மலர்களும் மங்கையரும்

சங்க இலக்கியங்கள் மகளிரை தாவரங்களோடும் பறவைகளோடும் ஒப்பிட்டிருப்பதோடு, அவர்களை மலர்களுடன் ஒப்பிட்டுக் கூறியிருக்கின்றன. மகளிரின் ஒவ்வொரு உறுப்பையும் சங்க இலக்கியம் வெவ்வேறு மலர்களோடு உவமித்துள்ளது.
மலர்களும் மங்கையரும்

சங்க இலக்கியங்கள் மகளிரை தாவரங்களோடும் பறவைகளோடும் ஒப்பிட்டிருப்பதோடு, அவர்களை மலர்களுடன் ஒப்பிட்டுக் கூறியிருக்கின்றன. மகளிரின் ஒவ்வொரு உறுப்பையும் சங்க இலக்கியம் வெவ்வேறு மலர்களோடு உவமித்துள்ளது.

முல்லைப்பூவை மகளிரின் பற்களுக்கு உவமித்துக் கூறுவது சங்க இலக்கியங்களில் மிகப்பரவலான வழக்காகும். மகளிரின் பற்களை விரித்து கூறுவதற்காகவே முல்லை மொக்கு உவமையாகக் கையாளப்படுகிறது. முல்லை மலர் வெண்மையாகவும், சிறந்த மனமுடையதாகவும், தூயதாகவும் காணப்படுவதால் முல்லை மலரை கற்புக்கு அடையாளமாகவும் பழந்தமிழர் கொண்டனர்.

குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல்இயல்
(சிறுபாண் 29,30).

தமிழிலக்கியங்களில் பற்களுக்கும், கற்புக்கும் முல்லைப்பூ ஒப்பிடப்படும்.
பண்டிகை, திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் மகளிர் பூக்களைச் சூடுவது வழக்கமானது. இதனால் மகளிர் அழகாக தோன்றுவதுடன் அவர்களின் கூந்தல் நறுமணமுடையதாகவும் விளங்கும். சங்க கால மகளிர் தமது கூந்தலை நறுமணமுடையதாக்க குடசம் எனும் மலரை சூடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

குரற்றவைக் கூந்தற் குடசம் பொருந்தி
(சிலம்பு - ஊர்காண் காதை - 8)

இலக்கியங்களில் காந்தள் மலர் அழகிய மலராகவும், முருகக் கடவுளுக்குரிய மலராகவும் கருதப்பெற்றது. காந்தள் மலரின் மொக்கானது மகளிரின் நுனி சிவந்த விரல் போன்றிருப்பதாக இலக்கியங்கள் கூறுகின்றன. காந்தள் முனை புரைவிரல் (புறம் 144) நீண்ட காம்புடன் கூடிய காந்தள் பூவின் நீண்ட பூவிதழ்கள் முதலில் தலைகீழாகத் தொங்குவது போலிருக்கும். அப்போது காந்தள் பூவிதழ்கள் பச்சை, மஞ்சள், வெண்மை கலந்த சிவப்பு நிறமாக மாறிமாறித் தோன்றும். ஆனால், பூ முதிர்ந்த பருவத்தில் இதழ்கள் செங்குத்தாக மேல்நோக்கித் தோன்றும். அப்போது மகளிர் கைகூப்பித் தொழுவது போன்றிருக்கும்.

கொடிச்சியர் கூப்பி உரைதொழு கைபோல்
எடுத்த நறவின் குலையலங் காந்தள்
(கலி - 40)"

காந்தள் மலரானது மகளிரின் உடைந்த வளையல்கள் போன்று பூப்பதாகவும், அதன் இதழ் சோர்வடையும்போது கையிலுள்ள வளையல்கள் சோர்ந்து விழுவது போல் இருப்பதாகவும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்
(மலைபடு 519)
உடைவாளைக் கடுப்ப மலர்ந்த காந்தள்
(புறம் - 90)

காந்தள் மலர்கள் செழிப்புடன் இருக்கும்போது மகளிரின் கைவிரல்கள் போன்றிருக்குமாம்.
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்
(சிறுபாண் - 166).

