மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வனக்குரங்கும் மனக்குரங்கும்!

"மனம் ஒரு குரங்கு' என்பதை அனைவரும் அறிவர். இதை  வள்ளலார் எவ்வாறு இலக்கியச்சுவை கூட்டிப் பாடியுள்ளார் என்பதை நாம் உணர வேண்டும்.

News image
Updated On :1 மே 2022, 12:51 pm

எஸ். சாய்ராமன்

"மனம் ஒரு குரங்கு' என்பதை அனைவரும் அறிவர். இதை வள்ளலார் எவ்வாறு இலக்கியச்சுவை கூட்டிப் பாடியுள்ளார் என்பதை நாம் உணர வேண்டும். மனம் அடங்குவதற்கு உரிய வழியைத் தேடினார் வள்ளலார். தமது மனம் எந்தெந்த வகையில் எல்லாம் அலைபாயுமோ, அந்தந்த வழிகளைக் கண்டறிந்தால்தான் அவற்றுக்கு நேர் எதிரான வழியிலே சென்று மனம் அலை பாய்வதற்கு அணைபோட முடியும் என்றும் தீர்மானித்தார்.

ஒரு நினைவிலிருந்து மற்றொருநினைவுக் கிளைக்குத் தாவி, அதிலிருந்து பிறிதொரு நினைவு கிளைக்குத் தாவித் தமது மனக்குரங்கு மிகவும் துள்ளிக்குதித்து அலைபாய்வதாகக் குறிப்பாகப் புலப்படுத்துகின்றார் அவர்.

"கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்' (போ.திரு. அடி-35) என்பார் மணிவாசகர். கல்வி, கேள்வி ஆகியவற்றாலும் செருக்குற்றுத் தமது மனம் அலைபாய்ந்து திரியக்கூடாது என்பதற்காக, "படிப்படக்கி, கேள்வியெல்லாம் பற்றறவிட்டடக்கி' யதாகப் பாடியுள்ளார் வள்ளலார். கல்விச் செருக்கைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே,"கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்...' என்று தாயுமானவரும் பாடியுள்ளார்.

கல்விச் செருக்கு அடங்கினால் மட்டும் போதுமா? தமது மனக்குரங்கு மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளால் உண்டாகும் பார்த்தல், ஸ்பரிச உணர்வு, இனிப்பு, காரம் முதலியவற்றால் உரமேறிய நாவின் சுவையுணர்வையும் "விரும்பி அலைந்ததாம்' என்கின்றார். எனவேதான் மனம் அடங்குவதற்கு உறுதுணையாக அவற்றையும் அடக்கினாராம் வள்ளலார். பலவகையான மணங்களை நுகர அவாவும் விருப்பத்தையும் அடக்கினேன் என்பதை, "கந்தமெலாம் அடக்கி' என்று குறிப்பிடுகின்றார்.

"கேள்வியெலாம் பற்றறவிட்டடக்கி' என்றதால் செவியின் செயலும் முன்பே குறிக்கப்பட்டது. எந்தெந்த வகையினாலெல்லாம் தமது மனக்குரங்கு அடங்காமல் துள்ளிக் குதிக்கின்றதோ அந்தந்த வழிவகைகளை எல்லாம் அடைத்த பின்பும் அதன் ஆட்டமும், துடிதுடிப்பும் ஓயவில்லையாம். இதனை, "பாவிமனக் குரங்காட்டம் பார்க்க முடியாதே!' என்றும் பாடியுள்ளார். (திருவருட்பா, தி.மு. 6, 90-ஆவது தலைப்பாகிய சித்தி விளைவு -1).

"தாம் எத்தகைய முயற்சிகள் செய்தாலும் அம் முயற்சிகள் அனைத்தையும் மீறிக்கொண்டு தமது மனக்குரங்கு சற்றும் அடங்காமல் துள்ளிக் குதிக்கின்றது' என்று பாடியுள்ளார்.

"சாதிமதம் சமயமெனும் சழக்கையும்
விட்டடக்கி மடிப்படக்கி நின்றாலும்
நில்லேன்நான் எனவே வனக்குரங்கும் வியப்ப
என்றன் மனக்குரங்கு குதித்த துடிப்பு' (6:55)

வனக்குரங்கு மனக்குரங்கைக் கண்டு வியக்குமா? ஒரு போதும் வியவாது! வியப்பதற்கென்று அதற்குத் தனி மனம் உண்டா? பகுத்தறிவு உண்டா? வனக்குரங்கினும் மிகமிக அதிகமாக மனக்குரங்கு துள்ளிக் குதிப்பதைத்தான் "வனக்குரங்கும் வியப்ப' என்று "உம்மை' கொடுத்துப் பாடியுள்ளார். தமது கருத்தைத்தான் வள்ளலார் வனக்குரங்கின் மீது ஏற்றி வைத்துப் பாடியுள்ளார். இதுவே கவிமரபாகும். "அதிசயோக்தி' என்று இதை வடமொழியில் வழங்குவர். தமிழில் இது, "உயர்வு நவிற்சியணி' என்று சொல்லப்படும்.

