சமயப் பாடல்களில் சங்கத்தமிழ் மணம்!

குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. அதன் இரண்டாம் பாட்டினை இயற்றியவர் இறையனார் என்னும் புலவர்.
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
2 min read

குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. அதன் இரண்டாம் பாட்டினை இயற்றியவர் இறையனார் என்னும் புலவர். அவர் "தலைமகன் இயற்கைப் புணர்ச்சியில் தலைமகளைப் புகழ்ந்து அன்பை உணர்த்தியது' என்னும் துறையில் பாடிய பாட்டே,

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறிஎயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோநீ அறியும் பூவே

என்பதாகும். தலைமகள் அச்சம், நாணம், மடம் முதலிய பண்புகளை உடையவள். அவை நீங்கித் தன்னை ஏற்றுக்கொள்வதற்காகத் தலைவன் அவளது நலத்தினைப் புனைந்துரைப்பான். இதனைத் தொல்காப்பியம், "நன்னயம் உரைத்தல்' என்று குறிக்கிறது. இது இயற்கைப் புணர்ச்சிக்கு முன்பு அதாவது அவளோடு கூடுவதற்கு முன்பு நிகழ்வது என்கிறார் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர்.

தலைமகன் மலைப்பகுதியில் ஓர் அழகிய அரிவையைக் கண்டான். அவள் மீது ஆராக் காதல் கொண்டான். அவளை அடைய விழைந்தான். அவள் அச்சத்தையும் கூச்சத்தையும் போக்கித் தன்னை ஏற்கும்படி செய்ய விழைந்தான். அதற்கேற்ப அவளது நலத்தைப் புகழும் வகையில் அச்சோலையில் திரிந்த வண்டினை நோக்கிப் பேசலானான்:

"'அழகிய சிறகுகளையுடைய வண்டே! மலர்களில் உள்ள தேனைத் தேடி உண்பதே உன் வாழ்க்கையாக உள்ளது. நீ என் நிலத்தில் மலர்ந்த பூக்களில் தேனுண்டு என் நிலத்தில் மகிழ்ச்சியோடு வாழ்கிறாய். அதனால் எனக்கு விருப்பமானதைச் சொல்ல வேண்டுவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும். இப்பெண் என்னோடு பல பிறப்பாய்த் தொடர்பு உடையவள். மயில் போன்ற மென்மையும் நெருங்கிய பற்களையும் பெற்றவள்.

இவளுடைய கூந்தலில் நறுமணம் நிறைந்துள்ளது. இக்கூந்தலைப் போல நறுமணம் நிறைந்த பூக்களும் உண்டோ? சொல்'' என்றான். இறையனார் பாடிய இப்பாடலை இறைவனார் தருமிக்காகப் பாடிய பாடலாக மாற்றிவிட்டது திருவிளையாடல் புராணம்.

இறைவன் பாடிய பாடலாக இருந்தால் முதற்பாடலாக அமைந்திருக்கும். குறுந்தொகையின் முதற்பாடலோ திப்புத்தோளார் என்பவர் பாடியதாகும். இறைவனோடு தொடர்பில்லாத இந்தப் பாடல் இறையடியார்கள் நெஞ்சைக் கவர்ந்துள்ளது.

நம்பியாண்டார் நம்பிகள் ஆளுடைய பிள்ளையார்மீது அந்தாதி, சண்பையர் விருத்தம், மும்மணிக் கோவை, உலா மாலை, கலம்பகம், தொகை என்று ஆறுநூல்களும் திருநாவுக்கரசர் மீது ஏகாதசமாலை என்று ஒரு நூலும், சுந்தரர் மீது திருத்தொண்டர் திருவந்தாதியில் பன்னிரண்டு பாடல்களும் பாடி அவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் சிலவற்றைப் பதிவுசெய்துள்ளார்.

இவரே திருத்தொண்டத் தொகை தந்த சுந்தரமூர்த்தியையும் அவருடைய பெற்றோர்களான சடையனார், இசைஞானியார் ஆகிய இருவரையும் சேர்த்து நாயன்மார்கள் எண்ணிக்கையை அறுபதிலிருந்து அறுபத்து மூவராக உயர்த்தியவர். இவர் ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில் திருஞானசம்பந்தரின் சிறப்பினை அகத்துறையில் பாடியுள்ள பாடல்கள் சில உள்ளன. அவற்றுள் ஒன்று,

அண்ணல் மணிவரைத்தோள்

அருகாசனி சண்பை அன்ன

பெண்ணின் அமிர்த நல்லாள் குழல்

நாற்றம் பெடையொடும் பூஞ்

சுண்ணம் துதைந்த வண்டே! கண்டது

உண்டுகொல்? தூங்கு ஒலிநீர்த்

தண்அம் பொழில் எழில் காசினி

பூத்த மென் தாதுகளே. (48)

(அருகாசனி = அருகர் அசனி.

