ஒற்றுமை என்றும் பலமாம்

சங்ககாலத்தில் பகை இல்லாமல் வாழும் இருநாட்டு மன்னர்களை ஒருங்கே காண்பது அரிது.

சங்ககாலத்தில் பகை இல்லாமல் வாழும் இருநாட்டு மன்னர்களை ஒருங்கே காண்பது அரிது. இதை நன்குணர்ந்த புலவர் காரிக்கண்ணனாருக்கு ஒரு சமயம் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய திருமாவளவனையும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியையும் ஒரே இடத்தில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. 

அச்சூழலில் இரு மன்னர்களையும் பார்த்துப் பாடலொன்றைப் புலவர் பாடியுள்ளார்.

நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை இவனே
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ...
அடுகளத்து உயர்க நும் வேலே கொடுவரிக்
கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே         (புறம். 58)

"சோழ மன்னனே! நீ குளிர்ச்சி பொருந்திய காவிரி பாயும் நாட்டிற்குத் தலைவனாக விளங்குகிறாய். இவனோ, தன் குடிப்பெருமையை நிலைநாட்டத் தன் இளவயதிலேயே பகைவரை வென்று புகழடைந்த பாண்டியன். நீ அறம் விளங்கும் உறையூரின் மன்னனாய் திகழ்கிறாய். அவனோ, நெல்லும் நீரும் யாவருக்கும் எளிதில் வாய்க்கும், பொதிய மலையில் கிடைக்கும் சந்தனமும் ஆழ்கடல் முத்தும் கொண்டு, மும்முரசும் முழங்கத் தமிழ் மதுரையிலே ஆட்சி நடத்தும் செங்கோல் வேந்தன். 

நீங்கள் இருவரும் பால் நிறத்தையும் பனைக்கொடியையும் கொண்ட பலதேவனும், நீல வண்ணமும் சக்கரமும் கொண்ட கண்ணனும் கூடியிருந்தால் போன்று விளங்கி இருக்கும் இதனினும் இனிய காட்சி உண்டோ? 

இன்னும் கேட்பீராக... நீங்கள் ஒருவர்க்கொருவர் உதவிக்கொள்வீராக. நீங்கள் இருவரும் கூடியிருக்கும் இந்நிலை மாறாது இருப்பின், கடல் சூழ்ந்த இவ்வுலகம் உங்கள் கைவசமாவது உறுதி. அதனால் நல்லன போலவும் விரும்பத்தக்கன போலவும் முன்னோர் சென்ற முறையில் சென்று அன்பால் பொருந்தி, உங்களிடையே புகுந்து உங்களைப் பிரிக்கத் தவிக்கும் பகைவருடைய சொல்லைக் கேளாமல் இன்று போலவே என்றும் உறவோடு இருங்கள்' எனக் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com