ரசிகமணியின் சீடரான லானா சானா!

தமிழ் இலக்கியப் பரப்பில் "லானா சானா' என்று அழைக்கப்பட்டு வந்த வித்துவான் ல. சண்முகசுந்தரம், கோவில்பட்டி அருகிலுள்ள நாச்சியார்புரம் கிராமத்தில் லட்சுமணன் அருணாசல வடிவாம்பாள் தம்பதிக்கு 1923ஆம்
ரசிகமணியின் சீடரான லானா சானா!
Published on
Updated on
2 min read

தமிழ் இலக்கியப் பரப்பில் "லானா சானா' என்று அழைக்கப்பட்டு வந்த வித்துவான் ல. சண்முகசுந்தரம், கோவில்பட்டி அருகிலுள்ள நாச்சியார்புரம் கிராமத்தில் லட்சுமணன் அருணாசல வடிவாம்பாள் தம்பதிக்கு 1923ஆம் ஆண்டு வைகாசி விசாகம் அன்று பிறந்தார். ஐந்து வயது வரை திண்ணைப் பள்ளியிலும், பின்னர்  இடைசெவல் நடுநிலைப் பள்ளியிலும் பயின்றார். 
இடைச்செவலில் வசித்து வந்த எழுத்தாளர்கள் கி. ராஜநாராயணனும், கு. அழகிரிசாமியும் இவரது தோழர்களாகத் திகழ்ந்தவர்கள்.194142இல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் (தற்போதைய மதுரைச் செந்தமிழ் கல்லூரி) தமிழ் பயின்றார். அப்போது அவருக்கு பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் அறிமுகம் கிடைத்தது. அவரது ஆலோசனையின் பேரில் திருவையாறு அரசர் கல்லூரியில் வித்துவான் படிப்பை முடித்தார். அதன்பின், விருதுநகர், கழுகுமலை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ஊர்களில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். 
ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாருக்கும், ல. சண்முகசுந்தரத்திற்கும் குருசிஷ்ய உறவு இருந்தது. பாஸ்கரத் தொண்டமான், ஜஸ்டிஸ் மகராஜன், மீ.ப. சோமு, சுந்தா ஆகியோரைத் தொடர்ந்து ரசிகமணியின் கடைக்குட்டி சீடரானார் ல. சண்முகசுந்தரம். 
1948இல், ல.சண்முகசுந்தரத்தை சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் விரிவுரையாளராக நியமித்து உத்தரவு வந்தது. அதை அவர் ரசிகமணியிடம் காட்டியிருக்கிறார். "என்னிடமிருந்து சண்முகசுந்தரத்தைப் பிரிக்கப் பார்க்கிறீர்களா? அவர் வேலையில் சேர மாட்டார்' என்று கல்லூரி முதல்வருக்குத் தந்தி கொடுத்தார் டி.கே.சி. ரசிகமணியின் அச்சொல் வித்துவானின் உள்ளத்தில் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சியது.  
திருக்குற்றாலத்தில் 1953-இல் ரசிகமணியின் "கம்பர் தரும் ராமாயணம்' நூல் வெளியீட்டு விழா அப்போதைய முதல் அமைச்சர் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் நடந்தது. அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொண்ட அவ்விழாவில் ல.ச.வையும் பேச அழைத்தனர். 
ரசிகமணிக்கும், ராஜாஜிக்கும் இடையே  நின்றுகொண்டு, ல.ச. நிகழ்த்திய உரை பல நட்புகளை அவருக்குப் பெற்றுத் தந்தது. அதில் ஒருவர் ராஜாஜி. ல.ச.வை, "சண்முகசுந்தரம்' என்று டி.கே.சி அழைக்க, ராஜாஜியோ "வித்வான்' என்றே அழைப்பார். 
195455இல் "சாரல்' என்னும் பத்திரிகையை வித்துவானின் நண்பர் ஐ.டி.சிதம்பரம் பிள்ளை நடத்தி வந்தார். எண்பத்தாறு திருமந்திரப் பாடல்கள் குறித்த விளக்கத்தினை அவ்விதழில் ல.ச. தொடர் கட்டுரையாக எழுதி வந்தார். அதனை படித்து மகிழ்ந்த ராஜாஜி அவருக்கு எழுதிய கடிதத்தில், "திருமந்திரத்தைப் பற்றி எழுதியிருக்கும் வியாசம் படித்து மகிழ்ந்தேன். டி.கே.சி. மறுபடி காட்சி தந்தார் போலிருந்தது' என்று குறிப்பிட்டிருகிறார். 
ரசிகமணியின் மறைவுக்குப் பின்னர் அவருக்கு ஏதாவது நினைவுச் சின்னம் நிறுவ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவரது பேரன் தீப. நடராஜன் கேட்டுக் கொண்ட போது, ராஜாஜி இரண்டு மூன்று நிமிடங்கள் மெளனமாக ஆழ்ந்த சிந்தனையில் இருந்துவிட்டு "பத்து பேரைக் கூட்டி வைத்து வித்வானைக் கம்பர் பாட்டையும், தமிழ்ப் பாடல்களையும் பாடவைக்க வேண்டும். இதுதான் டி.கே.சி.க்குச் சிறந்த நினைவுச் சின்னம்' என்றாராம். 
ஆம். ல.ச. எழுதிய முதல் நூல் "ரசிகமணி டி.கே.சி.'. இதனைத் தொடர்ந்து அவர் எழுதிய தமிழ்கவி அமுதம், நானறிந்த ராஜாஜி, திருமூலர் கண்ட திருக்கோவில், உண்மையின் ஒய்யாரம், தமிழ்கவி இன்பம், கவிக்கோவில் ஒன்று, அற்புதத்தில் அற்புதம், தெய்வமாக்கவி திருமூலர், குற்றாலக் குறவஞ்சி, கலிங்கத்துப்பரணி, அமிர்த கலசம், ஆனந்தக் கூத்து, ரசிகமணி டி.கே.சி. வரலாறு உள்ளிட்ட 27-க்கும் மேற்பட்ட நூல்கள் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவை.   
இறைவனைத் தமக்கு உறவாகக் கருதி ஈடுபடுவோர் உண்டு. அந்த ஈடுபாடு தமிழுக்கு எத்தனை எத்தனை அருமையான கவிகளைத் தந்திருக்கிறது. அப்படி ஒரு கவியாகத் திகழ்ந்தவர்தான் வித்துவான் ல.சண்முகசுந்தரம்.

இவ்வாண்டு (2023) வித்துவான் ல. சண்முகசுந்தரம் பிறந்த நூற்றாண்டு நிறைவு.    
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com