இந்த வாரம் கலாரசிகன் - 17-09-2023

அரியலூர் மாவட்டம் சிறுகளத்தூரில் இருந்து ஏதோ அலுவலாக சென்னை வந்திருந்த ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் பெரியவர் ப. முத்துக்குமரன் எனக்காக அலுவலகத்தில் காத்திருக்கிறார் என்றபோது, நான் திடுக்கிட்டேன்.
இந்த வாரம் கலாரசிகன் - 17-09-2023


அரியலூர் மாவட்டம் சிறுகளத்தூரில் இருந்து ஏதோ அலுவலாக சென்னை வந்திருந்த ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் பெரியவர் ப. முத்துக்குமரன் எனக்காக அலுவலகத்தில் காத்திருக்கிறார் என்றபோது, நான் திடுக்கிட்டேன். அவர் இருப்பது தெரிந்திருந்தால், முன்கூட்டியே அலுவலகம் வந்திருப்பேன். அவரைக் காக்க வைத்திருக்க மாட்டேன்.

அகவை 94 முடிந்து 95-இல் அடியெடுத்து வைக்க இருக்கும் ஐயா முத்துக்குமரன், ஜெயங்கொண்டசோழபுரம் திருவள்ளுவர் ஞான மன்றத்தின் செயலாளர். சிறுகளத்தூரில், தனது தனிப்பட்ட முயற்சியில் திருவள்ளுவர் மணிமண்டபம் எழுப்ப இருக்கிறார். அக்கம்பக்கத்து ஊர்களில் குறள் பரப்பும் பணியிலும், ஊருக்கு ஒரு வள்ளுவர் சிலை என்கிற முயற்சியிலும் ஈடுபட்டிருக்கும் குறள் பித்தர் இவர்.

"திருக்குறளே மறை; திருவள்ளுவரே இறை' என்பது அவர் கொண்ட கொள்கை. அது என்னவோ தெரியவில்லை, எங்களுக்குள் அப்படி ஓர் ஈர்ப்பு. என்னைச் சந்திப்பதில் அவருக்கும், அவருடன் அளவளாவி மகிழ்வதில் எனக்கும் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது.

சிறுகளத்தூர் முத்துக்குமரனின் பின்னணியும் அனுபவமும் சாதாரணமானதல்ல. அவர் அண்ணல் காந்தியடிகளை நேரில் பார்த்தவர் என்பது மட்டுமல்ல, அவரது காலடியில் அமர்ந்து மகாத்மா பேசுவதைக் கேட்டவர். ஜெயபிரகாஷ் நாராயணனின் கூட்டங்களில், முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் தொண்டர்களில் ஒருவர். காந்தியார் பிறந்த போர்பந்தருக்குச் சென்று தரிசித்ததை வாழ்நாள் பேறாகக் கருதுபவர். அதே நேரத்தில், திராவிட இயக்கப் பற்றாளர்.

மேதா பட்கருடன், இந்தியா முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்ட சிலரில் ஐயா முத்துக்குமரனும் ஒருவர் என்பது எனக்கு இப்போதுதான் தெரியும். அந்த அனுபவங்கள் குறித்தும், அவரது வடநாட்டுப் பயணங்கள் குறித்தும் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

94 வயதிலும் கொஞ்சம்கூடத் தளர்வில்லாத நடை; சற்றும் நடுக்கம் இல்லாத குரல்; தெளிவான சிந்தனைத் திறன். இவையெல்லாம் ஐயா முத்துக்குமரனுக்கு எதனால் சாத்தியமாகிறது? அவரிடம் கேட்டால், "குறள்வழி வாழ்க்கை' என்று கூறுகிறார்.

ஆமாம், எதற்காக இரவானாலும் பரவாயில்லை என்று எனக்காகக் காத்திருந்தார் என்று கேட்கவில்லையே... எல்லாம் வள்ளுவத்துக்காகத்தான். சிறுகளத்தூரில் விரைவில் திருவள்ளுவர் விழா ஒன்று நடத்த இருக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகளுக்காகவும், பேச்சாளர்களையும், விருந்தினர்களையும் ஏற்பாடு செய்வதற்காகவும்தான் சென்னை வந்திருப்பதாகத் தெரிவித்தார். சென்னை வந்திருக்கும் நிலையில், என்னை வந்து பார்க்க வேண்டும் என்று விழைந்த அந்தப் பெரியவரின் அன்பு என்னை நெகிழ வைத்தது.

ஐயா முத்துக்குமரனார்போல, வெளியில் தெரியாமல் குறள் பரப்பும் பணியில் தங்களைத் தோய்த்துக் கொண்டிருக்கும் சான்றோரை அடையாளம் கண்டு தமிழக அரசு கெüரவிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்!

