இளங்கோவடிகளின் "அதிகாரம்' - அறியப்பெறாத அரும்பொருள்!

இளங்கோவடிகளின் "அதிகாரம்' - அறியப்பெறாத அரும்பொருள்!

இக்காலத்தில் ஒருவர் தமது பதவியாலோ  தம் தகுதியாலோ முடிவுகளை எடுப்பதற்கும் ஆணைகளைப் பிறப்பிப்பதற்குமான உரிமைகளைப் பெற்றிருப்பதை அதிகாரம் (பவர்) என்று அழைக்கும் வழக்கமுள்ளது.

இக்காலத்தில் ஒருவர் தமது பதவியாலோ  தம் தகுதியாலோ முடிவுகளை எடுப்பதற்கும் ஆணைகளைப் பிறப்பிப்பதற்குமான உரிமைகளைப் பெற்றிருப்பதை அதிகாரம் (பவர்) என்று அழைக்கும் வழக்கமுள்ளது. ஆனால் அதிகாரம் என்ற வடசொல், அருமையான பொருண்மைகளை உடைய பலபொருள் ஒருசொல்லாக வழங்கப்பெற்றதைப் பழந்தமிழ் அற, இலக்கண நூல்களும், அருந்தமிழின் முதன்மைக் காப்பியமான சிலப்பதிகாரமும் உணர்த்துகின்றன. அதிகாரம் என்ற இச்சொல்லின் அரும்பெரும் பொருண்மை ஒன்றை மனத்திற்கொண்டே இளங்கோவடிகள் தம் காப்பியத் தலைப்பைச் சிலப்பதிகாரம் என அமைத்துள்ள செய்தி தமிழுலகம் அறியாததும் அறிய வேண்டியதுமான அருமையான செய்தியாகும்.

பழந்தமிழில் கிடைத்துள்ள முழுமுதல் இலக்கணநூலான தொல்காப்பியம் முதலாக அவிநயம், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல், முத்துவீரியம் எனப் பல இலக்கண நூல்களின் கூறுகளை "அதிகாரம்' என்றே இலக்கணிகள் வழங்கியுள்ளனர். இலக்கண நூல்களில் மட்டுமின்றித் தமிழின் முதல் அறநூலான திருக்குறளின் 1330 குறட்பாக்களில், பத்துக் குறள்கள் அடங்கிய 133 பகுப்புகளுக்கும் அதிகாரம் என்றே பெயர். இவ்வாறு பழந்தமிழ் அற நூல்களும், இலக்கண நூல்களுமே அதிகாரம் என்ற சொல்லை நூற்பகுப்புச் சொல்லாகப் பயன்படுத்தியுள்ளன. 

"அதிகாரம்' எனும் சொல்லை நூற்கூறுபாடாகப் பயன்படுத்தியுள்ள தொல்காப்பியர், தொல்காப்பிய மரபியலில் நூலாக்கத்திற்கான முப்பத்தியிரண்டு உத்திகளைக் கூறும் நூற்பாவில்,  "ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின் /நுதலியது அறிதல், அதிகார முறையே' என இரண்டாவது உத்தியாக "அதிகார முறை' எனும் உத்தியைக் கூறியுள்ளார்.

இவ்வுத்திக்குப் பேராசிரியர் உரையில், "அதிகாரமென்ற பொருண்மையென்னையெனின், முறைமையெனவும், இடமெனவும், கிழமையெனவுங் கூறினமையின்..' எனப் பொருளுரைக்கப்பட்டுள்ளது. அதாவது, அதிகாரம் எனும் சொல்லின் முதன்மைப் பொருளாக முறைமை என்ற சொல்லைக் குறிப்பிட்டுள்ளார். அதிகாரம் எனும் சொல்லுக்குப் பதினான்கு பொருண்மைகளை உரைக்கும் "செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி', அப்பொருண்மைகளுள் ஒன்றாக முறைமை, "ஆர்டர், ரெகுலேஷன்' எனத் தெரிவித்துள்ளது. 

மேலும் முறைமை எனும் இப்பொருண்மைக்கான மேற்கோளாக, மேலே காட்டப்பெற்ற, தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியரின் மரபியல் உரைப்பகுதியையே எடுத்தாண்டுள்ளது. இம்முறைமை எனும் சொல்லுக்கு, ஒழுங்கு, கட்டளை எனும் சொற்களைப் பொருண்மைகளாக அகராதிகள் காட்டியுள்ளன. இயேசு, புத்தர் ஆகியோரின் அறவுரைகளைப் பத்துக் கட்டளைகள் என வழங்குவதை ஈண்டு எண்ணிப்பார்க்கலாம். முறைமை எனும் தமிழ்ச்சொல்லுக்கு நிகரான ஆங்கிலச்சொல்லான "ஆர்டர்' என்ற சொல்லுக்கும் வரிசைமுறை, கட்டளை என்ற இருபொருளும் உண்டென்பது எண்ணத்தக்கது. 

மேலும் முறைமை என்ற சொல்லைத் தமிழில் மரபாக உள்ள ஒழுங்குமுறையினைக் குறிக்கவும் பயன்படுத்துவதுண்டு. பேச்சுவழக்கில், "எதனையும் முறைப்படிச் செய்யவேண்டும்' எனக் கூறுவதைக் கொள்ளலாம். பழந்தமிழ் அறநூல்களில் "முறை' என்ற சொல்லை, விதி அல்லது நீதி எனும் வடசொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லாகப் பயன்படுத்தியுள்ளனர். 

