ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

வையாபுரியார் பதிப்பித்த நிகண்டு! 

தமிழில் சேந்தன் திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, ஆசிரிய நிகண்டு, கயாதர நிகண்டு எனப் பல நிகண்டுகள் உள்ளன.

Published On :

தமிழில் சேந்தன் திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, ஆசிரிய நிகண்டு, கயாதர நிகண்டு எனப் பல நிகண்டுகள் உள்ளன. இந்நிகண்டுகளுள் பலராலும் அறியப்படாத நிகண்டு கயாதர நிகண்டாகும். 

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறைத்தலைவராக இருந்த பேராசிரியர் எஸ்.  வையாபுரிப் பிள்ளை  கயாதர நிகண்டின் மூலத்தை மட்டும் பாடபேதங்களுடன் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பை சென்னை சர்வகலாசாலை என்று அழைக்கப்பெற்ற சென்னைப் பல்கலைக்கழகம் 1939ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது (ஜி.எஸ். பிரஸ், மெட்ராஸ்; பக்கம் 107; விலை ஒரு ரூபாய்). 

வையாபுரிப் பிள்ளை இந்நூலுக்கு  எழுதியுள்ள முன்னுரையில், "கயாதாரத்தைப் பதிப்பிக்க கிடைத்த பிரதிகள் நான்கு. அதாவது மூன்று ஓலை பிரதிகள்;  ஒன்று கடித பிரதி. இவற்றுள் டாக்டர் உ.வே.சா. வழங்கியது ஒரு கடித பிரதியும் ஓர் ஓலை பிரதியும். மற்றைய இரண்டு ஓலை பிரதிகளில் ஒன்று மதுரைத் தமிழ்ச்சங்கத்திற்குரியது; மற்றொன்று த. கனகசுந்தரம் பிள்ளையவர்களுடையது' என்று குறிப்பிட்டுள்ளார் (பக்கம் 13). 

கயாதர  நிகண்டு, பாயிரம் நீங்கலாகப் பதினொரு தொகுதிகளைக் கொண்டுள்ளது. இந்நிகண்டின் யாப்பியல் முறை குறித்து, எஸ். வையாபுரிப் பிள்ளை இவ்வாறு குறிப்பிடுகிறார்: கயாதரத்தின் அமைப்பில் முதலாவது நோக்கத்தக்கது அது கட்டளைக் கலித்துறையில் இயற்றியுள்ளமை. இவ்வகைப் பாவினம் தமிழுலகில் முற்காலத்தில் பெருவழக்காக இருந்தது. யாப்பிருங்கலக்காரிகை முதலிய நூல்களும், எண்ணிறந்த கோவைகளும் இதற்குச் சான்று பகர்வன. 

கட்டளைக் கலித்துறையால் மகடூஉ முன்னிலையாக கயாதரர் தமது நிகண்டு நூலினை இயற்றினார். கற்பவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுதலையே பிரதானமாகக் கருதி வேறோர் உபாயத்தையும் இந்நூலாசிரியர் கையாண்டனர். இவ்வுபாயமானது நூல் முழுவதையும் அந்தாதித் தொடையாக அமைத்தமை (முன்னுரை, ப.14).

இந்நிகண்டின் காலத்தைத் திட்டமாக வரையறுத்தற்குரிய சான்றுகள் இல்லை. இருப்பினும், மாறனலங்கார உரையில் இந்நூல் எடுத்தாளப்பட்டதால் அதன் உரையாசிரியரான காரிரத்ன கவிராயர் காலமாகிய கி.பி.1575ஆம் ஆண்டாகவும் இருக்கலாம் என்று பதிப்பாசிரியர் குறித்துள்ளார். 
பதிப்பாசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை, தம் பதிப்பின் இறுதியில், செய்யுள் முதற்குறிப்பு அகராதியையும், பதினொரு தொகுதியின் பொருளடக்கத்தையும் இணைத்துள்ளதும் அறியத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.