நாளொற்றித் தேய்ந்த விரல்

கோடு என்னும் சொல்லுக்கு யானையின் கொம்பு (புறநானூறு, 17:17), மரக்கிளை (சிறுபஞ்சமூலம், 66:1), மலையுச்சி (நாலடியார், 372:2), சங்கு (குறுந்தொகை, 11:1) கரை (அகநானூறு, 30:11) எனப் பல்வேறு பொருள்கள் காணலாம்
நாளொற்றித் தேய்ந்த விரல்

கோடு என்னும் சொல்லுக்கு யானையின் கொம்பு (புறநானூறு, 17:17), மரக்கிளை (சிறுபஞ்சமூலம், 66:1), மலையுச்சி (நாலடியார், 372:2), சங்கு (குறுந்தொகை, 11:1), கரை (அகநானூறு, 30:11) எனப் பல்வேறு பொருள்கள் வழங்குவதைக் காணலாம்.

ஆயினும் எண்களைக் கணக்கிடுவதற்காக எழுதுபொருளைக் கொண்டு ஒரே அளவுடன் நீட்டு வாக்கில் ஒன்றன் பின் ஒன்றென வரிசையாகச் சுவரில் பதியும் வடிவத்தைக் கோடு என்று சொல்வதைக் காணமுடியும். இந்தக் கோடே ஒன்று என்ற எண்ணின் வரி வடிவத்திற்கு வித்திட்டது எனலாம்.

பண்டைய காலத்தில் தலைவனும் தலைவியும் அக வாழ்வில் ஈடுபட பொருள் தேவைப்பட்டபொழுது அதைத்தேடிச் செல்ல தலைவன் அத்தலைவியை விட்டு நீண்ட நாட்கள் பிரிந்து இருப்பான். அந்த நேரத்தில் தலைவியானவள் அவன் தன்னுடன் இருந்து பிரிந்து சென்ற ஒவ்வொரு நாளையும் குறிக்கும் விதத்துடன் சுவரில் வரிசையாகக் கோடுகள் இடுவதுமுண்டு. 

அவள் அக்கோடுகள் இட்ட சுவரை நோக்கித் தலைவன் வராமல் இருப்பதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். இதனை "நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி' (61:4) என்றும் "சேணுறை புலம்பின் நாண்முறை யிழைத்த, திண்சுவர் நோக்கி' (289:9,10) என்றும் அகநானூறு கூறுவதால் அறியலாம். 

சில நேரங்களில் தலைவன் தலைவியிடம் இன்ன நாளில் வருவேன் என்று சொல்லிவிட்டுச் செல்லும்பொழுது அந்த நாளில் வராமலும் இருப்பதுண்டு. அந்த வகையில் ஒரு தலைவன் குறித்த காலத்தில் தான் வராதபொழுது தலைவியானவள் தன்னை நினைத்து வருந்துவதோடு பிரிந்து சென்ற நாட்களுக்காகச் சுவரில் இட்ட கோடுகளை விரல்கள் கொண்டு எண்ணிக் கொண்டிப்பாள் என்பதை,      

மெல்விரலி னாள்வைத்து நங்குற்ற 
மெண்ணுங்கொ லந்தோதன்
றோள்வைத் தணைமேற் கிடந்து  (394:2-4)
என நாலடியார் தெரிவிக்கின்றது.

குறிப்பாகப் பொருள் ஈட்ட தலைவியை விட்டுப் பிரிந்து செல்லும் முல்லைநிலத் தலைவன் கார் காலத்தில் வருவது வழக்கமாகும். அந்த வகையில் அந்நிலத்துத் தலைவி ஒருத்தி பிரிந்து சென்ற தலைவன் வருவதாகச் சொல்லிய நாள் வரை கோடுகளைச் சுவரில் இட்டுக் கொள்கிறாள். இட்ட கோடுகளைப் பார்த்து அவன் வரும் காலத்தில் வராமல் இருப்பதை நினைத்து அழுது கொண்டு இருக்கிறாள். 

அவளைப் பார்த்துத் தோழியானவள் நீ அழாதே என்று சொல்லித் தலைவர் வருவதாகச் சொல்லிய கார்காலத்தில் கோவலர்கள் முல்லைக் கொடியில் பூத்த மலர்களைச் சூடிச் செல்கிறார்கள். ஆதலால் நீ சுவரில் கோடிட்டுக் கழித்த நாளில் தலைவர் வருவதாகக் கூறிய கார்காலம் வந்துவிட்டதால் அவர் உடனே வருவார் எனத் தலைவியை ஆற்றுப்படுத்துகிறாள் தோழி. 

இதனை,  
வீங்கிழை நெகிழ விம்ம யீங்கே
எறிகட் பேதுற லாய்கோ டிட்டுச்
சுவர்வாய் பற்றுநின் படர்சே ணீங்க
வருவே மென்ற பருவ முதுக்காண்
தனியோ ரிரங்கும் பனிகூர் மாலைப்
பல்லான் கோவலர் கண்ணிச்
சொல்லுப வன்ன முல்லைமென் முகையே 
(குறுந்தொகை, 358)
என்னும் பாடல் கூறுவதால் அறியலாம். 

தலைவன் வருவதில் காலம் தாழ்த்தும் பொழுது தலைவியானவள் அவன் வரும் வழியைப் பார்த்துப்பார்த்து இருப்பதால் அவளுடைய கண்களில் ஒளி மங்குவதோடு அவர் பிரிந்து சென்ற நாட்களைச் சுவரில் கோடுகளாக இட்டு வந்ததைத் தொட்டுத்தொட்டுப் பார்ப்பதால் கை விரல்களும் தேய்ந்து போய் விடுகிறதாம். இதனை,   

வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்    (திருக்குறள், 1261)
என்று திருவள்ளுவர் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். 

எனவே, முன்னோர்கள் சுவரில் கோடுகள் இட்டு அக்கோடுகளை நாட்களாகக் கணக்கிட்ட எண்ணலளவை இன்றைக்கும் மக்களிடையே இருந்து வருவது வியப்பளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com