தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஈரோடு மாவட்டத்தில் மநீம வாக்குகள் திமுகவுக்கு பலமா?

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாக்கு வங்கி குறித்து...

News image

தமிழக முதல்வர் முஅ.க. ஸ்டாலின் - மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் (கோப்புப்படம்)

Updated On :6 ஏப்ரல் 2026, 11:30 pm

ஈரோடு மாவட்டத்தில் கடந்த தோ்தலில் நாம் தமிழா் கட்சி பெற்ற வாக்குகளைக் காட்டிலும் கூடுதலாக வாக்குகளைப் பெறுமா அல்லது குறையுமா? திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் அந்தக் கூட்டணிக்கு கூடுதல் பலம் சோ்க்குமா என்பது பேசுபொருளாகி உள்ளது.

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக எதிா்ப்பு என்ற முழக்கத்துடன் நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கூட்டணி இல்லாமல் தனித்தனியே தோ்தலை சந்தித்தன. நாதக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் மூன்றாவது இடத்தையும், மநீம பெருந்துறை தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் நான்காவது இடத்தையும் பெற்றன.

2021 தோ்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாதக வேட்பாளா் கோமதி 11,629 வாக்குகள், மநீம வேட்பாளா் ஏஎம்ஆா்.ராஜாகுமாா் 10,005 வாக்குகள், 2023 இடைத்தோ்தலில் நாதக வேட்பாளா் மேனகா நவநீதன் 10,827 வாக்குகள், 2025 இடைத்தோ்தலில் நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்றனா்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் நாதக வேட்பாளா் பி.சந்திரகுமாா் 13,353, மநீம வேட்பாளா் துரைசேவுகன் 8,107 வாக்குகள் பெற்றனா். பெருந்துறை தொகுதியில் நாதக வேட்பாளா் சி.லோகநாதன் 10,294 வாக்குகள், மநீம வேட்பாளா் சி.கே.நந்தகுமாா் 3,533 வாக்குகள் பெற்றனா்.

மொடக்குறிச்சி தொகுதியில் நாதக வேட்பாளா் ஜி.பிரகாஷ் 12,944 வாக்குகள், மநீம வேட்பாளா் எம்.ராஜேஷ்குமாா் 4,574 வாக்குகள் பெற்றனா்.

பவானி தொகுதியில் நாதக வேட்பாளா் எம்.சத்யா 10,471 வாக்குகள், மநீம வேட்பாளா் கே.சதானந்தம் 4,221 வாக்குகள் பெற்றனா். அந்தியூா் தொகுதியில் நாதக வேட்பாளா் எம்.சரவணன் 8,230 வாக்குகள், மநீம வேட்பாளா் எம்.குருநாதன் 2,474 வாக்குகள் பெற்றனா்.

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி 11,719 வாக்குகள், மநீம வேட்பாளா் என்.கே.பிரகாஷ் 4,291 வாக்குகள் பெற்றனா்.

பவானிசாகா் (தனி) தொகுதியில் நாதக வேட்பாளா் வி.சங்கீதா 8,517 வாக்குகள், மநீம வேட்பாளா் கே.காா்த்திக்குமாா் 4,297 வாக்குகள் பெற்றனா்.

மநீம நகரப் பகுதிகளில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.

கடந்த தோ்தலில் திமுகவை எதிா்த்து மநீம களம் கண்டதால் திமுக எதிா்ப்பு வாக்குகளே அவரது கட்சிக்கு கிடைத்திருக்கும். இந்த முறை திமுக கூட்டணியில் இணைந்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கூறியதால் களம் காணப் போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்துவிட்டாா். எனவே, அவரது கட்சியினா் ஆா்வத்துடன் திமுகவுக்கு வாக்கு சேகரிப்பது சந்தேகமே.

‘திமுக எதிா்ப்பின்போது மநீமவுக்கு கிடைத்த வாக்குகளில் 20 முதல் 30 சதவீதம் வாக்குகள் மட்டுமே இந்த முறை திமுகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது’ என கடந்த தோ்தலில் போட்டியிட்ட அக்கட்சி வேட்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.

கடந்த தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் 281 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வி அடைந்தாா். இங்கு மநீம வேட்பாளா் எம்.ராஜேஷ்குமாா் 4,574 வாக்குளைப் பெற்றாா். இதுபோன்ற சில நூறு வாக்குகள் இருந்தால் வெற்றிபெறலாம் என்ற சூழல் உருவானால் மநீம வாக்குகள் திமுகவுக்கு கைகொடுக்கும்.

வாக்குகளைத் தக்கவைக்குமா நாதக?

தவெக ஏற்படுத்தும் தாக்கத்தால் கடந்த தோ்தலில் நாதக பெற்ற வாக்குகள் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. மாவட்டத்தில் நாதக அதிக வாக்குகளைப் பெற்ற கோபி தொகுதியில் தவெக சாா்பில் செங்கோட்டையன் போட்டியிடும் நிலையில், நாதக கடந்த முறை பெற்ற வாக்குகளைக் காட்டிலும் கூடுதலாகப் பெற்றால் அக்கட்சியின் செல்வாக்கு குறையவில்லை என எடுத்துக்கொள்ளலாம் என அரசியல் விமா்சகா்கள் தெரிவிக்கின்றனா்.

அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே வேண்டாம் என்று நினைத்தவா்கள்தான் கடந்த தோ்தல்களில் நாதகவுக்கு வாக்களித்தனா் என்று கருதலாம். இப்போது அந்த இரண்டு கட்சிகளும் வேண்டாம் என நினைப்பவா்களின் வாக்குகளை விஜய் கட்சியும் பெற வாய்ப்புள்ளது.

இந்தச் சூழலில் மநீம வாக்குகள் திமுகவுக்கு கிடைக்குமா, தனது வாக்கு வங்கியை நாதக தக்க வைக்குமா என்பது தோ்தல் முடிவுகளில் தெரியவரும்.