சுவடிச்சாலை எனும் சரஸ்வதி பண்டாரம்

எழுதுகோல் கொண்டு ஓலையில் எழுதுவதைப் பொறித்தல் (அரிச்சந்திரபுராணம், 962:1), தீட்டுதல் (குசேலோபாக்கியானம், 283:3) என்னும் பெயர்களில் முன்னோர் கூறியுள்ளனர்.
சுவடிச்சாலை எனும் சரஸ்வதி பண்டாரம்


எழுதுகோல் கொண்டு ஓலையில் எழுதுவதைப் பொறித்தல் (அரிச்சந்திரபுராணம், 962:1), தீட்டுதல் (குசேலோபாக்கியானம், 283:3) என்னும் பெயர்களில் முன்னோர் கூறியுள்ளனர். அதில் பொறித்த எழுத்துகள் தெளிவாகத் தெரிவதற்காக கறுப்பு மையினைத் தடவுவர். இதனை மகரவாய் மணிக்கட் செப்பின் மசிகலந் தெழுதப் பட்ட (சூளாமணி, 513:3) என்கிற பாடலடி சுட்டுகிறது. 

பொதுவாக ஓலையில் எழுதி வைத்தலால் அந்த எழுத்துகளும் "ஓலை' (திருவிளையாடற் புராணம், 646:3) என்ற பெயரையே பெற்றது. அவ்வோலையில் முதன் முதலாக எழுதுவதை மூலவோலை (202:3) என்றும் அம்மூலவோலையில் உள்ளதை அப்படியே மற்றொரு ஓலையில் எழுதுவதை படியோலை (202:3) என்றும் பெரியபுராணப் பாடலடிகள் கூறும்.     

முன்னோர்கள் ஓலையில் பல்வேறு நிகழ்வுகளை எழுதி வைத்தனர். அவற்றில் பிறந்த நாளைக் குறித்து வைத்தலால் சாதகவோலை (சூளாமணி, 310:4) என்றும் திருமணம் செய்வதற்கு நாள் குறித்து வைத்தலால் கண்ணாலவோலை (ஒளவையார் தனிப்பாடல்கள், 21:3) என்றும் கூறினர். இன்றைக்கும் திருமணம் நடைபெறுவதற்கு முன் நிச்சயம் செய்ய நல்ல நாள் குறித்துத் தாளில் எழுதுவதை 

முகூர்த்தவோலை என்று கூறும் வழக்கம் உள்ளது.   
எழுதி வைக்கும் ஓலைக்கு முடங்கல் (கம்பராமாயணம், 1915:4) என்னும் பெயரும் உண்டு. இது சுருட்டி வைத்தலால் இப்பெயரைப் பெறுகிறது. இதில் மன்னன் இடும்  முத்திரையை ஏட்டுப்
பொறி (பெருங்கதை, 4.10:109) என்றனர். 

முத்திரையிடப்பட்ட முடங்கலானது சுருட்டி இருந்தாலும் அதிலுள்ள எழுத்துகள் அழியாமல் அப்படியே இருக்கும். நெரிவடுப் படாத வேழப், புகர்முகப் பொறிய தாய (சூளாமணி, 513,1,2) என்னும் பாடலடிகள், ஓலையில் யானையின் முகப்புள்ளிகளைப் போலக் குண்டு குண்டாக எழுத்துகள் இருந்ததுடன் அவ்வெழுத்துகளில் வடுப்படவில்லை என்று கூறுகின்றன.    

எழுதிய ஓலையானது சுவடி என்ற பெயரைப் பெற்றிருந்தாலும் அதன் வேறு பெயர்களால் ஏடு (பெரியபுராணம், 2696:3), இலை (கம்பராமாயணம், 735:1), தோடு (கம்பராமாயணம், 1385:2), நுகும்பு (பெருங்கதை, 4:2:45) என்பதோடு நூல் பெயர்களால் புத்தகம் (நாலடியார்,318:1), பனுவல் (பரிபாடல், 6:7), கோசம் (பெருங்கதை, 1:38:167), தந்திரம் (பெருங்கதை, 2:3:82) ஓத்து  (பெருங்கதை, 4:16:43) என்றும் அழைக்கப்பட்டுள்ளன. 

இவ்வோலையில் மன்னர்களின் ஆணைகளை மங்கல வழக்காகக் கருதி எழுதியதால் அதனைத் திருமுகம் (சூளாமணி, 428:3) என்றனர். ஓலையைச் சுவடிகளாக உருவாக்கி அதில் எழுதாமல் இருந்தால் வெண்புத்தகம் (தணிகைப்புராணம்,அகத். 164:1), வெள்ளேடு (பெருங்கதை,1:32:69,70) என்று அழைப்பதுடன் அச்சுவடிகளில் எழுதினால் ஓலைச்சுவடி, ஏட்டுச்சுவடி, தீட்டுப்புத்தகம் (தணிகைப்புராணம்,அகத். 171:2) என்னும் பெயர்கள் பெறுவதைக் காணலாம்.  

எழுதிய பின்னர்ச் சுவடிகள் ஒவ்வொன்றுக்கும் எண்கள் இட்டு வரிசையாக அடுக்கி இரண்டு பக்கமும் சட்டத்தினை வைப்பர். அதற்குக் கம்பை (120) என்னும் பெயர் பெறுவதைப் பாசவதைப் பரணி கூறுகிறது. இச்சட்டத்தைக் கொண்டு கயிற்றால் கட்டுவதற்குச் சுவடியின் இருபுறமும் துளையிட்டு இருப்பர். இத்துளைகளைக் காது என்பர். 

இத்துளைகளில் கயிற்றைக் கட்டி உருவாக்கப்பட்டதைப் பொத்தகக் கட்டு (பெருங்கதை1:36:225) என்பர். இச்சுவடிக் கட்டுகளை வரிசையாக அடுக்கிப் பாதுகாப்பதற்குப் பையைப் பயன்படுத்துவர். அதனைக் கவளிகை (பெரியபுராணம், 481:1) என்றனர். பையில் வைத்திருக்கும் சுவடிக் கட்டுகளைக் கற்பிப்பதற்காக வேற்றிடம் எடுத்துச் செல்வதுண்டு. அதற்குப் பயன்படுத்தும் பலகையை அசை என்கிறது தமிழ்விடு தூது (24).   

சுவடிக் கட்டுகளை அடிக்கடி எடுத்துப் படிப்பதனாலும் பூச்சுகள் அரிப்பதாலும் அவற்றில் சிதைவுகள், முறிவுகள் போன்றவை ஏற்படும். அவற்றுள் பூச்சிகளால் அரிப்பு ஏற்படுவதைச் செல்லரித்த வோலை (53:1) என்று திருவரங்கக் கலம் பகம் குறிப்பிட்டுள்ளது. சில நேரங்களில் சுவடிக்கு நெருப்பு, மழை போன்ற இயற்கையாலும் அழிவு ஏற்படும். அவற்றுள் நெருப்பில் அகப்பட்டுக் கருகாமல் இருந்த சுவடியைப் பச்சையேடு (3216:1) என்று திருவிளையாடற் புராணம் எடுத்து இயம்புகிறது.  

சுவடிக்கட்டுளை அறிவு செல்வமாகக் கருதிப் பாதுக்காத்தனர் முன்னோர். அவை இருக்குமிடத்தைச் சுவடிச்சாலை (புலவராற்றுப்படை, 172) என்றதோடு கல்வி கடவுளாகிய சரஸ்வதி பெயரால் சரஸ்வதி பண்டாரம் என்றும் அழைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com