இந்த வாரம் கலாரசிகன் - (20-03-2022)

கோவையில் கடந்த ஞாயிறன்று, விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சியின் முத்து விழா நிகழ்ச்சி.
இந்த வாரம் கலாரசிகன் - (20-03-2022)
Published on
Updated on
3 min read


கோவையில் கடந்த ஞாயிறன்று, விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சியின் முத்து விழா நிகழ்ச்சி. நீதிபதி அரங்க.மகாதேவன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முத்துவிழா மலரை வெளியிடுகிறார் என்கிற அழைப்பிதழைப் பார்த்த பிறகு சென்னையில் இருப்புக் கொள்ளவில்லை.  நிஜமாகப் பார்க்கப்போனால், சென்னையில் கோலாகலமாக "பபாசி' புத்தகப் பதிப்பாளர்களால் நடத்தப்பட்டிருக்க வேண்டிய நிகழ்ச்சி அது.

பதிப்பாளர்களாக இருப்பவர்கள் படிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால், தாங்கள் பதிப்பிக்கும் புத்தகங்களைத் தவிர இதர புத்தகங்களைப் படிப்பவர்கள் குறைவு. அதற்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. அப்படியே படிப்பவர்களாக இருந்தாலும், ரசிப்பவர்களாக இருக்கமாட்டார்கள். வேலாயுதம் அண்ணாச்சி படித்து ரசிப்பவர் மட்டுமல்ல, தான் படித்து ரசித்ததை மற்றவர்களுக்குப் பரிந்துரைத்து மகிழ்பவரும் என்பதுதான் அவரிடம் நான் காணும் தனிச்சிறப்பு.

கோவைக்கு நான் சென்றால், அவருடன்  உரையாடாமல் திரும்புவதில்லை. நான் அவரை சந்திக்கும் போதெல்லாம், என்னைப் படிக்கச் சொல்லி, பரிந்துரைக்க அவரிடம் அரை டஜன் புத்தகங்களின் பட்டியல்  இருக்கும். குறிப்பிட்ட எழுத்தாளர்கள் குறித்து சிலாகித்துச் சொல்ல ஏதாவது படைப்பு இருக்கும்.

முத்துவிழா மலரில் நடிகர் சிவகுமார் தனது கட்டுரைக்குத் தலைப்புச் சூட்டியிருப்பதுபோல, விஜயா பதிப்பகம் வேலாயுதம் வெறும் பதிப்பாளர் மட்டுமல்ல, "புத்தகக் காதலர்களின் வேடந்தாங்கல்'. பதிப்புத் துறையில் அவர் புகுத்திய புதுமைகளைவிட, புத்தகங்களை விற்பதிலும், எழுத்தாளர்களை ஊக்குவித்து அறிமுகப்படுத்துவதிலும் அவர் செய்திருக்கும் அற்புதங்கள் பல.

பேருந்து நிலையங்களில் புத்தகக் கடைகள் நடத்த முன்னுரிமை அனுமதி உண்டு என்பதை உணர்ந்து செயல்படுத்திப் பலரை வாசிப்புப் பழக்கத்துக்கு ஈர்த்த அவரது செயல்பாடு ஒன்று போதும், அவருக்குக் "கலைமாமணி' விருது வழங்கி கெளரவிப்பதற்கு. ஆமாம், தெரியாமல்தான் கேட்கிறேன், அவருக்கு ஏன் இன்னும் "கலைமாமணி' விருது வழங்கப்படவில்லை?

"தினமணி' நாளிதழின் மணிவிழா வாசகர்களின் பட்டியல் தயாரித்தால் அதில் அவரது பெயர் நிச்சயம்  இடம்பெறும்.  "தினமணி'யில் வெளிவரும் கட்டுரைகள் பற்றியும், கட்டுரையாளர்கள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அவரிடம்  பேசிக் கொண்டிருந்தால் போதும். 

போட்டி, பொறாமைகள் மிக அதிகமாக நிறைந்த துறை இருக்குமானால் அவை எழுத்துத் துறையும், பதிப்புத் துறையும்தான். அதில் அனைவருக்கும் இனியவராக ஒருவரால் வலம்வர முடிந்திருக்கிறது என்பதிலிருந்தே "விஜயா' வேலாயுதம் என்கிற பண்பாளரை நாம் தெரிந்து கொள்ளலாம். அதற்குக் காரணம் தேடி நாம் அலையத் தேவையில்லை. அடிப்படையில் அவர் நல்ல மனிதர். "மனத்துக்கண் மாசிலன் ஆதல்' என்பது குறள். வேலாயுதம் அண்ணாச்சி அதன் பொருள்.

எழுத்தாளர் என்னதான் சிறப்பானவராக இருந்தாலும், அவரை வெளியுலகுக்கு அடையாளம் காட்ட ஒரு நல்ல பதிப்பாளர் தேவைப்படுகிறார். பிரபலமான பிறகு தன்னை அடையாளம் கண்டு பிரபலப்படுத்திய பதிப்பாளர்களைப் பெரும்பாலான படைப்பாளர்கள் மறந்துவிடுகிறார்கள் என்றாலும், வேலாயுதம் அண்ணாச்சி போன்ற சில பதிப்பாளர்கள் அதற்காக சற்றும்  மன வருத்தம் அடைவதில்லை. "கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே' என்கிற  கீதாச்சாரியனின் வேதவாக்கின் அர்த்தம் தெரியாதவர்கள், புத்தக மனிதர் மு.வேலாயுதம் முத்துவிழா மலரில் வெளியாகியிருக்கும் கட்டுரைகளைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஆயிரம் பிறை கண்ட நல்ல மனிதர் வேலாயுதம் அண்ணாச்சியின் முத்துவிழா பாராட்டுக் கூட்டத்தில், அவரால் நேசிக்கப்படும் பல நூறு பேரில் ஒருவனாகக் கலந்துகொண்டதில் எனக்கு ஏற்பட்ட நிறைவை எழுத்தில் வடிக்க வார்த்தைகள் இல்லை.

