
"பாட்டும் தொகையும்' என்ற சங்க இலக்கியப் பகுப்பில் முதன்மையான இலக்கியம் பத்துப்பாட்டாகும். பத்துப்பாட்டில் முதலாவதான திருமுருகாற்றுப்படை, முருகப்பெருமானை "வானோர் வணங்குவில் தானைத்தலைவ' (260-ஆம் அடி ) என்று போற்றுகின்றது. இதன் பொருள், "தேவர்கள் வணங்கிய வில்லை ஏந்தியபடைத் தலைவனே' என்பதாகும்.
முருகன் திருக்கரத்தில் வில்லும் உண்டு என்பதை "காலனார்' எனத் தொடங்கும் திருச்செந்தூர்த் திருப்புகழில் அருணகிரிநாதர் "சூலம் வாள் தண்டு செஞ்சேவல் கோதண்டமும் சூடுதோளும்' என்று பாடியுள்ளதிலிருந்து அறியலாம். சாய்க்காடு முதலிய தலங்களில் தனுர்த்தர சுப்பிரமணிய மூர்த்தியின் திருவுருவத்தைக் காணலாம் என்று தமிழறிஞர் கி.வா.ஜ. தமது "திருமுருகாற்றுப்படை விளக்கம்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் (அல்லயன்ஸ் வெளியீடு, சென்னை4 மூன்றாம் பதிப்பு, 2018 ப.301)
மகாகவி பாரதியார் தமது ஞானப்பாடல்களில் ஆறாவதாகிய ஜீவன்முக்தி (2) என்பதில் "விசனப்பொய்க்கடலுக்குக் குமரன் கைக்கணையுண்டு' என்று தமது உறுதிப்பாட்டைப் பெருமிதத்துடன் பாடியுள்ளார் ; இதில் வில்லேந்திய வேலவனையே குறிப்பிட்டுள்ளார்; திருநாவுக்கரசர் திருவாரூர் திருத்தாண்டகத்தில் "பொய்ம்மாயப் பெருங்கடலில்' என்று பாடியுள்ளார்.
இனி வில்லவனாகிய ஸ்ரீராமன் வேலேந்திய திருக்கோலத்தை வலிவலம் என்ற தலத்துக்குரிய "தொடுத்தநாள்' எனத் தொடங்கும் திருப்புகழில் பின்வருமாறு காண்போம்:
"எடுத்த வேல்பிழை
புகலரி தெனஎதிர்
விடுத்து ராவணன்
மணிமுடி துணிபட
எதிர்த்து மோர்கணை விடல்தெரி
கரதலன் மருகோனே!'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.