மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இந்த வாரம் கலாரசிகன் - (12-02-2023)

அண்ணாவால் அடையாளம் காணப்பட்டவர் என்கிற பெருமை வேலூர் வி.ஐ.டி. வேந்தர் ஜி. விசுவநாதனுக்கு உண்டு.

News image
Updated On :12 பிப்ரவரி 2023, 11:33 am

DIN

அண்ணாவால் அடையாளம் காணப்பட்டவர் என்கிற பெருமை வேலூர் வி.ஐ.டி. வேந்தர் ஜி. விசுவநாதனுக்கு உண்டு. இரா. செழியன், நாஞ்சில் மனோகரன், க. ராசாராம் என்கிற மூன்று அனுபவசாலிகளின் குருகுலத்தில், திறமையான நாடாளுமன்றவாதியாக வார்த்தெடுக்கப்பட்ட ஜி.வி-யின் அரசியல் வாழ்க்கையில் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று நான்கு பேரிடமும் செயல்படும் வாய்ப்பு பெற்றவர். அரசியல்வாதியாக இருந்தவர் இன்று உலகமறிந்த கல்வியாளராகவும் மாறியிருக்கிறார்.

வ.உ.சி-யும் காந்தியடிகளும் பற்றி ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதியிருந்த புத்தகம் குறித்து நான் எழுதியிருந்தேன். அந்தப் புத்தகம் வேண்டும் என்று ஜி.வி. கேட்டிருந்தார். "காலச்சுவடு' வெளியிட்ட அந்தப் புத்தகத்துடன், அவரை சந்திக்க தி.நகர் மூசா தெருவில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது ஒரு சுவாரஸ்யமான செய்தியை அவர் பகிர்ந்து கொண்டார்.

சமீபத்தில் மறைந்த பிரபல இசைக் கலைஞர் வாணி ஜெயராம், பிரபல பாடகி என்றுதான் உலகத்துக்குத் தெரியும். கல்லூரி நாள்களில் அவர் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் இருந்தவர் என்கிற தகவல், வேந்தர் ஜி. விசுவநாதன் சொல்லித்தான் நான் தெரிந்துகொண்டேன். அவர் பகிர்ந்து கொண்ட தகவல் இது -
"அப்போதெல்லாம் கல்லூரிகளுக்கு இடையிலும், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலும் பேச்சுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். சென்னை, அண்ணாமலை, திருவனந்தபுரம் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள, சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்கள் நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தோம். 

லயோலா கல்லூரியில் இருந்து நான், பச்சையப்பன் கல்லூரியிலிருந்து தெ. ஞானசுந்தரம், மாநிலக் கல்லூரியிலிருந்து சந்தான கிருஷ்ணன், ராணிமேரி கல்லூரியிலிருந்து கலைவாணி என்று சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் பங்கு பெற்றோம். சந்தான கிருஷ்ணன் அமெரிக்காவில் குடியேறிவிட்டார். தெ. ஞானசுந்தரம்தான் இன்றைய தமிழறிஞர் முனைவர் தெ. ஞானசுந்தரம். எங்களுடன் கலந்து கொண்ட கலைவாணி என்கிற அந்த மாணவிதான், பின்னாளில் பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகியாக வலம் வந்த வாணி ஜெயராம்!'

இலக்கிய மேடைகளில் வலம் வந்திருக்க வேண்டிய கலைவாணி, திருமணமாகி மும்பை சென்றதும், "குட்டி' ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமாகி, இந்தியாவின் பல மொழித் திரைப்படங்களில் பின்னணி பாடிப் பெயரும் புகழும் பெற்ற வாணி ஜெயராமாக உயர்ந்ததும் கலைவாணியின் அருள் அல்லால் வேறென்ன?

1971-இல் தொடங்கிய அவரது திரைப்படப் பின்னணி பாடல் பயணம் 19 மொழிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட திரைப்படங்களில் பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்கள், ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்கள் என்று, கடந்த வாரம் தனிமையில் இயற்கை எய்தும்வரை தொடர்ந்தது. 

