தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

இந்த வாரம் கலாரசிகன்

"கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர் 1990'. ஏனைய மலர்களுக்கும் இந்த மலருக்கும் ஒரு வேறுபாடு உண்டு. இது பவள விழா மலரோ, நூற்றாண்டு விழா மலரோ அல்ல. நினைவு மலர்.

News image
Updated On :8 ஜூலை 2021, 11:38 am

முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வெள்ளிவிழா மலருக்குக் கட்டுரை கேட்டிருந்தார்கள். அவர்கள் வேண்டுகோள் விடுத்த அத்தனை பேரும் கட்டுரை தந்துவிட்டதாகவும், எனது கட்டுரைக்காகத்தான் மலர் அச்சேறாமல் காத்திருப்பதாகவும் ரஹ்மத் பதிப்பகம் ரசாக் நான்கைந்து முறை நினைவுபடுத்தி விட்டார்.

வெள்ளிக்கிழமை ரசாக்கை அழைத்து, நான் அங்கே வந்து எழுத அனுமதி தர முடியுமா என்று கோரிக்கை வைத்தேன். 'எந்த நேரமானாலும் வாருங்கள், உங்களுக்காகக் காத்திருக்கிறோம்' என்று அவர் சொன்ன பிறகும் நான் தாமதிப்பது தவறுதானே...

ரஹ்மத் பதிப்பக அலுவலகத்தில் அமர்ந்து மலருக்கான கட்டுரை எழுதி முடித்தேன் என்பது இருக்கட்டும். அங்கே போனபோது, நீண்ட நாள்களாக நான் தேடிக்கொண்டிருந்த பொக்கிஷங்களில் ஒன்று அங்கே காணக் கிடைத்தது. அந்தப் பொக்கிஷத்தின் பெயர் - 'கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவு மலர் 1990'.

ஏனைய மலர்களுக்கும் இந்த மலருக்கும் ஒரு வேறுபாடு உண்டு. இது பவள விழா மலரோ, நூற்றாண்டு விழா மலரோ அல்ல. நினைவு மலர். "அறிஞர் அண்ணா பவள விழா மலர்' பார்த்ததால், அதைப் போல காயிதே மில்லத்துக்கும் ஒரு மலர் கொண்டுவரப்பட வேண்டும் என்ற வேட்கையால் மலர்ந்த மலர் இது. 

"காயிதே மில்லத்', 'கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்' என்று கேள்விப்படுகிறோமே தவிர, அவரது பெயர் என்ன என்பதோ, "காயிதே மில்லத்' என்றால் அதன் பொருள் என்ன என்பதோ இன்றைய தலைமுறை தமிழக முஸ்லிம் இளைஞர்களுக்குக்கூடத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் மியாகான் ராவுத்தரின் மகனாகப் பிறந்த முஹம்மது இஸ்மாயில் சாஹிப், இந்தியாவின் தேசியத் தலைவராக உயர்ந்த வரலாறு மகத்தானது.

சுதந்திரப் போராட்ட வீரராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி 1920-இல் நெல்லையில் நடந்த மாகாண காங்கிரஸ் மாநாட்டில் ராஜாஜியுடன் இணைந்து பூரண சுதந்திரம் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியவர் அவர். பிரிவினையைத் தொடர்ந்து, முகம்மது அலி ஜின்னாவின் வேண்டுகோளை ஏற்று பாகிஸ்தானில் காத்திருந்த பெரும் பதவிக்கு ஆசைப்படாமல், தாயகமான இந்தியாவிலேயே தங்கிவிட்ட தேசப் பற்றாளர் அவர்.

அன்றைய மதராஸ் மாகாணத்தில் அமைந்த ராஜாஜி தலைமையிலான அமைச்சரவைக்கு முதல் ஆதரவு வழங்கியவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான இஸ்மாயில் சாஹிப்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது, இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் வருங்காலத்தில் அது ஆபத்தை உருவாக்கக் கூடும் என்று எச்சரித்து, நாடாளுமன்றத்தில் முதல் எதிர்ப்புக் குரலை எழுப்பியவர் அவர்தான் என்பதும் இன்று யாருக்கும் தெரியாது. 

பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை நிலையத்தின் சார்பில் அமைந்த காயிதே மில்லத் நினைவு மலர்க் குழு,  இப்படியொரு நினைவு மலரைத் தொகுத்திருக்காவிட்டால், ஜனாப் இஸ்மாயில் சாஹிப்பின் பேராண்மை பதிவு செய்யப்படாமல் போயிருக்கும். பல அரிய தகவல்கள் கிடைக்காமல் இருந்திருக்கும். அதற்காக, மலர்க்குழு  தலைவர் ஹாஜி பி.எஸ்.எம். செய்யது அப்துல் காதருக்கும், செயலாளர் ஹாஜி எம். ஜமால் முஹம்மது சாஹிபுக்கும், தொகுப்பாசிரியர் ஏ.கே. ரியாசுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி, "காயிதே மில்லத்' முஹம்மது இஸ்மாயில் சாஹிபின் ஐம்பதாவது நினைவு நாள் வருகிறது. ரஹ்மத் பதிப்பகம் ஏன் ஒரு நினைவு மலரை வெளியிட்டு, பெரிய அளவில் விழா எடுக்கக்கூடாது?

