ஆறில் நான்கு

திருமுருகாற்றுப்படைதான் முருகனைக் குறித்து எழுந்த பழமையான நூல். அதனை அருளியவர் நக்கீரப் பெருமான்.
ஆறில் நான்கு

திருமுருகாற்றுப்படைதான் முருகனைக் குறித்து எழுந்த பழமையான நூல். அதனை அருளியவர் நக்கீரப் பெருமான். அவர் "பழுத்தமுதுதமிழ்ப் பலகை இருந்த கவிப்புலவர்'. அவர் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழனிமலை), திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகியவற்றை முருகன் உறையும் ஆறு இடங்களாகத் தெரிவிக்கிறார். 

இதனையொட்டியே "ஆறுதிருப்பதியில்வளர் பெருமாளே!' (ஈனமிகுத்துள பிறவிஎன்னும் திருப்புகழ்) என்று அருணகிரிநாதரும்  "ஆறு திருப்பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே!' (கந்தர் கலிவெண்பா) என்று குமரகுருபரரும் கூறியுள்ளனர்.

இவ் ஆறுபடைவீடுகளில் குன்றுதோறாடல் என்பது ஒரு தலமன்று; அது தொகைத்தலம்.  பழமுதிர் சோலை,  திருமாலிருஞ்சோலையில் உள்ள கோயிலைக் குறிப்பதாகச் சிலர் கூறுவர். வாகீச கலாநிதி கி.வா.ஜ. "வழிகாட்டி' நூலில் இத்தலத்தைக் குறித்து எழுதும்போது, "ஆறாவது படைவீடாகிய பழமுதிர்சோலை மதுரைக்கு அருகில் உள்ள அழகர்மலையாகும். 

சோலைமலையென்றும் திருமாலிருஞ்சோலைமலையென்றும் அது வழங்கப்பெறும். இப்போது அழகருக்குரிய கோயில் அங்கு இருக்கிறது. அதோடு முருகனுக்கும் கோயில் இருந்ததற்குரிய அடையாளங்கள் அங்கே உள்ளன என்பர்' என்று குறித்துள்ளார். 

அடிக்குறிப்பில் மலையின்மேல் முருகன்கோயில் ஒன்றை நிறுவிச் சில ஆண்டுகளாக வழிபட்டு வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இப்போதுள்ள கோயில் பழமையானதன்று என்பது தெளிவாகிறது. பரிபாடல் மதுரையைச் சூழ்ந்துள்ள திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலைமலை, வையை ஆகியவற்றைப் பேசுகிறது. 

அதில், திருமாலிருஞ்சோலைமலையில் முருகன் கோயில் இருந்ததற்கான குறிப்பு ஏதும் காணப்படவில்லை. பழமுதிர்சோலை என்பது பழங்கள் முதிர்ந்த சோலைக்குரியவன் என்றோ பழங்கள் உதிர்ந்த சோலைக்குரியவன் என்றோ பொருள்படும். எனவே குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய இரண்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிப்பன அல்ல. முதல் நான்குமே குறிப்பிட்ட இடங்களைத் தெரிவிப்பனவாகும்.  

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் வஞ்சிக்காண்டத்தில் சேரநாட்டு மலைப்பகுதியில் வாழ்ந்த குறவர்கள் முருகனைப் போற்றிப் பரவி ஆடி மகிழ்வதைப் பாடியுள்ளார். 

அதில் வரைவு முடிதல் வேண்டித் தெய்வம் பராயது என்னும் துறையில் அமைந்துள்ள பாடல் நான்கு இடங்களை மட்டுமே தெரிவிக்கிறது. 

சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே
பார்இரும் பெளவத்துள் புக்குப் பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே
என்பதே அப்பாடல். 

இதில் குறிக்கப்படும் முருகன் கோயில்கொண்டுள்ள நான்கு இடங்கள் யாவை என்பதை வரையறுப்பதில் அறிஞர்கள் இடர்ப்பட்டுள்ளனர்.