அருகர் = சமணர்; அசனி = இடி. )

என்பது. இதில் தலைமகன்,""பெண் வண்டோடு பூக்களின் மகரந்தங்களில் படியும் வண்டே! இப்பெண் உயர்ந்த அழகிய மூங்கிலை ஒத்த தோள்களையுடையவள். சமணர்களுக்கு இடிநிகர்த்த ஆளுடைய பிள்ளையின் சண்பை நகரம் (சீகாழி) போன்று ஒளிர்பவள்; பெண்களில் அமுதம் போன்றவள். இவள் கூந்தலில் புதுமையான மணம் வீசுகிறது. இந்த உலகில் எத்தனையோ குளிர்ந்த நீர்வளம் மிக்க சோலைகள் உள்ளன.

அவற்றில் எத்தனையோ மலர்கள் இருக்கின்றன. இம்மணத்தை அவற்றின் மலர்த்தாதுக்களில் எதிலேனும் நீங்கள் கண்டது உண்டோ?'' என்கிறான். இப்பாட்டு இறையனாரின் குறுந்தொகையின் தாக்கத்தால் எழுந்தது என்பதனைக் "கண்டது உண்டுகொல்?' என்னும் சொற்றொடர் கோள்சொல்லி விடுகிறது. மேலும் பெண்களைத் தொண்டி போன்ற நகரங்களுக்கு ஒப்பிட்டுக் கூறுவது சங்க நூல்களில் காணப்படும் போக்கு ஆகும்.

இக்குறுந்தொகையின் தாக்கத்தை நம்மாழ்வாரின் திருவிருத்தத்திலும் காண முடிகிறது. நம்மாழ்வார் திருக்குறள், சங்க இலக்கியம் போன்றவற்றை அறிந்தவர் என்பதனை அவருடைய பாசுரங்களைக் கூர்ந்து நோக்கினால் புலனாகும். திருவிருத்தத்தில்,

வண்டுகளோ! வம்மின்; நீர்ப்பூ,

நிலப்பூ, மரத்தில் ஒண்பூ

உண்டு, களித்து, உழல்வீர்க்கு ஒன்று

உரைக்கியம்; ஏனம் ஒன்றாய்

மண்துகள் ஆடி வைகுந்தம்

அன்னாள் குழல்வாய் விரைபோல்

விண்டு கள் வாரும் மலர் உளவோ

நும் வியல் இடத்தே? (55)

என்னும் பாட்டு, தலைமகன் தலைமகளின் நலம் பாராட்டுதல் என்னும் துறையில் அமைந்துள்ளது. இப்பாடல் பூக்களைப் பற்றி இன்னும் விளக்கமாகத் தெரிவிக்கிறது.

இப்பாட்டில் தலைவன், கொடிப் பூவையும் மரப் பூவில் அடக்கிப் பூக்களை மூவகையாகக் குறிக்கிறான். ""மூவகைப் பூக்களில் தேன் உண்டு களித்துத் திரியும் வண்டுகளே! திருநாட்டைப்போல் ஒளிரும் இப்பெண்ணின் கூந்தலின் மணம்போல் மணம் வீசும் மலர்ந்து கள்ளைச் சிந்தும் மலர்கள் உங்கள் உலகத்தில் எங்கேனும் உண்டோ?'' என்கிறான். "நறியவும் உளவோ நீ அறியும் பூவே?' என்பதன் விளக்கமாக "விண்டு (மலர்ந்து) கள் வாரும் மலர் உளவோ நும் வியல் இடத்தே?' என்பது அமைந்துள்ளது.

சங்க இலக்கியம் அக்காலத்தில் அரசர்களால் சிறப்புற்று விளங்கிய நகரத்தைப் பெண்ணுக்கு உவமையாகச் சொல்ல, நம்பியாண்டார் நம்பிகள் அடியார் பிறந்த ஊரையும், நம்மாழ்வார் திருமால் உறையும் கலங்காப் பெருநகராகிய வைகுந்தத்தையும் உவமையாகச் சொல்வது இலக்கியப் போக்கில் நிகழ்ந்துள்ள வளர்ச்சியைக் காட்டுகிறது. இம்மாற்றம் என்றும் உள தென்தமிழ் தெய்வத் தமிழாக ஏற்றம் பெற்றிருப்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

இறையனார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர். நம்மாழ்வார் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலும் நம்பியாண்டார் நம்பிகள் பத்தாம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவர்கள். சங்கத் தமிழ், பல நூறு ஆண்டுகளுக்குப் பின் வந்த அருளாளர்களின் சமயப் பாடல்களிலும் தாக்கம் உண்டாக்கியிருக்கும் தனிச்சிறப்பை எடுத்துக் காட்டுவதாய் அமைந்திருக்கிறது இக்குறுந்தொகைப் பாட்டு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com