-------------------------------------------------

கபிலர் விழாவில் கலந்து கொள்ள ஜூலை மாதம் திருக்கோவிலூர் சென்றிருந்தபோது, நண்பர் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தனை சந்தித்தேன். தனது நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தார் அவர். ஜனவரி மாதம் வெளியாகி இருந்த அவரது "நிலம் கடந்த தமிழர் - வாழ்வும் வரலாறும்' புத்தகத்தை அன்பளிப்பாகத் தந்தார். அதைப் படிக்க இப்போதுதான் வேளை வாய்த்தது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயலகத் தமிழ்த் துறையின் தலைவராகப் பணியாற்றும் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன், அயலகத் தமிழர்கள் குறித்தும், கடல் கடந்து செயல்படும் தமிழ் அமைப்புகள் குறித்தும், புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியப் பங்களிப்புகள் குறித்தும் செய்திருக்கும் ஆய்வுகள் ஏராளம். அதனால், அவர் தெரிந்து வைத்திருக்கும் அளவு வேறு எவரும் அயலகத் தமிழர்கள் குறித்துத் தெரிந்து  வைத்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

அவரது "நிலம் கடந்த தமிழர்' என்கிற புத்தகம், பல்வேறு செய்திகளை நமக்குத் தருகிறது. தமிழர்கள் புலம்பெயர்ந்து அயல் நாடுகளில் பெருமளவில் தஞ்சம் அடைந்ததற்கு முழுமுதற் காரணமாக இருந்தது, தாது வருடப் பஞ்சம் என்பதை நாட்டுப்புறப் பாடல்களின் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகிறார் அவர். "வறுமையால் சிதைவடைந்து, வலிமையற்ற நிலையில் இலங்கை, மலாயா நாடுகளை நோக்கி ஆயிரக்கணக்கில் தமிழர்கள் செல்லத் தொடங்கினர். தமிழக வரலாற்றில் பெரும் மனிதப் புலப்பெயர்வு நடைபெற்ற காலகட்டம் இதுவே' என்கிறார்.

"கடற்கரைப்பட்டினத் துறைமுகங்கள், மிக நீண்ட அகலமான சாலைகள், எண்ணற்ற பாலங்கள், ரயில்பாதை வசதிகள் என்று உள்கட்டமைப்பு வசதிகளுடன் சிங்கப்பூர், மலேசியா, வியத்நாம் ஆகிய நாடுகள் தலைநிமிர்ந்து நிற்கின்றன. எழில் சிந்தும் இக்காட்சிகளுக்குப் பின்னால் எண்ணற்ற தமிழர்களின் வியர்வைத் துளிகள் மறைந்திருக்கின்றன' என்று பதிவு செய்கிறார்.

"உலகப் பரப்பிலுள்ள ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள், தீவுகளுக்குத் தமிழர்கள் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்து அக்காலத் தமிழ்ப் படைப்புகளில் எவ்வித செய்திகளும் பதிவு செய்யப்படவில்லை. அங்ஙனம் சென்ற தமிழர்களைத் தமிழ்ப் படைப்புலகம் பேச மறந்துவிட்ட சூழலில் ஒலித்த முதல் குரலாக மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகள் மற்றும் கட்டுரைகளை இனம் காணவியல்கின்றது' என்று வியந்து பாராட்டுகிறார் இரா. குறிஞ்சிவேந்தன்.

அவரால் உவந்தும் வியந்தும் பாராட்டப் பெறும் ஏனைய இரு ஆளுமைகள், இலங்கை மலையகத் தமிழர்களுக்காகக் குரலெழுப்பிப் போராடிய கோ. நடேசய்யரும், அவரது துணைவியார் மீனாட்சி அம்மையாரும். இந்நூலிலுள்ள "தேயிலைத் தோட்டத்திலே...' கட்டுரை நமக்கு எடுத்தியம்பும் புதிய செய்திகள் ஏராளம்.

17 கட்டுரைகள்... ஒவ்வொன்றும் ஓர் ஆய்வு... சுவாரஸ்யமான தகவல் பெட்டகம்... நிலம் கடந்த தமிழர்களின் வாழ்வும் வரலாறும்...!

இந்த வாரத் தேர்வு, கவிஞர் ஜோவின் "காலம்' என்கிற இந்தக் கவிதை - 
நேரம் போகவில்லை
என்போர்க்கும்
நேரம் போதவில்லை
என்போர்க்கும்
ஒரே கடிகாரம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com