அரும்பதவுரையில், "செந்தில் - திருச்செந்தில். செங்கோடு - திருச்செங்கோடு. வெண்குன்றம் - சுவாமிமலை. ஏரகம் ...' என்று காணப்படுகிறது. இவ்வெற்றிடத்தை நிரப்பப்பதிப்பாசிரியராகிய உ.வே.சா. "ஏரகம்: ஏரகத்துறைதலும் உரியன்' (முருகு. 189) என்றவிடத்து ஏரகம்-மலைநாட்டகத்ததொரு திருப்பதியென்றார், நச்சினார்க் கினியர்' என்று அடிக்குறிப்புத் தந்துள்ளார்.

இதனையொட்டியே இப்பகுதிக்கு உரையிட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டாரும் சூர்மா தடிந்த வேல், "சிறப்புப்பொருந்திய திருச்செந்திலும் திருச்செங்கோடும், சுவாமிமலையும் ஏரகமும் ஆகிய இடங்களின் நீங்காத முருகன் கையிடத்ததாகிய வேலேயாம்' என்று குறித்துள்ளார். 


குறிப்புரையில் செந்தில் - திருச்செந்தூர்; திருச்சீரலைவாய். வெண்குன்று - சுவாமிமலை என்பது அரும்பதவுரை. ஏரகம் மலைநாட்டகத்ததொரு திருப்பதி என்பர் நச்சினார்க்கினியர்' என்று குறித்துள்ளார்.  இப்பெயர்களில் எந்தப் பெயர் எந்தத் தலத்தைக் குறிக்கிறது என்று துணியத் திருமுருகாற்றுப்படை வெளிச்சம் பாய்ச்சுகிறது.

திருமுருகாற்றுப்படையின் தாக்கத்தைச் சிலம்பில் காணமுடிகிறது. "சாறு அயர் களத்து வீறுபெறத் தோன்றி' (முருகு. அடி.283; சிலம்பு கடலாடு. 161) என்னும் தொடர் எந்த மாற்றமுமின்றி இருநூல்களிலும் காணப்படுகிறது. சிலம்பு "கனாத்திறம் உரைத்த காதை'யில் வரும் "மூவா இளநலங் காட்டி' (35) என்னும் சொற்றொடர், "பண்டைத் தன் மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி' (290) என்னும் திருமுருகாற்றுப்படையின் சொற்றொடரை ஒத்ததாக 
உள்ளது. 

சிறுகுடியீரே
தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்  

(குன்றக்குரை16-20)

என்னும் சிலம்பின் பகுதி குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்துதொண்டகச் சிறுபறைக் குரவை அயர (முருகு.197) கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி (முருகு. 246) நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி (முருகு.  239) உருவப் பல்பூத் தூஉய் (முருகு. 241) என்னும் தொடர்களின்றும் பிறந்ததாகத் தோன்றுகிறது.

இதனால், நக்கீரர் குறித்துள்ள நான்கு படைவீடுகளையே இளங்கோவடிகளும் குறிக்கிறார் என்பது தேற்றம். அவற்றில், செந்திலும் ஏரகமும் அப்பெயர்களாலேயே இருநூல்களிலும் குறிக்கப்பட்டுள்ளன. செந்தில் என்பது திருச்சீரலைவாய் என்பதனை எல்லோரும் ஒருமிடறாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஏரகம் என்பது எதனைக் குறிக்கிறது என்று அரும்பதவுரை சுட்டவில்லை. ஏரகம் என்பதற்குப் பொருளின்றி இருத்தலைப் பதிப்பாசிரியர் சில புள்ளிகள் இட்டுக் காட்டியுள்ளார். 

அரும்பதவுரை யாசிரியருக்குப் பின் வந்த நச்சினார்க்கினியர் அதனை மலைநாட்டிலுள்ளதோர் இடம் என்று குறிக்க அக் கருத்தினை அவருக்குப் பின்வந்தோர் அப்படியே மேலெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ளனர். சிலர் ஏரகத்தை மலைநாட்டிலுள்ள சுப்பிரமணியம் என்னும் தலம் என்று கருதுவர். சங்கநூல்களில் குறிக்கப்படாத அதனை ஒரு படைவீடாகக் கருதுவது எப்படிப் பொருத்தமாக அமையும்? 