-------------------------------------------------------

"சாவி' வார இதழில் நான் உதவி ஆசிரியராக இருந்தபோது, ஒரு நாள் ஆசிரியர் "சாவி' சார் அழைத்தார். அவருடைய மகன் "பாச்சா' என்கிற பாலச்சந்திரனும், எழுத்தாளர் ராணி மைந்தனும் அவருடன் இருந்தனர். "சாவி' சாரின் கையில் "ரீடர்ஸ் டைஜஸ்ட்' ஆங்கில மாத இதழ் இருந்தது. அதுபோல  ஓர் இதழைத் தமிழில் வெளிக்கொணர வேண்டும் என்கிற தனது ஆவலை வெளிப்படுத்தினார் ஆசிரியர்.

"சாவி' சார் ஏதாவது முடிவெடுத்துவிட்டால், அதை உடனடியாக நடைமுறைப்படுத்தியாக வேண்டும். "கல்கண்டு' இதழ்போல தகவல் தொகுப்பாக, சாவி குழுமத்திலிருந்து அப்போது "பூவாளி' என்கிற வார இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. அந்த இதழை, மாத இதழாக்கி, "ரீடர்ஸ் டைஜஸ்ட்' போல தரமான கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், குறுநாவல், ஏராளமான தகவல்கள், துணுக்குகள், ஜோக்குகள் என்று வெளிக்கொணர்வது என முடிவு செய்தோம். அதில் பெரும் பங்கு வகித்தவர் ராணி மைந்தன்தான்.

தொடர்ந்து அந்த இதழை  நடத்த முடியாமல் "சாவி' சார் நிறுத்திவிட்டார். "சாவி' சாரைப் போலவே, "ரீடர்ஸ் டைஜஸ்ட்' போல தமிழிலும் ஒரு மாத இதழ் வெளிவர வேண்டும் என்கிற ஆசை அப்போது முதலே எனக்கும் உண்டு.

பதிப்பாளர் பா. உதயக்கண்ணனால், எஸ்.சங்கரநாராயணனை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டிருக்கும் "இருவாட்சி' - இலக்கியத் துறைமுகம் என்கிற பருவ இதழைப் படித்தபோது, எனக்கு "பூவாளி' இதழின் நினைவு வந்தது.  ஏறக்குறைய அதன் அம்சங்கள் பல இதிலும் இருக்கின்றன.

தரமான கட்டுரைகள், கதைகள், கவிதைகள், நூல் விமர்சனம் என்று திருப்தியான வாசிப்பு. சென்ற ஆண்டு நோபல் விருது பெற்ற எழுத்தாளர் அப்துல்ரசாக் கர்னாவின்  நாவலில் இருந்து ஒரு பகுதி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது.  ஜி.சிவக்குமாரின் "ஒரு பறவை ஆர்வலரின் பயணக் குறிப்புகள்',  சித்ரா பாலசுப்பிரமணியனின் "காந்தி வாசித்த புத்தகங்கள்', லா.ச.ரா.  சப்தரிஷியின் "சினிமாப் பருவம்'  ஆகிய மூன்று கட்டுரைகளையும் நான் அடையாளம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறேன் - தேவைப்படலாம் என்பதற்காக.

"இருவாட்சி' மாத இதழாக இல்லாவிட்டாலும், குறைந்தது காலாண்டு இதழாகவாவது தொடர்ந்து வெளிவர வேண்டும். அதற்கான உதவிகளைத் தமிழையும், வாசிப்பையும் நேசிப்பவர்கள் அவர்களுக்குச் செய்துதர வேண்டும். உண்மையிலேயே "இருவாட்சி' ஓர் இலக்கியத் துறைமுகம்தான்.


-------------------------------------------------------


கவிஞர் மு.மேத்தாவின் ரசிகன் நான் என்பதை இதற்கு முன்னும் பல முறை பதிவு செய்திருக்கிறேன். வேலாயுதம் அண்ணாச்சியின் முத்துவிழா மலரில் வெளிவந்திருக்கும் மு.மேத்தாவின் "நூலாண்ட மன்னர் நூறாண்டு வாழ்க!' என்கிற கவிதையிலிருந்து சில வரிகள். நான் ரசித்ததுபோல,  நீங்களும் ரசிப்பீர்கள்.

வாளோடு ஆண்ட மன்னர்
    வரலாறு மறந்து போகும்!
வேலோடு வென்ற வேந்தர்
    வெற்றிகள் மறைந்து போகும்!
தாளோடும் தாளில் தீட்டும்
    தமிழோடும் தமிழைப் பாடும்
நூலோடும் வாழ்வோர் - மண்ணில்
    நூறு நூறாண்டு வாழ்வார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com