இவ்வாறு அவர் தமது கருத்தை வனக்குரங்கின் மீது ஏற்றி தமது மனக்குரங்கின் ஒரு கணமும் அடங்கி ஓய்ந்திடாத ஆட்டத்தை நிலைநாட்டினார். எனவே, இது கவிமரபும் கவிஞர்களுக்கே உரிய இலக்கிய உரிமையுமாகும். ஒரு போதும் நடவாததை நடந்ததாகவும், நிகழாததை நிகழ்ந்ததாகவும் உரைப்பதுதான் கவிமரபு. எனவே, இதை அப்படியே சொல்லுக்குச் சொல்லாக வைத்துப் பொருள் காணக்கூடாது. அப்படிக் காண்பதற்கு இது பதவுரையன்று; குறிப்புரையாகும். இப்பாடலில் இடம்பெற்ற "சாதி மதம் சமயமெனும் சழக்கையும்விட் டடக்கி' என்னும் அடியில் வரும் "மதம்' என்பது சமயக் கொள்கையைக் குறிக்கும்.

இதை "சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்' என்று மணிவாசகப் பெருமான் (போ.திரு.52-53) பாடியுள்ளார். நடராசப் பெருமானை முன்னிலைப் பொருளில் "துரையே!' என்றும், "என் நெஞ்சில் சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே!' என்றும் விளித்து, அப்பெருமானே தமது மனக்குரங்கு குதித்த துடிப்படக்கித் தம்மை ஆட்கொண்டருளியதாகக் கூறி, பின்வரும் தமது பாடலை நிறைவு செய்திருக்கின்றார்.

19-ஆம் நூற்றாண்டில் மிகவும் பரவலான புழக்கத்துக்கு வந்துவிட்ட சொல்லே "துரை' என்பதாகும். "துடிப்படக்கி ஆட்கொண்ட துரையே! என் நெஞ்சில் / சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே!'(திரு.6-55) என்கிறார்.

தமது மனத்தையே முன்னிலைப்படுத்தி, "தாம் ஞானசபை தலைவனுக்கு நல்ல பிள்ளையாதலால் அதன் அதிகாரம் தினையளவும் தம்பாற் செல்லாது என்றும், உலகமே சிரிக்குமாறு அதனை அடக்கிடுவேன்!' என்றும் அவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது:

"மனமெனுமோர் பேய்க்குரங்கு
மடைப்பயலே நீதான்
மற்றவர்போல் எனைநினைத்து
மருட்டாதே கண்டாய்'
இப்பாடல், அவருக்கும் முன்னோடியான தாயுமான சுவாமிகளின் பின்வரும் பாடலின் விரிவுரை போன்றே அமைந்துள்ளது.
"படிப்பற்றுக் கேள்வியற்றுப்
பற்றற்றுச் சிந்தைத் துடிப்பற்றோர்க்கு
அன்றோ சுகங்காண் பராபரமே!' (ப.க- 243)
"பிள்ளையார் பிடிக்கக் குரங்கானது' என்பர். ஐந்து கரனாகிய பிள்ளையாரைப் போன்றே இருந்த இடத்தில் இருந்தவாறே (தாய் தந்தையரை வலம் வந்ததாலேயே) உலகையெல்லாம் சுற்றி வருகின்றதாம் நமது மனம். எனவே, "ஐங்கரனை ஒத்த மனம்' என்று அருணகிரிநாதர், கொங்கணகிரித் திருப்புகழில் பாடியுள்ளார்.

எனவே, இருந்த இடத்தில் இருந்துகொண்டே உலகையெல்லாம் வலம் வருகின்ற செயலினால் பிள்ளையாருக்கும் மனத்துக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது! ஆதலின், நமது மனமே பிள்ளையாராகிய தெய்வமும், குரங்காகிய விலங்குமாகும். இதனால் "மனம் ஒரு குரங்கு' என்பதும், "பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதை' என்னும் பழமொழியும் ஒன்றோடொன்று மிகவும் நெருங்கிய தொடர்புடையன என்பதை உணரலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.