மு. வரதராசனார் போற்றிய கலைச்செல்வம்
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளேபின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே


முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே
என இறைவனைப் போற்றிப் பாடுவார் மாணிக்கவாசகர் (திருவெம்பாவை: 10).
ஒருவகையில், இவ்வாக்கு ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்களுக்கும் பொருந்தி வருவதே ஆகும். சான்றோர்களும் முன்னைப் பழமையில் தோய்வும், பின்னைப் புதுமையில் ஆர்வமும் ஒருங்கே கொண்டவர்களாக விளங்குவார்கள். சான்றோர் மு. வரதராசனாரும் (1912 - 1974) இவ்விதிக்கு இயைந்து வருபவரே ஆவார்.
"கொங்குதேர் வாழ்க்கை', "முல்லைத்திணை', "புலவர் கண்ணீர்', "தமிழ் நெஞ்சம்', "மணல் வீடு' என்றாற்போல் பழந்தமிழ் இலக்கியங்களை ஆய்வுப்பொருளாக்கி நூல்கள் படைத்த மு.வ. "அகல்விளக்கு', "கரித்துண்டு', "குறட்டை ஒலி', "கள்ளோ காவியமோ', "வாடாமலர்', "கி.பி. 2000' என்றாற்போல் புதிய படைப்பிலக்கியங்களையும் எழுதிக் குவித்தவர். இது மு.வ.வின் ஆளுமையில் காணப்பெற்ற ஒரு சிறப்புப் பண்பாகும்.
"இருபது நூற்றாண்டுகளாகப் பல தலைமுறையினராகத் தொடர்ந்து பயின்று பயன்பெற்றுப் போற்றிய கற்பனைச் செல்வம் நிறைந்த நூல்கள் சங்க இலக்கியங்கள்' என "நற்றிணைச் செல்வம்' என்னும் நூலில் குறிப்பிடுகின்றார் மு. வரதராசனார். அத்தகைய விழுமிய இலக்கியச் செல்வம் எது என்பதை
எடுத்துரைக்கின்றது ஒரு பாடல்.
தோழியின் ஆளுமைத்திறனைப் பறைசாற்றும் ஒரு நற்றிணைப் பாடல்: தலைவன் ஒருவன் பரத்தமை இழுக்கம் மேற்கொண்டான்; சிலநாள் கழித்துத் திரும்பி வந்தான். தலைவி ஊடல் கொண்டிருப்பதை உணர்ந்து, தோழியிடம் சென்று தலைவியின் ஊடலைத் தணிக்குமாறு வேண்டினான். அப்போது தோழி அவனுக்குத் தக்க முறையில் அறிவுரை கூறினாள்.
களவொழுக்கத்தின் தொடக்கத்தில் தலைவன் தன் அன்பின் பெருமை தோன்றப் பலவாறு தலைவியைப் பாராட்டி மொழிந்ததையும், சூளுரைத்ததையும் நினைவுபடுத்தினாள். தலைவன் தன் செல்வச் சிறப்புத் தோன்றத் தலைவியைச் சந்திப்பதற்காகக் குதிரை, தேர் முதலியவற்றில் விரைவாக ஊர்ந்து வந்ததையும் சுட்டிக்காட்டினாள். அவற்றை எல்லாம் உண்மையான செல்வச்சிறப்பு என்று சான்றோர் ஒருநாளும் மதிப்பதில்லை என்றும், நெஞ்சத்தின் தூய அன்பே உண்மையாகப் போற்றத்தக்க செல்வம் என்றும் தலைவனுக்கு உணர்த்தினாள்.
ஒருவர் புறத்தே பெறும் மேம்பாடுகள் எல்லாம் உண்மையானவை அல்ல, அவரது அகத்தே அமையும் பண்பாடே அழியாத நிலையான செல்வம் என்று கூறி, தலைவன் இனியேனும் தலைவியைக் கைவிடாமல் அவளிடம் அன்பு பூண்டு வாழுமாறு அறிவுறுத்தினாள்.
தலைவ! நெடுமொழிகளை உரைப்பதும், விரைந்து செல்பவற்றை ஊர்தலும் செல்வம் அல்ல; அவை எல்லாம் செய்த வினையின் பயனாகப் பெறக்கூடியவை. சான்றோர் செல்வம் என்று போற்றுவது எது என்றால், தன்னைச் சேர்ந்தவர்களின் துன்பத்திற்காக அஞ்சும் பண்புடன் நெகிழ்ந்துருகும் தன்மையே ஆகும். இதுவே உண்மையான செல்வம்.
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று: தன் செய்வினைப் பயனே;
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம்என் பதுவே
(நற்றிணை: 210)
இத்தகைய அரிய உண்மை ஒளிவீசும் அனுபவ மொழிகளும், கையோடு இயைந்த இயல்பான கற்பனைகளும் போற்றத்தக்க விழுமிய உணர்வுப் பதிவுகளும் கொண்ட பாடல்கள் பல சங்க இலக்கியத்துள் உள்ளன. இச்சிறப்புக்களைக் கருத்தில் கொண்டே, "இருபது நூற்றாண்டுகள் கடந்து வாழும் விழுமிய கலைச்செல்வம்' என்று சங்க இலக்கியங்களை அறிஞர்கள் போற்றி வருகின்றனர்.
சுருங்கக்கூறின், உயர்ந்த உணர்வுக்கு அழகிய நிலையான வடிவம் தருவது பாட்டு என்றால், சங்க இலக்கியங்களும் அத்தகைய இலக்கியச் செல்வம் ஆகும் என்பது மட்டுமல்ல இக்காலத்திற்கும் ஏற்புடையவை என்பது முற்றிலும் உண்மை.
(அக். 10 மு. வரதராசனார் நினைவு நாள்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...