
கானகத்துக்குச் சென்ற இராம இலக்குவர்கள், சீதையுடன் தண்டக வனத்தில் பத்து ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்.
அப்போது, கானகத்தின் மற்ற பகுதியில் அகத்திய முனிவர் தங்கியிருப்பதாக அறிந்த இராமன், அவரைச் சந்திக்க விரும்பினான். தண்டக வனத்தில் இருந்த முனிவர்களும், "அகத்தியரை நீங்கள் சந்திக்கத்தான் வேண்டும். எவரிடமும் இல்லாத படைக்கலன்கள் இருக்கின்றன. அவை உங்களுக்குப் பயன்படும்' என்றார்கள்.
தண்டக வனத்தில் இருந்து கிளம்பிய மூவரும், "சுதீக்கணன்' என்னும் முனிவர் தங்கியிருந்த ஆசிரமத்தை அடைந்தார்கள். தன்னுடனே அவர்கள் தங்க வேண்டும் என்றும், தனது தவத்தின் பலன் அனைத்தையும் ஏற்றருள வேண்டும் என்றும் சுதீக்கணன் முனிவர் கூறினார்.
அதனை மறுத்த இராமன், அகத்தியரைச் சென்று காண வேண்டும் என்னும் தனது ஆவலை வெளிப்படுத்தினான்.
அதனை உடனே ஏற்றுக்கொண்ட சுதீக்கணன், "அவசியம் சென்று அகத்தியரைச் சேருங்கள்' என்று அவர்கள் செல்ல வேண்டிய வழியைச் சொல்லி அனுப்பினான்.
அகத்தியர் குடிலை நோக்கி மூவரும் நடந்தனர். தம்பி மற்றும் மனைவியுடன், இராமன் தன்னைக் காண வருவதை அறிந்த அகத்தியர் அவர்களை எதிர்கொண்டு அழைக்க வந்தார்.
இராமனை அகத்தியன் எதிர்கொண்டு அழைக்க வந்ததையும், அகத்தியரின் பெருமையையும் கம்பன் ஒரு பாடலில் எழுதுகிறான்.
ஆண்தகையர் அவ்வயின்
அடைந்தமை அறிந்தான்.
ஈண்டு உவகை வேலை துணை
ஏழ் உலகும் எய்த,
மாண்ட வரதன் சரண் வணங்க,
எதிர்வந்தான்.
நீண்ட தமிழால் உலகை நேமியின்
அளந்தான்.
அகத்தியரின் பெருமையாகக் கம்பன் கூறும் கடைசி வரியே இங்கு நாம் காண வேண்டியது. திருமாலின் பெருமையையும் இந்த வரியில் கம்பன் தெரிவித்துவிடுகிறான். இந்த வரியில் "நேமி' என்று கம்பன் குறிப்பிடுவது திருமாலை.
"திருமால் உலகை மேலும் கீழுமாக அளந்தவர் அல்லவா?' என்று கேட்கிறான். அது எப்போது நிகழ்ந்தது?
திரிவிக்கிரம அவதாரத்தில், மிகக் குள்ளமான வாமனனாகச் சென்ற திருமால், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். "தந்தேன்' என்று நீர் வார்த்துக் கொடுத்தான் மகாபலி.
உடனே விஸ்வரூபம் எடுத்த திருமால், ஒரு காலால் பூவுலகம் முழுவதையும் அளந்துவிட்டார்; மறுகாலால் விண்ணைத் தொட்டு அளந்தார். "மூன்றாவது அடியை எங்கே எடுத்துக்கொள்ள?' என்று திருமால் கேட்க, தனது தலையில் வைக்குமாறு மகாபலி கேட்டுக்கொண்டார். இதுவே புராணம் சொல்லும் மூன்றடியால் உலகளந்த கதை.
திருமால் செய்த அதே செயலை, அகத்தியரும் செய்தார் என்றான் கம்பன். உருவத்தால் ஒத்திருந்தது மட்டுமல்ல... செயலாலும் வாமன அவதாரம் செய்த செயலை அகத்தியரும் செய்தாராம்.
"வாமனன் இறை அவதாரம். எனவே கால்களால் மூன்று உலகத்தையும் அளந்துவிட்டான். ஆனால், முனிவரான அகத்தியரிடம் தமிழ் இருந்தது. தன்னிடம் இருந்த தமிழால், இந்த உலகை அளந்தவர் அகத்தியர்' என்கிறான் கம்பன்.
"நீண்ட தமிழால் உலகை அளந்தவன்' என்று கூறுவதும் நோக்கத்தக்கது. தமிழ் சிவபெருமானால் அருளப்பட்டது என்ற குறிப்பும் உண்டு. மிகப் பழமையான தமிழ் மொழி என்பதைக் குறிக்கவே, "நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்' என்று குறிப்பிடுகிறான் கம்பன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.