இன்று புழக்கத்தில் இல்லாமல் போனாலும் சங்க காலத்தில் முடுக்கு, கவிர் எனும் மலர்கள் இருந்ததாக இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இவ்விரு மலர்களும் அமைப்பிலும், நறுமணத்திலும் சிறந்த மலர்களாகும்.

மகளிர் அழகுக்காக தங்களின் கைவிரல்களுக்கு செஞ்சாயம் ஊட்டும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்துள்ளது.

நகைமுக மகளி ரூட்டுகிர் கடுக்கு
(அகநூனூறு - 317)"

இன்றைய மகளிரும் குழந்தைகளும் தங்களின் கைகள், கை, கால் விரல்களின் நகங்களுக்கு நகச்சாயம் பூசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சங்க காலத்தில் முள்ளு முருங்கை என்றழைக்கப்படும் மலரின் இதழானது மகளிரின் சிவந்த வாய் போன்றிருக்குமாம்.
கவிரித ழன்ன காண்பின் செவ்வாய்
அந்தீங் கிளவி ஆயிழை மடந்தை
(அகநானூறு - 4).

அகநானூற்றில் தன்னை விட்டுப் பிரிந்த தலைவனை எண்ணி தலைவி வருந்திய நிலையில் தோழி தலைவியை நோக்கிக் கூறும்போது முல்லை அரும்பு போன்ற வளையலை அணிந்த தலைவியே, உன்னை உன் தலைவன் மறவாது நினைத்துக் கொண்டிருப்பார் என்று ஆறுதல் கூறுவதை, முல்லை வைந்துணை தோன்ற இல்லமொடு
(அகநானூறு 4:1)

எனும் பாடல் வரி எடுத்துரைக்கிறது.
கொன்றை மரத்தின் பூங்கொத்துக்களைப் பார்க்கும் போது அதன் தோற்றமானது பொன் மாலைகள் அணிந்த மகளிரைப் போல் இருக்குமாம்.
வண்டுபடத் ததைந்த கொடியினர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங்கொன்றை
(குறுந்தொகை 21- 1-3)

கொன்றை மலர்கள் மட்டுமின்றி கொன்றையின் நெடுங்கால் மகளிரின் கூந்தல் போன்றிருப்பதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இதனை, கடுக்கையம் பொலந்தார்நிரை நிரை நாற்றி நெடுங்கால் மயிர் அமைத்து தோன்றி மரகதத் தண்டில் விளக்கெடுப்ப எனும் கல்லாடப் பாடல் வரிகள் விளக்குகின்றன.

பாணர்களின் இசைக்கருவியான யாழை அழகிய வேலைப்பாடுகள் கொண்ட போர்வையினால் போர்த்தியிருப்பர். அத்தகைய போர்வையின் நிறத்தைப் போன்று வேனிற்காலத்தில் பூக்கும் பாதிரி எனும் மலர் இருக்குமாம்.

சில மலர்களின் அமைப்பையும் நறுமணத்தையும் நாம் அறிந்திருப்போம். அத்தகைய மலர்களுள் ஒன்றுதான் தாழை. சிற்றோடைகளின் கரைகளில் வளைந்தும், நெலிந்தும் காணப்படும் தாழை மரமானது இன்றும் காணப்படுகிறது.

தாழை மரங்கள் நிறைந்த புதரில் சிதறிக் கிடக்கும் தாழை மலர்களின் நுண்ணிய தாதுவானது சங்க கால மகளிர் அணியும் சங்கு வளையல்கள் உடைந்து உதிர்ந்து கிடப்பதைப் போன்று இருந்ததாம். இதனை

கதர்பிணி யவிழ்ந்த தாழை வன்புதர்
தயங்கிருங் கோடை தாக்கலி னுண்டாது
வயங்கிழை மகளிர் வண்டிற் றாஅங்
எனும் பாடல் வரிகள் காட்டுகின்றன
(நற்றினை 299).

மகளிரின் அழகுக்கு மலர்கள் மேலும் அழகூட்டியிருப்பதை சங்க இலக்கியங்களில் காண முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com