இந்த வாரம் கலாரசிகன் - (20-02-2022)

இந்த வாரம் கலாரசிகன் - (20-02-2022)

பதிப்பகத்துறை பல மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. இணையம் வந்த பிறகு, அதன் போக்கே மாறிவிட்டது எனலாம்.


பதிப்பகத்துறை பல மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. இணையம் வந்த பிறகு, அதன் போக்கே மாறிவிட்டது எனலாம். இணைய நூல்கள் வந்துவிட்டன என்பது மட்டுமல்ல, அச்சிட்ட புத்தகங்களை இணைய வழியில் படிக்கும் போக்கும் அதிகரித்திருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் சென்னையில் 45-ஆவது புத்தகக் காட்சி பல தடைகளைக் கடந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்கள் வரிசையை வெளிக்கொணர முற்பட்டிருக்கிறது முல்லைப் பதிப்பகம். சாகித்திய அகாதெமி விருது பெற்ற கி.வா.ஜகந்நாதனின் "வீரர் உலகம்'(1967), பேராசிரியர் அ.சீனிவாச ராகவனின் "வெள்ளைப் பறவை' (1968) பாவேந்தர் பாரதிதாசனின் "பிசிராந்தையார்' நாடகம் (1969) வரிசையில் க.நா.சுப்பிரமணியத்துக்கு 1986-ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றுக் கொடுத்த அவரது "இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்' என்கிற இலக்கிய வட்டக் கட்டுரைகளையும் புத்தகமாக வெளிக்கொணர்ந்திருக்கிறது.

க.நா.சு. நடத்திய "இலக்கிய வட்டம்' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் அவை. அந்தக் கட்டுரைகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவரால் தொகுக்கப்பட்டு, புத்தக வடிவம் பெற்றன. அதற்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது என்றால், அந்தக் கட்டுரைகளின் தரம் குறித்தும், வீச்சு குறித்தும் விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை.

26 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு "இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்'. அதில் க.நா.சு. ஆடியிருப்பது விமர்சனச் சிலம்பம். அவரது விமர்சனப் பார்வை 360 டிகிரி சுற்றிச் சுழன்று தொட்டுக் காட்டும் பரிமாணங்கள் பல. விமர்சகனும், வாசகனும் புரிந்துகொள்ள வேண்டியவை இன்னின்ன என்பதை அவர் ஆங்காங்கே சொல்லிச் செல்லும் விதம்தான் விருதுக்கு இந்தப் புத்தகத்தை உயர்த்தியிருக்கிறது.

"விமர்சனத்தின் நோக்கம்' என்றொரு கட்டுரை. அதில் க.நா.சு. சொல்கிறார் -
""இலக்கிய விமரிசனத்தின் பயன் ஒரு நூலை அணுகி நுணுகி அலசி அதன் அம்சங்களை அறிந்து கொள்வது அல்ல. அந்த நூலை சரித்திரத்தின் பார்வையிலே, அதன் இடத்தில் வைத்துக் காணவும், அந்த நூலை அனுபவிக்கவும் உதவ வேண்டும். இந்த இரண்டுமே முக்கியமான அடிப்படை விமரிசன நோக்கங்கள்.

விமரிசகன் ஆழ்ந்தும் படித்திருக்க வேண்டும் - பரந்தும் படித்திருக்க வேண்டும். விமரிசனத்தில் மிகவும் பயனுள்ளது என்று சொல்லக் கூடியது, "நான் படித்து இதை அனுபவித்தேன் - நீங்களும் படித்து அனுபவியுங்கள்' என்று சொல்வதுதான்'' எப்போதோ க.நா.சு. எழுதிய கட்டுரைகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தக வடிவம் பெற்றதுபோல, எப்போதோ படித்த புத்தகத்தைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாசிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. முல்லைப் பதிப்பகம் முன்னெடுத்திருக்கும் இந்த நல்ல முயற்சிக்குப் பாராட்டுகள்.

---------------------------------------------------

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் ஆலோசகர் அப்பண்ணசாமி எங்கள் நிருபர் கோபி கிருஷ்ணா மூலம் இரண்டு புத்தகங்களை அனுப்பித் தந்திருந்தார். "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி. பிறந்த 150-ஆவது ஆண்டையொட்டி தமிழ்நாடு அரசு சிறப்பு வெளியீடாகக் கொணர்ந்திருக்கும் புத்தகங்கள் அவை.

சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் வீ. அரசை பதிப்பாசிரியராகக் கொண்டு தொகுக்கப்பட்ட "வ.உ.சி. பன்னூல் திரட்டு' முதல் தொகுதி. சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் இரா.குமாரவேலனை தொகுப்பாசிரியராகக் கொண்டு தொகுக்கப்பட்ட வ.உ.சிதம்பரனாரின் "திருக்குறள் உரை' இரண்டாவது தொகுதி.

வ.உ.சி. பன்னூல் திரட்டு, அவரது அனைத்துப் படைப்புகளையும் உள்ளடக்கியது. வ.உ.சி. தனது திருக்குறள் உரையை வெளிக்கொணர எதிர்கொண்ட கஷ்டங்களும், இடர்ப்பாடுகளும் சொல்லி மாளாது. அவர் மறைந்து ஏறத்தாழ 85 ஆண்டுகளுக்குப் பிறகு (வ.உ.சி.1936-இல் சிவபதம் எய்தினார்) நேர்த்தியான தொகுப்பு வெளிக்கொணரப்பட்டிருப்பது, அவரது 150-ஆவது பிறந்த நாளில் செய்யப்பட்டிருக்கும் மெய் அஞ்சலி. இந்தத் தொகுப்புகள் இந்தியா விடுதலை பெற்றவுடன் அமைந்த ஆட்சியில் வெளிக்கொணரப்பட்டிருக்க வேண்டும். "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யும், "கப்பலோட்டிய தமிழன்' திரைப்படமும் இல்லாமல் போயிருந்தால் வ.உ.சி.யின் தியாகம் பரவலாகத் தெரியாமல் போயிருக்கக்கூடும்.

கடைசி வரை தேசியவாதியாகத் திகழ்ந்த வ.உ.சி.யின் நினைவைப் போற்றும் வகையில், திராவிட இயக்கத்தைச் சார்ந்த அரசு, அவரது எழுத்துகளைத் திரட்டித் தொகுத்துத் தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது.

 ---------------------------------------------------


இறைச் சித்தம் என்பதில் நான் அதீத நம்பிக்கை உள்ளவன். என்னைப் போலவே என்னுடைய நண்பர் சிங்கப்பூர் எம்.ஏ.முஸ்தபாவும். சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி. காலனி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, கவிக்கோ மன்றத்தின் முன்னால் முஸ்தபாவின் கார் நின்று கொண்டிருந்தது. அவரை சந்திக்கச் சென்றேன்.

நான் போய் அமர்ந்த சில நிமிடங்களில் அலுவலக ஊழியர் ஒருவர், அச்சுக் கூடத்திலிருந்து கொண்டுவந்த புத்தகமொன்றின் பிரதிகளை எடுத்து வந்தார். முஸ்தபாவின் ரஹ்மத் பதிப்பகம் வெளிக்கொணர இருக்கும் திருக்குர்ஆன்தான் அவை. கவிக்கோ அப்துர் ரஹ்மானின் தமிழாக்க மேற்பார்வையில் தேர்ந்த இஸ்லாமிய வல்லுநர் குழுவால், அனைவருக்கும் புரியும் விதத்தில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பதிப்பு அது.

இதில் இறைச்சித்தம் எங்கிருந்து வந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? அச்சிலிருந்து கொண்டுவரப்படும் முதல் பிரதியைப் பார்க்க அதன் மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் காத்திருந்து, அது தாமதமானதால், மாலையில் வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டனர். நான் உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் அச்சகத்திலிருந்து பிரதிகள் வருகின்றன. அதன் முதல் பிரதியை முஸ்தபாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைக்கிறது. இது இறைச்சித்தம் அல்லாமல் வேறென்ன?

இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் திருக்குர்ஆன் மொழியாக்கம் இல்லை என்கிற குறை இனிமேல் இருக்காது.

---------------------------------------------------

உருதுக் கவிஞரும், ஹிந்தி திரைப்படப் பாடலாசிரியருமான மஜ்ரூ சுல்தான்புரி, பழைய திரைப்படமொன்றில் எழுதியிருக்கும் பாடலில், "ஆறறிவுடன் பிறந்தும் மனிதனுக்கு அவனது பிறவிக் காரணத்தை (ஜன்ம ரஹஸ்யம்) கண்டு பிடிக்க முடியவில்லை' என்று எழுதியிருப்பார். அதை நினைவுபடுத்துவதாக அமைகிறது, கவிஞர் ஆரிசன் எழுதியிருக்கும் இந்த ஹைக்கூ வரிகள் -
நீச்சல் தெரிந்தும் கரைசேர முடியவில்லை மீன்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com