விவரம் தெரியாதவர்களுக்காக - "காயிதே மில்லத்' என்றால்  தேசத்தின் தலைவர் என்று பொருள். தேசியத் தலைவரான ஜனாப் முஹம்மது இஸ்மாயில் சாஹிபுக்குப் பொருத்தமான அடைமொழிதான் என்பதில் சந்தேகம் இல்லை.

ரஹ்மத் பதிப்பகத்துக்குக் காரில் பயணிக்கும்போது, ஒரு வாரத்துக்கு முன்பு தோழர் ஜீவபாரதி அழைத்திருந்தது நினைவுக்கு வந்தது. என்னைச் சந்திக்க விழைவதாக அவர் தெரிவித்தபோது, நானே வந்து சந்திக்கிறேன் என்று கூறியிருந்தேன். அதனால், ஆழ்வார்பேட்டை, சிஐடி காலனியில் உள்ள ரஹ்மத் பதிப்பகத்துக்குப் போகும் வழியில் நந்தனம்,  டர்ன்புல்ஸ்  சாலையில் உள்ள அரசு வாடகைக் குடியிருப்பில் இருக்கும் ஜீவபாரதியைச் சந்திப்பது என்று முடிவெடுத்தேன். 

அவரைச் சந்தித்ததும், அவருடைய மனைவி  வழங்கிய சுவையான தேநீரை அருந்தியதும், நாங்கள் பல விஷயங்கள் குறித்துப் பேசியது இருக்கட்டும். சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அவரது 172-ஆவது படைப்பான "முப்பெரும் ஜீவநதிகள்...' என்கிற புத்தகத்தைத் தந்ததுதான் எல்லாவற்றையும்விடச் சிறப்பு. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். எண்பது பக்கங்களில் எண்ணற்ற தகவல்களை உள்ளடக்கிய கருவூலம் அந்தப் புத்தகம்.
மகாகவி பாரதி, தோழர் ஜீவா, மாவீரன் பகத்சிங் ஆகிய மூவர் குறித்து அவர் பதிவு செய்திருக்கும் செய்திகள் பல மெய்சிலிர்க்க வைக்கின்றன. அவர்கள் மூவரது சிந்தனை ஓட்டமும் ஒரே நேர்க்கோட்டில் இருந்தன என்று காரண காரியங்களுடன் எடுத்தியம்புகிறார் தோழர் ஜீவபாரதி.

காந்திஜி, ராஜாஜி, வ.உ.சி., சத்தியமூர்த்தி, திரு.வி.க., பெரியார் ஈ.வெ.ரா. மறைமலையடிகள் எல்லோரையும் சந்தித்திருக்கும் தோழர் ஜீவா, தான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மகாகவி பாரதியாரை நேரில் சந்தித்ததே இல்லை என்பது என்னவொரு வியப்பு? மூச்சுக்கு மூச்சு, பேச்சுக்குப் பேச்சு பாரதி புகழ் பாடிய ஜீவா, பாரதியைச் சந்திக்காமல் இருந்துவிட்டாரே என்று அனுதாபப்பட வைக்கிறது தோழர் ஜீவபாரதியின் பதிவு.

காந்தியடிகளை "தேசப்பிதா' என்று  முதன்முதலில் அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அவருக்கு "மகாத்மா' என்கிற பட்டம் சூட்டி மகிழ்ந்தது யார் தெரியுமா? 1918-இல் சென்னையில் இருந்து வெளியான ஒரு நூலின் தலைப்பு "மகாத்மா காந்தி'. 1921 செப்டம்பர் 12 அன்று எழுதிய கவிதைக்கு பாரதியார் "மகாத்மா காந்தி பஞ்சகம்' என்று பெயரிட்டிருக்கிறார். அதற்குப் பிறகுதான் தாகூர் காந்தியடிகளை "மகாத்மா' என்று சிறப்பித்து அழைக்கிறார். இதுவும் அந்தப் புத்தகம் தந்த தகவல்.

சொந்த வீடு இல்லாத சாதனை எழுத்தாளர்களுக்கு வீடு வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அந்தப் பட்டியலில் 172 அற்புதப் படைப்புகளைத் தமிழுக்குத் தந்துவிட்டு, இப்போதும்  வாடகைக் குடியிருப்பில் வாழ்ந்துவரும் தோழர் ஜீவபாரதியின் பெயர் இடம்பெறும் என்று நம்புகிறேன். இடம்பெற வேண்டும் என்று விழைகிறேன்.

கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ் எழுதிய "பொற்காலம்' கவிதைத் தொகுப்பு புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது. இவரது கவிதை குறித்து நான் முன்பே பதிவு செய்திருக்கிறேன். இது இவரது ஏழாவது தொகுப்பு.

அதிலிருந்து ஒரு ஹைக்கூ...
ஐந்து உழைக்கிறது
ஆறு பிழைக்கிறது
கிளி ஜோசியம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.