நெடிது உயர்ந்த நெற்கூடு
ஆண்டு முழுமைக்கும் உணவு உண்ணத் தேவையான நெல்மணிகளை, உழவர்கள் தமது இல்லங்களில் பெருங்கலன்களில் சேகரித்து வைக்கும் முறை இருந்ததைச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன.


ஆண்டு முழுமைக்கும் உணவு உண்ணத் தேவையான நெல்மணிகளை, உழவர்கள் தமது இல்லங்களில் பெருங்கலன்களில் சேகரித்து வைக்கும் முறை இருந்ததைச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன.
அறுவடைக்குப் பின்னர், அடுத்து வரும் வேளாண் பருவத்திற்குத் தேவைப்படும் விதை நெல்லினைக் "கோட்டை' என்ற பெயரில் வைக்கோல் திரிகளால் பெருங்கோள வடிவில் உருவாக்கி, அதனுட் பொதித்துச் "சாணம்' அல்லது "சேறு' கொண்டு மெழுகிப் பாதுகாத்து வைப்பர்.
உணவுத் தேவைக்கென நெல்மணிகளை மலைபோல் குவித்து வைத்துச் "சேர்' என்னும் அமைப்பில் பாதுகாத்து வைப்பர் என்பதை நற்றிணைப் பாடலொன்று (பாடல்: 60)
கூறுகின்றது.
வீடுகளில், மரத்தால் செய்யப்பட்ட சிறு கிடங்குகளில் நெல்மணிகளைச் சேமித்து வைப்பர்.
இதற்கு "நெற்கூடு', "குதிர்' என்ற பெயர்கள் உண்டு.
மரப்பலகைகளால் செய்யப்பட்ட "உறை'களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, முழுமைப்படுத்தி, அவற்றுள் நெல்லினைக் கொட்டி வைப்பர்.
உழவர்கள், அவற்றை வரிசை முறை மாறாமல் பொருந்துமாறு அடுக்குவதற்கு ஏதுவாக, ஒவ்வொரு "உறை'க்குமான எண்ணுதலமைந்த குறியீடுகளை இட்டிருப்பர். அதற்கேற்பவே அவற்றை அடுக்குவர். இத்தகையக் "குதிர்' என்பது "பத்தாயம்' எனப் பின்பு வழங்கப் பெறலாயிற்று.
"தலைவனைச் செலவு அழுங்குவித்தது' என்னும் அகத்துறையிலமைந்த பாலைத்திணைப் பாடலொன்றில் புலவர் சாத்தந்தையார், "நெற்கூடு' எனப்படும் "குதிர்' குறித்துக் கூறியுள்ளார்.
தலைவியை விட்டுத் தான் வினையின் பொருட்டுப் பிரியப் போவதைத் தலைவன் கூறுகின்றான். அதைக் கேட்ட அவளது தோழியோ, தலைவியின் ஆற்றாமையைத் தலைவனுக்குத் தெரிவிக்கிறாள்.
தலைவியானவள், அழகிய புள்ளிகளால் அடையாளமிடப்பட்ட பல அடுக்குகளைக் கொண்ட நெல்மணிகள் நிரம்பக் கொட்டப்பட்ட, மலைபோன்று நெடிது உயர்ந்த "நெற்கூட்டினை' உடைய தனது தாய் வீட்டை விட்டுவிட்டு, நீ தரப்போகும் இன்பம் ஒன்றை மட்டுமே கருதி, உனக்குத் துணையாக வந்துவிட்டாள். அதுவும், சுட்டெரிக்கும் வெயிலால் திரங்கிப்போய் முடம்பட்ட பலாமரங்கள் நிரம்பிய காட்டில், நீ தமியராய்ச் சென்று வருந்தாமலிருக்க, உனக்குத் துணையாக வந்தாள்.
அந்த ஒரு தவற்றினை மட்டுமே செய்த அத்தலைவியிடம் "நான் பிரியப் போகிறேன்' என்று நீ சொன்னாய். அவ்வாறு சொன்ன அளவிலேயே, கூரிய பற்களையும், பொன் போன்ற சுணங்கினையும், நெருங்கிய கரிய கூந்தலையும், பெரிய தோள்களையும் உடைய அவளது மெய், இப்பொழுது சோர்ந்து விட்டது. அதனால், கைவளைகள் கழன்று விழுந்தன.
"பிரிவேன்' என்று நீ கூறிய அளவிலேயே இந்த நிலையென்றால், நீ
அவளை விட்டுப் பிரிந்து சென்று மீண்ஹடு வரும்வரை தலைவி எங்ஙனம் ஆற்றியிருக்கப் போகிறாள்? இதற்காக நான் வருந்துகிறேன் என்கிறாள் தோழி.
அப்பாடல் வருமாறு:
நோகோ யானே நெகிழ்ந்தன வளையே
செவ்வி சேர்ந்த புள்ளி வெள்ளரை
விண்டுப் புரையும் புணர்நிலை
நெடுங்கூட்டுப்
பிண்ட நெல்லின் தாய்மனை யொழியச்
சுடர்முழு தெறிப்பத் திரங்கிச் செழுங்காய்
முடமுதிர் பலவி னத்த நும்மொடு
கெடுதுணை யாகிய தவறோ
வையெயிற்றுப்
பொன் பொதிந் தன்ன சுணங்கின்
இருஞ்சூ ழோதிப் பெருந்தோ ளாட்கே.
(நற்றிணை: பாடல்: 26)
இப்பாடல், தலைவியின் தாய்வீட்டின் செழுமைக்கு அடையாளமாகக் கூறப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்கான "குதிர்' எனப்படும் "நெற்கூடு' சங்ககால வேளாண் பெருமக்களின், சேதமில்லாமல் நெல்மணிகளைச் சேமித்து வைக்கும் முறையை நம் மனக்கண்முன் நிறுத்தி, நம்மை மகிழ்விக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...