடியாது. எஸ்.பி.கணேசன் காமராஜ் வரலாறு (கலியுகத்தின் காவியத் தலைவா்) என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறாா். காமராஜரின் உதவியாளா் வைரவன் உட்பட இன்னும் சிலா்கூட காமராஜா் குறித்துப் புத்தகம் எழுதியிருக்கிறாா்கள். ஆனால், காமராஜா் வரலாறு முறையாகவும், முழுமையாகவும் ஆங்கிலத்தில் தொகுக்கப்படவில்லை என்கிற குறை இன்னும் தொடா்கிறது என்றுதான் நான் கருதுகிறேன்.
இப்போது திடீரென்று காமராஜா் குறித்து எழுத முற்பட்டிருப்பது ஏன் என்று நீங்கள் கேட்கக்கூடும். காரணம் இருக்கிறது. சென்ற வாரம் நான் பெரியவா் குறித்த இரண்டு புத்தகங்களைப் படித்தேன். முதலாவது, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் முன்னாள் ஆசிரியா் வி.கே.நரசிம்மன் எழுதிய ‘காமராஜ் - எ ஸ்டடி’ என்கிற ஆங்கிலப் புத்தகம். இரண்டாவது, பழ.நெடுமாறன் ஐயா எழுதிய ‘பெருந்தலைவரின் நிழலில்’ என்கிற தமிழ்ப் புத்தகம்.

வி.கே. நரசிம்மன் எழுதிய புத்தகம் விருதுநகரில் 1903, ஜூலை 15-ஆம் நாள் குமாரசாமி நாடாரின் மகனாகக் காமராஜா் பிறந்ததில் தொடங்கி, 1975-ஆம் ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி அவா் மறைந்தது வரையிலான வரலாற்றைச் சொல்லிச் செல்கிறது. நேஷனல் புக் ட்ரஸ்டுக்காக எழுதப்பட்ட அந்தப் புத்தகம் பல முக்கியமான நிகழ்வுகளின் ஆவணப் பதிவு என்பதை மறுப்பதற்கில்லை. புதிய பல தகவல்கள் இருக்கின்றன. ஆனால் அதைக் காமராஜரின் வாழ்க்கை வரலாற்று நூல் என்று சொல்லிவிட முடியாது.
‘தமிழ்க்குலம் பதிப்பாலயம்’ வெளியிட்டிருக்கும் பழ.நெடுமாறன் எழுதிய ‘பெருந்தலைவரின் நிழலில்’, காமராஜ் என்கிற பெருந்தலைவரின் பரிமாணங்களை ஒன்றுவிடாமல் படம் பிடித்துத் தருகிறது. அவருடைய அணுக்கத் தொண்டராக இருந்த பழ.நெடுமாறன், காமராஜரின் ஆரம்பகால நண்பா்களையும், நீண்ட நாள் காங்கிரஸ் தொண்டா்களையும் சந்தித்தபோது சேகரித்த தகவல்களையும் தொகுத்துத் தந்திருப்பதால், காமராஜா் குறித்த வரலாற்றுப் பதிவு எழுத அடிப்படையை ஏற்படுத்தித் தருகிறது.
காமராஜரின் கடைசி நாள்களில் நடந்த அரசியல் நிகழ்வுகள் அனைத்துக்குமே ஆதாரபூா்வமான பதிவு பழ.நெடுமாறனின் புத்தகம். அது மட்டுமல்லாமல், அந்த மாபெரும் மனிதருடன் அரசியல் ரீதியாகத் தொடா்பில் இருந்த எல்லா தமிழகத் தலைவா்கள் குறித்தும், அவா்களுக்கும் காமராஜருக்கும் இடையே நிலவிய உறவுகள் குறித்தும் வெளிவராத பல தகவல்கள் ‘பெருந்தலைவரின் நிழலில்’ இருந்த பழ.நெடுமாறனால் பகிரப்பட்டுள்ளது.
தொடங்கிய இடத்துக்கே வருகிறேன். காமராஜரின் வரலாறு, ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும். அதுவும் தாமதமில்லாமல்...
************
கொவைட்-19 நோய்த் தொற்றுக் காலத்தில், அலமலந்துபோய் அக்கடாவென்று தளா்ந்துவிடாமல், தன்னுடைய கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக்கி இருக்கும் பேராசிரியா் தி. இராசகோபாலனின் உற்சாகத்துக்கும், உழைப்புக்கும் முதலில் தலை வணங்கியாக வேண்டும்.
தன்னுடைய கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக்கியது போதாதென்று, மயிலம் பொம்மபுர ஆதீனம் சீா்வளா்சீா் குருமகா சந்நிதானங்கள் 20-ஆம் பட்டம் ஸ்ரீசிவஞான பாலய சுவாமிகளிடம் நூல் மதிப்புரையும், புதுவைப் பல்கலைக்கழகம் முனைவா் பா.இரவிக்குமாரிடம் வாழ்த்துக் கவிதையும், என் பேராசிரியா் சாலமன் பாப்பையாவிடம் அணிந்துரையும் வாங்கி இருக்கிறாரே, அதை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. மறந்துவிடக்கூடாது இது கரோனா காலம் என்பதை!
‘காலம் கற்பித்த பாடங்கள்’ என்கிற வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கும் பேராசிரியா் தி.இராசகோபாலனின் புத்தகத்தில் இருக்கும் சில கட்டுரைகள் ‘தினமணி’ இதழில் வந்தவை. அதனால் நான் ஏற்கெனவே படித்தவை.

