அமிழ்தினும் ஆற்ற இனிதே

உலகில் வாழும் உயிரினங்கள் யாவையும் தம் வாரிசுகளைப் பெறுவதில் மகிழ்ச்சி கொள்கின்றன.
அமிழ்தினும் ஆற்ற இனிதே

உலகில் வாழும் உயிரினங்கள் யாவையும் தம் வாரிசுகளைப் பெறுவதில் மகிழ்ச்சி கொள்கின்றன. வாழைமரம் கூட கன்றுகள் ஈன்று விட்டுத்தான் குலையே போடுகிறது. தன் கன்றுகளைப் பார்த்து தாய்மரம் பெருமிதம் கொள்வதை மனிதனால் அறிய முடியாது. அது தாவர ரகசியம்.
மனிதர்கள் தம் குழந்தைகளை, தம் வாரிசுகளைப் பார்ப்பதில் பெருமிதம், ஆசை இருக்கும். அதனை அற்புதமாய் பழந்தமிழ்க் கவிஞர்கள் தமது எழுத்துக்களால் படம்பிடித்துக் காட்டியுள்ளனர்.
இரண்டு அடிகளால் உலகை அளந்த திருவள்ளுவர் குழந்தைகளால் உண்டாகும் இன்பத்தை மூன்று வகையாக மூன்று குறட்பாக்களில் காட்டுகிறார். முதலாவதாக பெற்றோர்க்குத் தாம் பெற்றெடுத்தக் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அக்குழந்தையின் மழலைச் சொல் செவிக்கு இன்பத்தையும் வழங்கும் என்பதை,

மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு என்ற குறளில் (65) வெளிப்படுத்தியிருக்கிறார். 

அவ்வாறு கூறியது போதுமென்று எண்ணாமல் அதற்கு மேலும் ஆழமாக இன்னொரு குறளில் சொல்கிறார்.

குழல்இனிது யாழ்இனிது என்ப தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்    என்ற குறளில் (66) "தாம் பெற்றெடுத்தக் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேளாதவரே குழலில் இருந்து வரும் ஓசை இனிமையானது என்றும், யாழிலிருந்து வரும் ஓசை இனிமையானது என்று சொல்வர்' என்று அற்புதமாய் இதற்கு மேல் விளக்கிச் சொல் முடியாததைப் போல் சொல்கிறார்.

மூன்றாவதாக ஒரு குறளில் குழந்தைகள் பேசும் மழலைச் சொல் மட்டுமா இன்பம்? இல்லை இன்னொரு இன்பத்தையும் இயம்புகிறார்.

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.        என்ற குறளில் (64) தாம் பெற்றெடுத்த குழந்தையின் சிறிய கைகளால் பிசையப்பட்ட உணவு, அது மாவால் காய்ச்சிய கூழாயிருந்தாலும், பால் சோறாயிருந்தாலும் அமுதத்தைவிட சுவையானதாகப் பெற்றோர்க்கு இன்பம் தரும் என்கிறார்.

இவ்வாறு தாம் பெற்றெடுத்தப் பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தின் மூலம் மூன்று வகை இன்பங்களைப் பெற்றோர் பெறயியலும் எனச் சொன்ன திருவள்ளுவருக்குப் பிள்ளைகள் இருந்ததாக எந்த வரலாற்றுக் குறிப்புகளும் இல்லை. ஆனால் குழந்தையைப் பெற்ற அதன் மொழி, அன்பு என்பனவற்றை அனுபவித்து அவர்தம் கண்ட இனிமையை உணர்ந்த ஒரு தந்தையை அவரின் குறள்கள் வழி உணரமுடிந்தது.

திருவள்ளுவருக்கு முன்பு சங்ககால இலக்கியங்களில் இதுபோன்று குழந்தையால் வரும் இன்பத்தை வேறு புலவர் சொல்லியிருக்கிறார்களா என்று பார்த்தால் புறநானூறு ஒரு புலவரை அடையாளம் காட்டுகிறது. அவர் சங்ககால ஒளவையார். 

அவர் பாடிய பாடல்,
யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருளறி வாரா ஆயினும் தந்தையர்க்கு
அருவி வந்தனவால் புதல்வர்தம் மழலை (புறம்: 92)

குழந்தையின் மழலை யாழின் இசையோடு ஒத்துவராது, காலநேரத்துக்கும் பொருந்தாது. என்ன சொல்கிறது என்று புரியாது என்றும், அந்த மழலை தந்தையின் அருளைப் பெற்று விடுகிறது என்பதே பாடலின் கருத்து.

ஒளவையாரின் வரிகளுக்கும் திருவள்ளுவரின் குறள்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. திருவள்ளுவர் மழலை இன்பத்தை, பெற்றவர்களுக்கு என்று சொல்கிறபோது ஒளவையார் தந்தையை மட்டும் சுட்டுகிறார். அதே நேரத்தில் குழந்தையின் மழலை தந்தையர்க்கு அருள் வந்ததாகச் சொல்கிறார். 

அன்பின் உச்சம் அருள். இந்த அருளும் இன்பமும் இனிமையும் தாம் பெற்ற மழலையால்தான் வரமுடியும் என்பதே இருவரின் கணிப்புமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com