ஆறுதல் கூறல் அனைவருக்கும் எளிதே!

துன்பத்தில் ஆழ்ந்திருப்போரை ஆறுதல் வார்த்தைகளால் ஆற்றுவித்தல் மிகமிகத் தேவையானதாகும். ஆனால், சிலரின் பெரும் துன்பம் ஆறுதல் மொழிகளால் ஆற்ற முடியாததாக இருக்கும். 
ஆறுதல் கூறல் அனைவருக்கும் எளிதே!
Published on
Updated on
2 min read

துன்பத்தில் ஆழ்ந்திருப்போரை ஆறுதல் வார்த்தைகளால் ஆற்றுவித்தல் மிகமிகத் தேவையானதாகும். ஆனால், சிலரின் பெரும் துன்பம் ஆறுதல் மொழிகளால் ஆற்ற முடியாததாக இருக்கும். 

நற்றிணையில் 184 ஆவது பாடல் தேற்றத் தேற்றத் தேறாத தாயின் துன்பத்தை எடுத்துரைக்கிறது. காதலில் வெற்றியடைவது காதலர்களை மகிழ்வூட்டுவதே ஆகும். ஆனால், பெண்ணைப் பெற்ற தாய், தந்தையரின் மனம் படும்பாட்டை அவர்களையன்றி வேறு யாரறிவார்?  

அப்படி தாய் ஒருத்தி அடையும் துன்பத்தையே இப்பாடல் எடுத்துரைக்கிறது. "ஒரே மகளை உடையவள் நான். அந்தச் செல்ல மகள்  காளை ஒருவனோடு பாலை நிலத்தைக் கடந்து சென்றுவிட்டாள். சுற்றத்தார் சூழ்ந்து நின்று "தாங்கு நின் அவலம்' என்கிறீர்களே, ஏ அறிவுடையீரே! தாங்க முடிந்த அவலம் அல்லவே இது! நினைத்தால் உள்ளம் வேகிறது. என் கண்ணின் மணி நடுவே உள்ள பாவையே  நடந்து வருவதுபோல அல்லவா அவள் நடந்து வருவாள். 

வீட்டின் முன்னுள்ள நொச்சியைப் பார்த்து விம்முகிறேன். அதனடியில்தானே அவள் சிற்றில் கட்டி, மணலில் சிறுசோறு சமைத்து தோழியருடன் விளையாடினாள். தெற்றி - அதுதான் திண்ணை - அங்குதானே அவள் தன் தோழியருடன் கழங்கு,  பல்லாங்குழி என பல விளையாட்டுகளை விளையாடுவாள். இப்பொழுது நொச்சி, தெற்றியெல்லாம் இங்கேதான் இருக்கின்றன. அங்கே விளையாடித் திரிந்த என் மகள் எங்கே? என் கண்கள் தேடுகின்றன' - இவ்வாறு புலம்புகிறாள் பரிதாபத்திற்குரிய அந்தத் தாய். இப்பாடல் வாழ்க்கையின் மறுபக்கத்தையும் பார்க்கச் சொல்கிறது. 

மகளின் பக்கம் நின்று பார்க்குங்கால் காதல், காதலன், உடன்போக்கு, காதலன் வீட்டு வறுமை, வறுமையைத் தாங்கும் முன்னாள் செல்வக் குடிச் செல்வியின் செம்மை, கற்பின் திண்மை எனப்  பல பெருமிதங்களைக் காட்டுகிறது. 

வாழ்க்கை தலைவியுடன் நின்று போகிறதா? இல்லையே,  காதலனோடு இரவோடு இரவாக உடன்போக்கு செல்லும் அந்தத் தலைவிக்குத் தாய், தந்தை, அண்ணன், தம்பிகள் உண்டே? அவர்களின் நிலை என்ன? இதைத்தான் இப்பாடல் உணர்த்துகிறது. இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. 

நொச்சியையும் தெற்றியையும் பார்க்கும் போதெல்லாம் அந்தத் தாய்க்கு அங்கு விளையாடிய மகளின் நினைவு வந்து வந்து வேதனைப்படுத்துமே, அதை யாரால் ஓர்ந்து காணமுடியும்? ஓர்ந்து உணர்ந்து நாமும் உணரும்படியாகப் பாடியிருக்கிறார் புலவர். 

காதலும் அன்று போல்தான் இன்றும் உள்ளது.  தாய், தந்தையர் நிலையும் அன்று போல்தான் இன்றும். பெற்று வளர்த்துச் சீராட்டிப் பாராட்டிய பெற்றோர்தம் நிலையைக் காதல் வயப்படுவோர் கவனத்தில் கொள்ள வேண்டும். இளமையின் தாகத்தையும், இயற்கையின் பருவத் துடிப்பையும் பெற்றோரும் புரிந்து நடக்க வேண்டும். இளமை படுத்தும் பாட்டையும், முதுமை 
படும் பாட்டையும் இப்பாடல் தெள்ளிதின் உணர்த்துகிறது. 

"ஒரு மகள் உடையேன் மன்னே அவளும் 
செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்;
இனியே தாங்குநின் அவலம் என்றீர்; அதுமற்று 
யாங்கனம் ஒல்லுமோ? அறிவுடையீரே!
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணிவாழ் பாவை நடைகற் றன்னஎன்
அணியியற் குறுமகள் ஆடிய
மணியேர் நொச்சியும் தெற்றியும் கண்டே 
(நற்.184)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com