இந்த வாரம் கலாரசிகன் - 11-06-2023
வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களின் காரணகாரியங்கள் நமது சிற்றறிவுக்கு அப்பாற்பட்டவை என்பதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஐயா ஆ. சிவராமகிருஷ்ணனின் மறைவுகூட அப்படிப்பட்ட ஒன்றுதான்.


வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களின் காரணகாரியங்கள் நமது சிற்றறிவுக்கு அப்பாற்பட்டவை என்பதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஐயா ஆ. சிவராமகிருஷ்ணனின் மறைவுகூட அப்படிப்பட்ட ஒன்றுதான்.
அடுத்த நாள் தென்காசியில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும், ஐயாவைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்றெல்லாம், நேற்று நடக்கவிருந்த தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 96ஆவது திருக்குறள் விழாவில் கலந்துகொள்ள, வியாழக்கிழமை நெல்லை வந்தபோது திட்டமிட்டிருந்தேன். ஆனால், அன்று மாலையில் திருவள்ளுவர் கழகத் தலைவர் ந. கனகசபாபதி என்னைத் தொலைபேசியில் அழைத்து பெரியவர் சிவராமகிருஷ்ணன் ஐயா மறைந்துவிட்டார் என்கிற தகவலைத் தெரிவித்தபோது, என்னால் அதை நம்பவே முடியவில்லை.
93 வயதிலும் தமிழ், திருவள்ளுவர் கழகம் என்று இயங்கிக் கொண்டிருந்தவர் திடீரென்று இறையடி அடைவார் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்? இத்தனைக்கும், கடந்த சனிக்கிழமை அதாவது ஜூன் 3ஆம் தேதி நடைபெற்ற திருக்குறள் விழாவின் தொடக்கநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்ற நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியனின் தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் அறிமுக உரையாற்றி இருக்கிறார்.
அடுத்தநாள் முதல், உடல்நலக் குறைவு, வயோதிகம் காரணமாக, அவர் தங்கியிருந்த சங்கராஸ்ரமத்தில் இருந்தபடி நிகழ்ச்சிகளை யூடியூபில் பார்த்தபடி இருந்திருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்த முனைவர் அரங்க. இராமலிங்கம், அவரை சந்திக்கச் சென்றபோது "எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது' என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
துணைவியாருடன் வரவேண்டும் என்பது முனைவர் தெ. ஞானசுந்தரத்துக்கு ஐயா சிவராமகிருஷ்ணன் இட்டிருந்த கட்டளை. நான்கு நாள்கள் இருந்துவிட்டுப் போகலாம் என்று திட்டமிட்டிருந்த தெ.ஞா.விற்கு, நிகழ்ச்சிகள் முடியும் வரை தென்காசியில் தங்கிவிட்டுத்தான் போக வேண்டும் என்பது அவரது அடுத்த அன்புக் கட்டளை.
96ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்று ஒரு மாதத்திற்கும் மேலாக தினந்தோறும் அவரால் அடையாளம் காணப்பட்டு, தலைவராக்கப்பட்டிருக்கும் வழக்குரைஞர் ந. கனகசபாபதியுடன் விவாதித்து முடிவெடுத்ததும் ஐயாதான்.
நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியனும், "தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதனும் தொடக்க விழா அல்லது நிறைவு விழாவில் இடம்பெற வேண்டும் என்பது அவரது தீர்க்கமான முடிவாக இருந்தது என்று வழக்குரைஞர் கனகசபாபதி சொன்னபோது, என்மீது அவருக்கு இருந்த அன்பை நினைத்து நான் நெகிழ்ந்து போனேன்.
பூவுலக வாழ்வை விடுத்துத் தனது குருவின் திருவடிகளை அடையும் நிகழ்வில் யார் யார் இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ அவர்கள் இருப்பதை உறுதி செய்தார். திருவள்ளுவர் கழக ஆண்டு விழா நடக்கும் வேளையாக இல்லாமல் இருந்திருந்தால், அவரது சித்தியின்போது இத்தனை தமிழறிஞர்கள் அங்கே வந்திருக்க முடியாது.
