மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நிலமும் பொழுதும் களமும் காலமும்

நிலம் என்பது நாம் வாழும் நிலப்பகுதியாகும்.  நிலத்துக்கு,  சிறுபொழுது பெரும்பொழுது என்று பருவநிலை கண்டனர் பழந்தமிழர். நிலமானது களம் என்றும் இடம் என்றும் பொருள்படும்.

News image
Updated On :1 ஜனவரி 2023, 1:12 pm

DIN


நிலம் என்பது நாம் வாழும் நிலப்பகுதியாகும்.  நிலத்துக்கு,  சிறுபொழுது பெரும்பொழுது என்று பருவநிலை கண்டனர் பழந்தமிழர். நிலமானது களம் என்றும் இடம் என்றும் பொருள்படும். களத்துக்குக் காலம் உண்டு. நொடிப்பொழுதாய் மணித்துளியாய்  நகர்ந்து, நாள் மாதங்களாய் பல்வேறு பருவங்களாய், நிகழ்ந்த நிகழ்வுகளின் நேரம் அளவுகளாய் ஆனதே காலம். அறிவியல் அடிப்படையில் கூறினால், இடம் என்பது இரண்டு பொருள்களுக்கு நடுவில் உள்ள தூரமாகும். காலமும் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே நிகழும் தொடர்புடைய நேர அளவாகும்.

இயற்கையாய் அமைந்த இயற்பொருள்களும் செயற்கையாய் மனிதர் செய்த செயற்பொருள்களும் களத்திலும் காலத்திலும் இருப்புக் கொண்டவை. இப்பொருள்களும் இவற்றால் ஆன மனித வாழ்வும் இருப்பதால்தான் களமும் காலமும் இருக்கின்றன. காலம் களத்தினுள் அடங்கும்.

தமிழர்களின் தொன்மை இலக்கண நூல் தொல்காப்பியம். அதன் ஆசிரியர் தொல்காப்பியர், நிலத்தையும் பொழுதையும் முதற்பொருள் என்றும் அவற்றில் நிலைகொண்ட இயற்பொருள்-செயற்பொருள்கள் கருப்பொருள் என்றும் முதற்பொருள் கருப்பொருள் இரண்டையும் சார்ந்த ஆண், பெண் காதல்,  ஒழுக்கம், உரிப்பொருள் என்றும் பொருளதிகாரத்தில் பொருள் தருகின்றார். 

புவியியல் பருவநிலைக்கு ஏற்ப அமைந்திருந்த பழந்தமிழர் திணைவாழ்க்கை முறையை அகத்திணை, புறத்திணை இயல்களில் கூறுகின்றார். அகத்திணை, மக்களின் அகவாழ்க்கை, தனிவாழ்வைக் குறிக்கும். புறத்திணை, வெளிவாழ்க்கை - சமுதாய வாழ்வைக் குறிக்கும்.

திணை என்ற சொல்லுக்கு, நிலம், குலம், ஒழுக்கம் என்று பொருளாகும். சொல்லதிகாரத்தில் உயர்திணை மக்களைக் குறிக்கிறது. இதன் அடிப்படையாய் விளங்குவது, நிலத்தையும், நிலத்தில் குழுவாக - குலமாக வாழ்ந்த மக்களையும் குறிப்பதாகும். முதலில் நிலம், பின்னர் நிலத்தில் வாழ்ந்த மக்கள், அவர்களின் வாழ்க்கை முறை, ஒழுக்கம் என விரிந்தது.

அகத்திணை கூறும் அகப்பொருள் திணைகள் ஏழு என்றார் தொல்காப்பியர். அவற்றில் கைக்கிளை, பெருந்திணை இரண்டையும் முறையே ஒருதலைக்காமம், பொருந்தாக்காமம் என ஒதுக்கினார். ஐந்து திணைகளில் பாலைத் திணைக்குத் தனியாக நிலம் இல்லையென்று அதனை நடுவில் வைத்து நிலத்தை நான்கு திணைகளாய் வகுத்தார். ஒவ்வொரு திணைக்கும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் உரைத்தார். ஓர் ஆண்டிற்குரிய ஆறு பருவங்கள் பெரும்பொழுது என்றும், ஒரு நாளுக்குரிய ஆறு பொழுதுகள் சிறுபொழுது என்றும் காலநிலையும் கணித்துள்ளார். 

திருமால் தெய்வம் ஆன காடும் காடுசார்ந்த நிலமும், முருகன் தெய்வம் ஆன மலையும் மலைசார்ந்த நிலமும், இந்திரன் தெய்வம் ஆன வயலும் வயல்சார்ந்த நிலமும், வருணன் தெய்வம் ஆன கடலும் கடல்சார்ந்த நிலமும், முறையே முல்லைத்திணை, குறிஞ்சித்திணை, மருதத்திணை, நெய்தல் திணை என நான்கு திணைகளாய்ப் பகுத்து, சிறுபொழுது பெரும்பொழுது ஆகிய காலமும் குறித்துள்ளார். முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்த நிலமே பாலை. திரிந்த நிலத்தை அவர் தனிநிலமாகக் கொள்ளவில்லை. அதற்குத் தெய்வமும் கூறவில்லை.

"முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் பாடுமே'' என்னும் நூற்பாவால் நிலம் நான்கே என்று கொண்டார். இதனால் நானிலம் என்ற பெயரும் எழுந்தது. இதற்குப் பூமி உலகம் என்றும் பொருளாகும். எனினும் அன்றைய தமிழ்மரபில், அன்பின் ஐந்திணையே - ஐந்து திணைமுறையே நிலவியிருந்தது.

பழங்காலத் தமிழகத்தின் புவியியல் படிநிலை வளர்ச்சியையும் பண்பாட்டு மலர்ச்சியையும் பதிவு செய்துள்ளார் வரலாற்றுப் பேராசிரியர் பி.டி. சீனிவாச ஐயங்கார்.

"ஐவகை நிலங்களும் ஒன்றையொன்று தொட்டபடி வரிசையாக அமைந்திருப்பது விந்திய மலைக்குத் தெற்கிலேயே. மனித நாகரிகத்தின் ஐந்து படிநிலைகளும் இவ்வைகை நிலங்களில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் விளைவுகளே. மனித நாகரிகம் நிலவியலின் ஆட்சிக்கு உட்பட்டதே என்பதைத் தென்னக அமைப்பையும் மக்கள் வாழ்க்கை முறையையும் கூர்ந்து நோக்கி உணர்ந்து கொள்ளலாம்''.

தொல்காப்பியரும் தமிழர் நாகரிகத்தின் ஐந்து படிநிலை வளர்ச்சியையும் ஒரு நிலத்தின் வாழ்க்கையிலிருந்து இன்னொரு நிலத்தின் வாழ்க்கைமுறை தோன்றியது என்பதையும் திணைவைப்பு முறையால் உணர்த்துகின்றார். குறிஞ்சி நிலத்தில்தான் தொடக்க கால மனிதர் வாழ்க்கை தொடங்கியது. 

திணை வரிசையில் முல்லையை அவர் முதலில் வைத்தாலும் அடுத்து வந்த நூற்பாக்களில் குறிஞ்சிதான் முதல்திணை என்கிறார். ""புணர்தல் பிரிதல்'' நூற்பாவில் முதலில் வருவது குறிஞ்சி ஒழுக்கமே. புறத்திணை இயலில் முதலில் வருவது குறிஞ்சித்திணையின் புறத்திணையாகிய வெட்சியே !

"வெட்சி தானே குறிஞ்சியது புறனே''

வெட்சித்திணை வீரர்களின் வாழ்க்கைக்குரிய இடம் - களம் குறிஞ்சி நிலமே. வெட்சி என்பது புறவாழ்க்கை, சமுதாய வாழ்க்கை ! குறிஞ்சி அதன் அகவாழ்க்கை, தனிவாழ்க்கை ! குறிஞ்சி நிலத்தில் நடப்பதுதான் வெட்சி வாழ்க்கை ! வெட்சி என்னும் தனிமனித வாழ்க்கை. எனவே குறிஞ்சித்திணைத்தான் முதல் திணையாகும்.

வேளாண்மை செழித்து வளர்ச்சிபெற்ற மருதநில நாகரிகக் காலத்தின் நிலவுடைமைச் சமுதாயத்தில் வாழ்ந்தவர் தொல்காப்பியர். அவர், தமது காலத்துக்கு முற்பட்ட குறிஞ்சிநில வேடர்களின் தொன்மை வேட்டுவ வாழ்க்கைச் சமுதாயம், முல்லைநில ஆயர்களின் கால்நடை வளர்ப்புச் சமுதாயம், பாலைநில எயினர்களின் பண்பாடற்ற சமுதாயம், தமது காலத்தின் மருதநில உழவர்களின் வேளாண்மைச் சமுதாயம், தமது காலத்திலேயே வளர்ச்சி பெற்றுவிட்ட நெய்தல்நிவல பரதவர் - வணிகர்களின் வாணிகச் சமுதாயம் ஆகியவற்றின் வாழ்நிலையும் சூழ்நிலையும் ஆராய்ந்து சமுதாய வரலாறு சாற்றியுள்ளார்.

ஐந்திணை எனப்படும் ஐவகை நிலப்பகுதிகளிலும் வேறு வேறு வாழ்க்கை முறைகள், வேறுபாடுகள் இருந்துள்ளன. புவியியல் படிமுறை வளர்ச்சியில் ஒவ்வொரு நிலத்தின் சமுதாய வாழ்வும் தனிமனித வாழ்வும் பருவகால நிலைகளும் வேறுபட்டிருந்தன. 

இவற்றையெல்லாம் ஆய்ந்தறிந்து திணைகள் ஐந்திணையும் சீராக ஒருங்கிணைத்து சீரிய இலக்கண நூல் வழங்கியுள்ளார் என்பது தான் தொல்காப்பியர் சிறப்பு ! நூற்றாண்டுகள் பலவற்றுக்கும் முன்பே ஏற்றமிகு தமிழுக்கு இலக்கணம் கண்ட மொழிநூல் அறிஞர். எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமல்ல பொருளால் ஆன பொருளியல் வாழ்வுக்கும் இலக்கணம் கூறிய இலக்கிய மேதை. களமும் காலமும் கண்டறிந்த கணக்காயரும் ஆவார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.