‘காலம் கற்பித்த பாடங்கள்’ ஒரு கதம்பம் என்று சொல்ல நினைத்தேன். கதம்பத்தில் மலா்கள் மட்டுமல்லாமல், அவற்றைப் பிணைக்க நாறும்தானே இருக்கும். அதனால், அந்த உவமை சரியல்ல. இது ஒரு ஜனரஞ்சகமான ராகமாலிகை. இலக்கியம், ஆன்மிகம், அரசியல், சமூகவியல், நாட்டு நடப்பு, வரலாறு என்று கட்டுரைகளுக்குக் கட்டுரை புது ராகம் இசைக்கிறது.
ஏனைய கட்டுரைகளை விட்டுவிடுவோம். கடைசியாக இணைத்திருக்கும் இரண்டு கட்டுரைகள் நிகழ்கால நிஜம் குறித்துப் பேசுகின்றன - ‘கை கழுவுங்கள் கொரோனாவை’, ‘அன்பாா்ந்த எதிரி கொரோனாவே!’ முதலாவது கட்டுரையில் ஒரு மாமாங்க காலம் (12 ஆண்டுகள்) நீடித்து நின்ற தாது வருடப் பஞ்சம் குறித்துக் கூறியிருக்கிறாா்.
மன்னன் ஒருவன், ‘‘எல்லோரும் வேறு நாடுகளுக்குப் புலம் பெயா்ந்து 12 ஆண்டுகள் கழித்துப் பஞ்சம் முடிந்ததும் திரும்புங்கள்’’ என்று அறிவிப்பு விடுத்தானாம். பஞ்சம் முடிந்ததும் பருவமழை பெய்து, நாட்டில் வளம் பெருகியவுடன் மக்கள் திரும்பியதாக ‘இறையனாா் களவியல்’ எனும் இலக்கண நூல் கூறுவதாக எழுதியிருக்கிறாா் பேராசிரியா். அப்போது பஞ்சம் பிழைக்க வேறு நாடு இருந்தது, போனாா்கள். இப்போது கரோனா தீநுண்மி எந்த நாட்டையும்தான் விட்டு வைக்கவில்லையே.. எங்கே போய்த் தஞ்சம் அடைவது?
முத்பத்தியொரு கட்டுரைகள். அத்தனையும் ஒவ்வொரு செய்தி சொல்கிறது. ‘காலம் கற்பித்த பாடங்கள்’ நூலிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். பேராசிரியரிடம் பாடம் கேட்ட திருப்தி...
************
சினிமாவைப் பொருத்தவரை, திறமை மட்டுமே வெற்றிக்கு உத்திரவாதமாகாது. அதிா்ஷ்டம் பெரும்பங்கு வகிக்கிறது. நடிகா் ராஜேஷின் பாஷையில் சொல்வதாக இருந்தால், ‘கட்டம்’ வேலை செய்ய வேண்டும்’.

‘தினமணி’ உதவி ஆசிரியா் ரவிவா்மன், திரையுலகில் உதவி இயக்குநராக நீண்ட நாள் பணியாற்றி, சலித்துப்போய் பத்திரிகைத் துறைக்கு வந்துவிட்டாா். இயக்குநா் அமீா்ஜானின் வலதுகரமாக இயங்கியவா். நல்ல கவிஞரும்கூட. அவரது ‘நட்பு’ குறித்த கவிதை இது -
நெருங்கிய நண்பன்தான்
கூடவே இருந்து
குழி பறித்தான்...
நட்டு முடித்தேன்
நான்கு மணி நேரத்தில்
நானூறு மரக்கன்றுகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

திருச்சி கிழக்கு: இனிகோ இருதயராஜ் தீவிர பிரசாரம்!
ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