திருக்குறளில் அரசுக்குத் தேவையான பண்புகளை வலியுறுத்தும்  இறைமாட்சி அதிகாரத்தில் (388)  முறைமை என்ற சொல்லைக் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தில், ஊர்சூழ்வரியில் தன்னைச் சூழ்ந்து நின்ற ஆயர்குலப் பெண்டிரை நோக்கிக் கண்ணகி, முறையில் அரசன் தன் ஊரிருந்து வாழும்
நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள்! 

என விளிக்குமிடத்தும்(3,4), வழக்குரை காதையில், கையில் ஒற்றைச் சிலம்புடனும் சினத்துடனும், பாண்டிய மன்னனின் அரண்மனைக்குச் சென்று, "இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே' (25,26) என வாயிலோனிடம் உரையாடும்போதும் முறை என்ற சொல் நீதி எனும் பொருளிலேயே ஆளப்பெற்றுள்ளது. மேலும் கட்டுரை காதையில், மதுராபதித் தெய்வத்தால் கூறப்பெறும் முற்பிறப்பு வரலாற்றில் கொலைக்களப்பட்ட வணிகன் சங்கமனின் மனைவி நீலி, மன்றினும் மறுகினும் சென்று,
"அரசர் முறையோ? பரதர் முறையோ?
ஊரீர் முறையோ? சேரியீர் முறையோ?'
எனப் புலம்புமிடத்தும் (160,161), நீதி எனும் பொருளில், "முறை' என்ற சொல்லைப் பயன்படுத்துவதை அறியமுடிகிறது. எனவே திருவள்ளுவரும், இளங்கோவடிகளும், நீதி எனும் வடசொல்லுக்கான நேர்த் தமிழ்ச்சொல்லாக, முறை என்ற சொல்லைக் கையாண்டுள்ளமையை அறியமுடிகிறது. எனவே ஒரு மொழியின் ஒழுங்கியல்பு மாறாது காத்து நிற்கும் முறைகளைக் கூறும் இலக்கணநூலின் கூறுகளுக்கும், மனித வாழ்வுக்கான நெறிமுறைகளைக் கூறும் அறநூல்களின் பகுப்புகளுக்கும், முறைமை எனும் பொருளுடைய அதிகாரம் எனும் பெயரைத் தந்துள்ளனர்.

பெருங்காப்பியத்திற்கே உரிய அறம், பொருள் இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப்பொருட்களும் இடம்பெற்றிருப்பினும், சிலப்பதிகாரத்தில் அறமே பெரிதும் பேசப்பெற்றுள்ளது. ஆனால் அறம் பேசும் தன் காப்பியத்திற்கு, இளங்கோவடிகள், அதிகாரம் எனும் சொல்லை நூற்கூறுபாட்டைக் குறிப்பதற்குப் பயன்படுத்தாது, "சிலப்பதிகாரம்' எனத் தலைப்பாகப் பெயரிட்டமைக்கான காரணம் சுவையானது. 
சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடுகளுள், ஊழ்வினைக் கோட்பாட்டை வலியுறுத்துவதே இளங்கோவடிகளின் நோக்கம் என்பதனைக் காப்பியப்போக்கு உணர்த்துகிறது. அதனால்தான் சிலம்பின் காரணமாகவே நிகழ்ந்த ஊழ்வினைகளைக் கூறும் தம் காப்பியத்திற்குச் "சிலப்பதிகாரம்' எனத் தலைப்பிட்டுள்ளார். ஏனெனில் ஊழ் எனும் சொல்லுக்கு நிகரான பொருட்செறிவுடைய ஒரே சொல் "அதிகாரம்' என்பதே ஆகும். இதனை "திவாகர நிகண்டு' தெளிவாக எடுத்தியம்பியுள்ளது. அந்நூற்பாக்கள் வருமாறு: 
மாலை, பெற்றி, தன்மை, மரபு
பால், ஊழ், பான்மை, பண்பு, முறை, உழுவல் 
தகவு, தகை, இயல்வு, குணம், நுனித்தல், உரிமை
நிலமை, நீர்மை, பரிசு, கிழமை
விதி, அதிகாரம் என ஒருபொருள் ஆகும் (1549)
ஊழ்என் கிளவி இவை முழுதும் ஆகும் (1550)  
இவ்வாறு "அதிகாரம்' என்ற சொல்லை இருபத்தியொரு குணங்கள் அடங்கிய பலகுணப் பெயராகக் கூறும் திவாகர நிகண்டு, அடுத்த நூற்பாவிலேயே அந்தப் பொருண்மைகளுடன் "அதிகாரம்' என்ற சொல்லையும் சேர்த்து இருபத்தியிரண்டு பொருண்மைகளுக்கும் இணையான ஒரே சொல் "ஊழ்' என்கிறது. "ஊழ்' எனும் சொல்லுக்குரிய பல பொருள்களை உணர்த்தும் ஒரேசொல் "அதிகாரம்' என்பதால் இளங்கோவடிகளால் காப்பியத் தலைப்பில் இடம்பெற்றது. எனவே, சிலப்பதிகாரம் எனும் தலைப்பிலுள்ள "அதிகாரம்' என்ற சொல், ஊழ்வினைக் கோட்பாட்டை உணர்த்தும் அரும்பொருட்சொல் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com