வேந்தர் ஜி.வி-யிடம் விடைபெற்று வெளியே வந்தேன். அவரது "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை  பாடல்' (கண்ணதாசன்), "மல்லிகை என் மன்னன் மயங்கும்' (வாலி), "மேகமே... மேகமே...' (வைரமுத்து) பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக எனது நினைவில் மோதி இம்சித்தன. வாணி ஜெயராம் மறைந்தார் என்று எப்படிச் சொல்ல முடியும்?

--------------------------------------------------------------------

புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களிலேயே குறிப்பிடத்தக்க புத்தகம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டிருக்கும் "உ.வே.சா. நாட்குறிப்பு'. பதிப்பாசிரியர் பெ. சுயம்பு. அவரைத் தமிழகம் கரம் கூப்பித் தொழ வேண்டும்!

டாக்டர் உ.வே.சா. 1893 முதல் 1939 வரையில் நிகழ்ந்தவற்றை நாட்குறிப்புகளாக எழுதி வைத்திருந்தார். அவற்றில் 29 மட்டுமே கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அவர் பதிப்பித்த நூல்களின் முன்னுரைகளிலும், எழுதிய புத்தகங்களிலும் காணப்படும் குறிப்புகளுடன் ஒப்பிட்டு தொகுக்கப்பட்டிருக்கிறது "உ.வே.சா. நாட்குறிப்பு'.

காலை 7 மணி தொடங்கிக் களவழி நாற்பது ஒப்பிடப்பட்டது; 2 மணிக்கு மேல் மணிமேகலை படிக்கப்பட்டது. தலைவலியால் ஒன்றும் படிக்கவில்லை. ஐந்திணை ஐம்பதில் குறிஞ்சி ஒத்திடப்பட்டது. வீரசோழியத்தில் புத்தமதப் பாடங்கள் பொறுக்கி எடுக்கப்பட்டன - இது போன்ற குறிப்புகள்தான் அதிகம். அதேபோல, தென்காசிக்கு, டிக்கட்டு, குற்றாலத்துக்கு வண்டி என்று வரவு செலவுக் கணக்குகளும்.

"ஸ்ரீமான் டி.கே. சிதம்பரநாத முதலியார் வந்திருந்தார்; ஸ்ரீமான் வையாபுரிப்  பிள்ளை வந்து பேசிச் சென்றார்;  இன்று காலை காங்கிரஸ் கண்காட்சியில் ஸர்தார் வல்லபபாய் படேல் கண்காட்சியைத் திறந்து வைத்தார். நான் போய் வந்தேன். சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் முதலியோரைப் பார்த்தேன்.' -  இது போன்ற தகவல்களும் இருக்கின்றன.

உ.வே.சா. கால் கடுக்க தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்து பழந்தமிழ் ஓலைச் சுவடிகளையும், தாள் சுவடிகளையும் தேடிப்பிடித்து, ஒப்பிட்டு, ஆராய்ந்து, செம்மைப்படுத்தி, அச்சிலேற்றி நூலாக்கியதால்தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தமிழை நேசிக்கும் ஒவ்வொருவரும் வீட்டில் அவரது படத்தை வைத்து பூஜிக்க வேண்டும்.

ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியால் "தமிழ்த் தெய்வம்' என்றும், "தமிழ்த் தென்றல்' திரு.வி.க.வால் "தமிழ்க் கோயில்' என்றும் போற்றப்பட்ட அந்த மகானின் நாட்குறிப்பு அவரோடு பழகிய தமிழறிஞர்கள் குறித்தும், அவரது திட்டமிட்ட வாழ்க்கை குறித்தும் தெரிவிக்கிறது.

--------------------------------------------------------------------

அந்த சிறு கவிதைத் தொகுப்பின் பெயர் "கடல்'. எழுதியவர் கவிஞர் நித்திலன். அதிலிருந்தது இந்தக் கவிதை -
ஜனநாயகம் வேறொன்றுமில்லை
பதவியைப் பிடித்து
பணத்தைப் பறிப்பது
பணத்தைக் கொடுத்து
பதவியைப் பறிப்பது
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.