இந்த வாரம் கலாரசிகன் - (13-11-2022)

பெரியவர் நஞ்சுண்டனுக்குப் பிறகு கோவைக் கம்பன் கழகம் என்னவாகும் என்கிற கவலை இருந்தது.
இந்த வாரம் கலாரசிகன் - (13-11-2022)


பெரியவர் நஞ்சுண்டனுக்குப் பிறகு கோவைக் கம்பன் கழகம் என்னவாகும் என்கிற கவலை இருந்தது. ஆனால், அவர் இருக்கும்போதே தனது வாரிசாக முனைவர் முருகேசனைத் தயார் செய்து விட்டார். புதுவைக் கம்பன் கழகமும் சிவக்கொழுந்தின் தலைமையில் புதுப்பொலிவுடன் செயல்படுகிறது. ஏனைய கம்பன் கழகங்களும் முன்பைவிடத் துடிப்பாக, இளரத்தம் பாய்ச்சப்பட்டு வீறுநடை போடுகின்றன.

அந்த வரிசையில் இணைகிறது தென்காசித் திருவள்ளுவர் கழகம். தொன்மையான தென்காசித் திருவள்ளுவர் கழகம்தான், தமிழகத்தின் இலக்கிய அமைப்புகளுக்கு முன்னோடி. 95 ஆண்டுகளாகத் தொண்டாற்றி வரும் தென்காசித் திருவள்ளுவர் கழகத்தின் முதலாவது ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்தவர் "கப்பலோட்டிய தமிழர்', "செக்கிழுத்த செம்மல்' வ.உ. சிதம்பரம் பிள்ளை.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடி, குறளாய்வு செய்யும் அந்த அமைப்பு, பெரியவர் ஆ. சிவராமகிருஷ்ணனைச் செயலராகக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக இருந்த பேராசிரியர் கணபதிராமனின் மறைவைத் தொடர்ந்து, இப்போது வழக்குரைஞர் ந. கனகசபாபதி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

நண்பர் கனகசபாபதியின் தலைமையில் இன்று மாலையில் தென்காசித் திருவள்ளுவர் கழகத்தின் முதல் சிறப்புக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். அவரது சீரிய தலைமையிலும், பெரியவர் ஆ. சிவராமகிருஷ்ணனின் வழிகாட்டுதலிலும் தென்காசித் திருவள்ளுவர் கழகம் தனது நூற்றாண்டு விழாவை உலகமே வியக்கும் வண்ணம் கொண்டாட எனது பிரார்த்தனைகள்..!

-----------------------------------------------------------------

அ. சரவணகுமாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, கருணாகர சேதுபதி, "வையை' என்கிற பெயரில் தொகுத்திருக்கும் நடப்பு ஆண்டுக்கான இயற்கை விவசாயிகள் ஆண்டு மலர் எனது பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பெயரும் முகப்பும் அதைப் படித்துப் பார்க்கத் தூண்டின.

"வையை இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு' என்கிற அமைப்பு மதுரையில் செயல்படுகிறது என்பதை இந்த மலரைப் பார்த்துத்தான் நான் தெரிந்துகொண்டேன். அந்த அமைப்பு ஒரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டிருப்பது, மலரில் உள்ள கட்டுரைகள் மூலம் தெரிந்தது. நாம் பாரம்பரியமாகப் பயிரிட்டுக் கொண்டிருந்து, இப்போது அறவே மறந்துவிட்ட நெல் ரகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பது அதன் அசாதாரண சாதனை.

மிளகி (அழகி), செம்மிளகி, வையகுண்டா, தில்லைநாயகம், அரைச்சம்பா, குரங்குச் சம்பா, சீங்கினிக்கார், சண்டிகார், கல்லுருண்டை, புழுதிக்கார், சித்திரைக்கார், பூங்கார், உவர்குண்டா, குறுவைகளையான், வரப்புக்குடைஞ்சான், கருப்புக் கவுனி, சிவப்புக் கவுனி, அறுபதாம் கோடை, ஆனைக்கொம்பன், அரியான், வெள்ளைக்கட்டை என்று ஒரு காலத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டு, இப்போது கைவிடப்பட்ட ரகங்களை அடையாளம் காண முடிந்தது, கருணாகர சேதுபதியின் தலைமையிலான விவசாயிகள் கூட்டமைப்பு செய்திருக்கும் அபார சாதனை.