தான் இல்லாவிட்டாலும் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது. சரியான ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டோம். அவருக்குத் துணைநிற்க சரியான நபர்களை அடையாளம் காட்டிவிட்டோம். தனது கடமை முடிந்துவிட்டது என்கிற மனநிறைவுடன் தனது 93ஆவது வயதில் அந்த "குறள் சித்தர்' சங்கராஸ்ரமத்தில் சித்த வித்யார்த்தி முறைப்படி சமாதி நிலையை எய்தியிருக்கிறார்.
1953ஆம் ஆண்டு தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 26ஆவது ஆண்டுவிழாவில் துணைச் செயலாளராகவும், 1965இல் 38ஆவது ஆண்டுவிழாவில் செயலாளராகவும் பொறுப்பேற்றுக்கொண்ட சிவராமகிருஷ்ணன் ஐயா, அந்த அமைப்பின் நூற்றாண்டு விழா வரையில் இருந்திருக்கலாம். "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து இவ்வுலகு.'
--------------------------------------------
ஒவ்வொரு தமிழறிஞரும் தனது வாழ்நாள் சாதனையாக அல்லது கடமையாகக் கருதுவது ஒன்று இருக்குமானால், அது திருக்குறளுக்கு உரை எழுதுவதுதான். தமிழிலேயே மிக அதிகமாக அச்சிடப்படும் நூல் என்பது மட்டுமல்லாமல், மிக அதிகமாக உரை எழுதப்படும் நூலும் திருக்குறளாகத்தான் இருக்கும்.
திருக்குறளுக்கு எத்தனையோ பேர் உரை எழுதினாலும் அவற்றில் ஆகச்சிறந்த உரை எது என்று கேட்டால், அது பரிமேலழகர் உரையாகத்தான் இருக்கும். அதற்குப் பிறகு எழுதப்பட்ட எல்லா உரைகளும் பரிமேலழகரை அடிப்படையாகக் கொண்டு அதில் சில கருத்துகளை மாற்றியும், தவிர்த்தும், வேறுபட்டும் எழுதப்பட்டிருக்குமே தவிர, பரிமேலழகரை முற்றிலுமாக தவிர்த்திடுதல் இயலாது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, ஒருமுறை பழ. கருப்பையா என்னை சந்திக்க அலுவலகத்துக்கு வந்திருந்தார். எங்கள் பேச்சு திருக்குறள் உரையாசிரியர்கள் குறித்துத் திரும்பியது. அப்போது அவர்தான் எனக்கு பரிமேலழகரின் உரை சிறப்பு குறித்து விளக்கமாக எடுத்துக்கூறி புரிய வைத்தார்.
திருக்குறள் பரிமேலழகர் உரையை பரிசுப் பதிப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் ஜெயக்குமார்.
--------------------------------------------
சென்னை தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரியின் தமிழ்த் துறை ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கியதற்கு, எத்துணை பாராட்டினாலும் தகும். "படைப்பிலக்கியம்' என்ற பாடத்தின் ஒரு பகுதியாக, மூன்றாமாண்டு தமிழ் இலக்கிய மாணவர்களைப் புதுக்கவிதைகள் எழுதப் பணித்து, அவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறார்கள், அந்தக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள்.
உதவிப் பேராசிரியர் சு. இரமேஷின் முனைப்பும், தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ச. முருகேசனின் வழிகாட்டுதலும், கல்லூரி இயக்குநர் முனைவர் நா. இராசேந்திர நாயுடுவின் ஆதரவும், முதல்வர் முனைவர் க. கல்விக்கரசியின் ஊக்கமும், அந்தக் கவிதைகளைப் "பொதும்பர்' என்கிற கவிதைத் தொகுப்பாக மலரச் செய்திருக்கின்றன. அதிலிருந்து கோ.பு. ஹேமலதா எழுதிய "உணவு' என்கிற கவிதை உங்கள் பார்வைக்கு
பீட்சா பர்கர் உண்ணும்
நகரவாசிகள்
வெளிநாட்டவர்களாகத்
தெரிகிறார்கள்
கிராமவாசிகளுக்கு...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...