அரும்பதவுரைகாரர் வெண்குன்று என்பதற்குச்சுவாமிமலை என்று குறித்துள்ளதால் அப்பெயரில் ஒரு படைவீடு இருத்தல் அவருக்கு உடன்பாடு என்பது தெரிகிறது. ஆனால் அஃதுஅவர் கூறுவதுபோல் வெண்குன்றா என்பது ஆய்வுக்குரியது.

ஏரக வெற்பெனும் அற்புத மிக்கசுவாமிமலைப்பதி (சுவாமி மலை 33) என்பதும், காவிரி புறம்பு சுற்றும் ஏரகம் அமர்ந்த பச்சை மயில்வீரா! (சுவாமிமலை 14) என்பதும் அருணகிரிநாதர் கூற்று. இதனால் காவிரியின் வடபகுதியில் உள்ள சுவாமிமலையே ஏரகம் என்பதும், அரும்பதவுரையில் "ஏரகம் - சுவாமிமலை என்பதற்கு மாறாக வெண்குன்று - சுவாமிமலை' என்று அமைந்திருக்கிறது என்பதும் புலனாகின்றன. மேலும், அத்தலத்தில் காவிரியில் குளித்த அந்தணர்கள் ஈர ஆடையோடு வழிபாடு செய்வதனையே  "புலராக் காழகம் புலர உடீஇ' என்னும் தொடரால் நக்கீரர் தெரிவிக்கிறார் என்பதும் விளங்குகிறது.  

இனி எஞ்சிய வெண்குன்று, செங்குன்று என்பவை எந்தத் தலங்களைக் குறிக்கின்றன என்பதனைக் காணலாம். பரிபாடல் திருப்பரங்குன்றத்தைப் பரங்குன்று(8:11) தண்பரங்குன்றம் (9:11) என்றும், திருமுருகாற்றுப்படை "குன்றமர்ந் துறைதலு முரியன்' (முருகு.77) என்றும் குறிப்பதாலும் அம்மலை வெண்கல்லால் அமைந்திருத்தலாலும் வெண்குன்று என்பது திருபரங்குன்றத்தைக் குறிப்பதாகக் கொள்வதே தக்கதாகும். 

செங்குன்று என்பது திருச்செங்கோட்டைக் குறிப்பதாக அரும்பதவுரையாசிரியர் தொடங்கி அனைவரும் கூறியுள்ளனர். சங்க இலக்கியங்களில் திருச்செங்கோடு ஒரு முருகத்தலமாகக் குறிக்கப் பெறவில்லை. திருஞானசம்பந்தர் தேவாரம் அப்பதியில் உள்ள மங்கைபங்கனையே போற்றிப் பாடுகிறது. அங்கு முருகனைவிட மங்கைபங்கனாக வீற்றிருக்கும் சிவபெருமானுக்கே முதன்மை உள்ளது. பிற்காலத்தில் அருணகிரிநாதரே அங்குள்ள முருகனைச் சந்தத்தமிழ் மாலை அணிவித்துக் கொண்டாடியுள்ளார். 

எனவே செங்கோடு என்பதனைத் திருச்செங்கோடு என்று கூறுவது பொருந்துமாறில்லை. அது நக்கீரர் சுட்டியுள்ள நான்கில் எஞ்சிய திருவாவினன்குடியைக் (பழனிமலையை) குறிப்பதாகும். செங்கோடு என்பதற்குச் செங்குத்தான மலை என்பது பொருள். பரங்குன்றினும் பழனிமலை செங்குத்தான மலை என்பது கண்கூடு. சங்க காலத்தில் அதன் பெயர் பொதினி என வழங்கியது. "அறுகோட்டி யானைப் பொதினி' என்கிறது அகநானூற்று முதற்பாடல். செந்திலும் பரங்குன்றும்பழனியும் சங்கப் பாடல்களில் இடம்பெற்றுள்ள படைவீடுகளாகும். 

எனவே, இளங்கோவடிகள் செந்தில் என்பதால் திருச்செந்தூரையும், செங்கோடு என்பதால் திருச்செங்கோட்டையன்றிப் பழனிமலையையும், வெண்குன்று என்பதால் சுவாமிமலையையன்றித் திருப்பரங்குன்றத்தையும், ஏரகம் என்பதால் மலைநாட்டிலுள்ள ஒரு பதியையன்றிச் சுவாமிமலையையும் குறிக்கிறார் என்பதே தக்கதாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com