சிறுதானியப் பயன்பாட்டை அதிகரித்து அவற்றின் உற்பத்தியைப் பெருக்குவது, நாட்டுப் பருத்தியைப் பயிரிடுவது, சாம்பல் காடுகள், வன்னி மரங்கள், மருத மரங்கள், இலுப்பை மரங்கள், பனை மரங்களைப் பெருக்குவது என்று மண்ணையும் மக்களையும் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது அந்த அமைப்பு. அதன் முதலாண்டு விதைத் திருவிழா கடந்த ஆண்டு கீழடியில் நடத்தப்பட்டது என்பதை மலரின் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த ஆண்டு எங்கே, எப்போது நடைபெறும் என்று தெரிவித்தால் மகிழ்வேன்.

ஜே. ஜோஸ்லினின் "உணவே மருந்து, இயற்கை உணவே மருந்து!', ஏர் மகராசனின் "தமிழ் மரபின் நெல்லும் சொல்லும்', பெரி. கபிலனின் "மெலியும் மேய்ச்சல் நிலம் அழியும் மேய்ச்சல் தொழில்', இராமர் கமுதியின் "அமெரிக்காவுக்குப் பறந்த மிளகாய், பிரதமர் மோடியுடன் சந்திப்பு' உள்ளிட்ட கட்டுரைகள் புதிய பல தரவுகளையும், செய்திகளையும் எனக்கு வழங்கின. அந்தக் கட்டுரையாளர்களுக்கு நன்றி...

நான் மிகவும் ரசித்தும், ஆர்வத்துடனும் படித்த கட்டுரை, செல்வி பவித்ரா எழுதிய "நாட்டு மாடுகள் இயற்கை விவசாயத்திற்கு ஏன் அவசியம்?'

"வையை' ஆண்டு மலரை எனக்கு அனுப்பிவைத்தமைக்கு நன்றி... புதிய செய்திகள் பலவற்றை நான் தெரிந்து கொள்ள உதவியிருக்கிறீர்கள்.

-----------------------------------------------------------------

இளசை மணியனைத் தொடர்ந்து, இப்போது இளசை அருணாவும் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். இனிமேல் எட்டயபுரம் பாரதி விழாவுக்குப் போகும்போது அவர்கள் இருவரும் இருக்கமாட்டார்கள் என்பது மனதை வருத்தும் நிஜம்.

ஒட்டப்பிடாரத்துக்காரரான ராமசுப்பிரமணியன் (மணியன்), அருணாசலம் (அருணா) சகோதரர்கள் எட்டயபுரத்தில் வாழ்ந்ததால் தங்கள் பெயருடன் "இளசை' என்கிற அடைமொழியைச் சேர்த்துக் கொண்டார்கள். எட்டயபுரத்தின் இன்னொரு பெயர்தான் "இளசை' என்பது வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் சொல்லித்தான் எனக்குத் தெரியும். "குற்றாலக் குறவஞ்சி'போல, "எட்டயபுரக் குறவஞ்சி'யில் அந்தப் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தோழர்கள் சோ. அழகர்சாமி, தொ.மு.சி. ரகுநாதன் உள்ளிட்டவர்களின் உற்ற தோழர்களாக விளங்கியவர்கள் அவர்கள் இருவரும். தோழர் ப. ஜீவானந்தம் தலைமையில் எட்டயபுரத்தில் பாரதி விழா நடத்தக் காரணமானவர்கள், அவர்கள் இருவரும்தான். பலருக்கு வழிகாட்டியாக இருந்த ஆசான் இளசை அருணா.

அவருக்கு நான் செலுத்தும் அஞ்சலியாக இருக்கட்டும், அவரது இந்தக் கவிதை (நன்றி: கே.எஸ்.ஆர்.) -
யமுனைக் கரையில்
மும்தாஜுக்காகப்
பளிங்குப் பதவுரைகள்
யாசிக்கின்ற ஷாஜஹான்கள்
காதலின் தொடர்கதைகள்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com