
இலக்கியங்களில் நாம் படித்திருக்கும் பல கதைகள் நமக்குக் கற்பனைக் கதைகளாகவே தோன்றும். ஆனால் அவையனைத்தும் உண்மை நிகழ்ச்சிகளாக இருந்திருக்குமோ என்று வியக்குமளவு சான்றுகள் கிடைக்கும்போது அது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.
திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட சீவக சிந்தாமணி என்னும் காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது. ஏமாங்கத நாட்டு அரசன் சச்சந்தன் தனது மனைவி விசயை என்பவளின் மீது கொண்ட காதலால் கட்டியங்காரன் என்னும் அமைச்சனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுக் கருவுற்ற தனது மனைவியுடன் காலம் கழிக்கிறான்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட கட்டியங்காரனோ தனது சூழ்ச்சியால் மன்னன் சச்சந்தனை கொன்று, ஏமாங்கத நாட்டினைக் கைப்பற்றுகிறான். இதற்கிடையில் சூழ்நிலையைப் புரிந்துகொண்ட சச்சந்தன் தனது மனைவியை மயிற்பொறியில் வைத்து தப்பிக்கச் செய்கிறான். இடுகாட்டில் விசயை ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.
குழந்தைப் பருவம் முதற்கொண்டு சீவகனைக் கந்துக்கடன் என்னும் வாணிகன் வளர்த்து வருகிறான். உரியப் பருவம் எய்தியதும் தன் நாட்டைப் பெறுவதற்குத் தாயின் அறிவுரையோடு, மாமன் கோவிந்தனின் துணைகொண்டு போரிட்டு தன்நாட்டை கைப்பற்றுகிறான் சீவகன். அச்செய்திகளை விரிவாக விளக்கிக் கூறும் நூலே சீவக சிந்தாமணி என்னும் காப்பியம்.
இதுபோன்ற நிகழ்ச்சியை நினைவுப்படுத்தும் வகையில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுகல் கல்வெட்டு நமக்குக் கிடைத்திருக்கின்றது. சங்க இலக்கியங்கள் நடுகற்கள் குறித்து விரிவாகப் பேசுகின்றன. தகடூர் பகுதியில் பாணர் அல்லது வாணர் என்போர் சங்க காலம் தொடங்கி நாயக்க அரசு தமிழகத்தில் ஏற்படுவதற்கு முன்புவரை சிறுசிறு பகுதியையோ பெரும் பகுதியையோ ஆண்டு வந்துள்ளனர்.
அகநானூற்றுப் பாடல்கள் 113, 325 ஆகியன பாணர்களைக் குறித்துப் பதிவு செய்திருக்கின்றன. பல்லவர், கங்கர் போன்று வாண அரச மரபினர்களின் கல்வெட்டுகளும் தகடூர் பகுதிகளில் கிடைக்கின்றன. இவர்கள் தங்களை மகாபலிச் சக்கரவர்த்தியின் வழி வந்தவர்கள் என்று கூறிக் கொள்கின்றனர். இவர்களுடைய கல்வெட்டுகளும் நடுகல் கல்வெட்டுகளாகவே கிடைக்கின்றன.
மாவலிவாணராயர், கந்தவாணாதியரையர், அரிமிறை பருமர்போன்ற மன்னர்களின் பெயர்கள் கல்வெட்டில் வருகின்றன. மாவலி வாணரின் ஆட்சிக்காலம் கி.பி. 8, 9-ஆம் நூற்றாண்டு என அறிஞர்களால் கருதப்படுகிறது. நந்தகிரியின் தலைநகரான கோலார் மாவட்டமே பாணரின் தாயகம் என்றாலும் கர்னூல் மாவட்டம் வரை இவர்கள் பரவி இருந்தனர். இவர்களின் ஆட்சிப்பகுதி வாணர்நாடு, பாணப்பாடி, பெரும்பாணப்பாடி, வடுகழி என்றெல்லாம் அழைக்கப்பட்டது.
மேலைக் கங்கருடன் பகை கொண்டிருந்த பாணர் பல்லவரின் கீழ் நாடாண்டுள்ளனர். தருமபுரியில் கிடைத்த வாணர் அரசரின் வரலாற்றைக்கூறும் நடுகல் சிற்பம் ஒன்று தமிழ் கல்வெட்டுடன் காணப்படுகின்றது. இந்த நடுகல்லில் உள்ள வீரனின் உருவம் நின்ற நிலையில் அம்புகளால் தைக்கப்பட்டு, நடுகல் வீரனின் இரு மருங்கிலும் கல்வெட்டு எழுத்துகள் காணப்படுகின்றது. இடது கரத்தில் வில்லும், வலது கரத்தில் வாளும் கொண்டு காணப்படும் இந்த நடுகல் தருமபுரியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தகடூர்ப் பகுதியை மாவலிவாணராயர் என்பவர் ஆண்டு வந்தார். நுளம்பன் என்பவன் அவருடைய உறவினன் போல் நடித்து, வஞ்சித்து அவரது நாட்டைக் கைப்பற்றினான். இதனால் இருவருக்கும் போர் நிகழ்ந்தது. அதில் மாவலிவாணராயர் மாண்டு போனார். அப்போது அவர்தம் மனைவி கருவுற்றிருந்தாள். சங்கரக்குட்டியார் என்பவர், அத்தேவியைக் காப்பாற்றி அவளுக்கு ஆண்மகவு பிறந்தபின், பெரும்படையொன்றைத் திரட்டித் தன் தலைவனை வஞ்சித்துக் கொன்ற நுளம்பன்மீது போர் தொடுத்தார்.
அப்போரில் சங்கரக் குட்டியாருடன் உதவிக்குச் சென்ற நாகந்தைச் சிறு குட்டியார் என்ற வீரன் இறந்துபட்டான், அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. அந்த நடுகல்லில் அவனது பீடும் வீரமும் பொறிக்கப்பட்டது.
கல்வெட்டுப்படி:
ஸ்ரீ அரிமிதைய மாவலி வாணராயர்..
அவர்க்குத் தாநாகிப் பிள்ளைய்கொண்டுள் புகுந்து
வஞ்சித்து நாடுகொண்டா னுளம்பன்
அவர் போரிற்றுஞ்சின பின்னைத் தேவிமார் கருப்பிணி
யருளராக அவளைக்காத்திருந் தாண்பிள்ளைப்
பெறுவதுந்
தகடூர் புகுந்து நுளம்பன் பலத்தோடே துணிந்து
நாடு பாவிநார் சங்கரகுட்டியார் அவரோடுடன் புகுந்து
தகடூரில் பட்டார் நாகந்தை சிறுகுட்டியார் கல்நடு
சீவக சிந்தாமணி காப்பிய காலமும் இக்கல்வெட்டுக் காலமும் வெவ்வேறானவை. இரண்டிலும் கதை மாந்தர்கள் வெவ்வேறானவர்கள். ஆனால் காப்பியத்திலும் கல்வெட்டிலும் வரும் ஒத்த கதை அமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இவ்வாறாக இலக்கியமும் கல்வெட்டும் சொல்லும் கதைகள் உண்மைத் தன்மையுடனும் சில கதைகள் ஒரேமாதிரியும் இருப்பதை அறியமுடிகின்றது.
படம்: தருமபுரி அருங்காட்சியகத்தில் உள்ள நடுகல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.