அருவிபோல் பறந்த கொடிகள்

மன்னர்களின் அடையாள பதாகைகள்: மதுரையின் வரலாற்று கொடிகள்
அருவிபோல் பறந்த கொடிகள்

மதுரைக் காஞ்சி என்னும் நூல் பத்துப் பாட்டு நூல்களுள் ஒன்று. 782 அடிகளைக் கொண்ட நீண்ட பாடல் இது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மாங்குடி மருதனார் பாடிய நூல்.

மதுரைக் காஞ்சியில் கொடிகளை, அடையாளக் கொடிகளாக மாங்குடி மருதனார் காட்டியுள்ளார். மன்னர், ஒவ்வொருவரும் தனக்கு என ஓர் அடையாளக் கொடியைக் கொண்டிருந்தனர். சேர மன்னனின் கொடியில் வில், சோழ மன்னனின் கொடியில் புலி, பாண்டிய மன்னனின் கொடியில் மீன் என்பதுபோல் பிற மன்னர்களும் தங்கள் அடையாளச் சின்னத்துடன் கொடியை வைத்திருந்துள்ளனர்.

மன்னர்கள் பயன்படுத்தியுள்ள இந்தக் கொடிகள் மட்டும் அல்லாமல் மக்களும் வணிகர்களும் வேறு வேறு அடையாளக் கொடிகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை மாங்குடி மருதனார் காட்டியுள்ளார்.

மதுரையில் உள்ள மக்கள் கொண்டாடும் விழாக்களின் அடையாளமாகக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அவர்கள் கொண்டாடிய விழாக்கள் எப்படிப்பட்டவை என்பதை உணர்த்தும் வகையில் அந்தக் கொடிகள் பல்வேறு உருவங்களைத் தாங்கியிருந்தன என அறிய முடிகிறது. இப்படி விழாக்களை அறிவிக்கும் கொடிகள் ஒரு பக்கத்தில் பறந்து கொண்டிருந்தன. நாள்தோறும் விழாக்கள் நடைபெற்ற காரணத்தால் ஏதோ ஒரு விழாவைக் குறிக்கும் கொடி பறந்தபடியே இருந்திருக்கிறது.

பாண்டியனின் படைகள் நாள்தோறும் கோட்டைகளைக் கைப்பற்றின. அவ்வாறு கைப்பற்றிய கோட்டைகள் எவை என்பதை உணர்த்தும் வகையில், பாண்டிய நாட்டின் கோட்டையில் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

வேல் வீரர்கள் கடல்போல் ஆரவாரம் செய்தபடி போருக்குச் சென்றனர். அவர்களுடன் யானைகளும் போருக்குச் சென்றுள்ளன. போரில் அவர்கள் பகைவரைக் கொன்றுகுவித்துள்ளனர். அதனால் எங்கும் புலால் நாற்றம் எழுந்துள்ளது. அவர்கள் பெற்ற வெற்றியை விளக்கும் வகையில் வெற்றிக்கொடிகள், மதுரையின் கோட்டையில் பறக்கவிடப்பட்டிருந்தன. வெற்றியை வெளிப்படுத்தும் கொடிகள் அவை என்ற காரணத்தால் அவற்றைப் புகழ்க் கொடிகள் என்று பாடியுள்ளார்.

மதுரையில் உள்ள தெருக்களில் கள் விற்கும் கடைகள் இருந்துள்ளன. அந்தக் கடைகளை அடையாளப்படுத்திக் காட்டும் வகையில் கொடிகள் பறந்துள்ளன. கள் விற்கும் கடைகளைக் காட்டும் கொடிகளைக் குறிப்பிட்டுவிட்டு வேறு பொருள்கள் விற்கும் கடைகளைக் குறிப்பதற்குப் பறக்கவிடப்பட்ட கொடிகளைச் சொல்லாமல் விடுவதற்கு மாங்குடி மருதனார் விரும்பவில்லை. எனவே வேறு பல நல்ல பொருள்களை விற்கும் கடைகளைக் காட்டும் வகையில் பல கொடிகள் இணைந்து பறக்கவிடப்பட்டிருந்தன என்று பாடியுள்ளார்.

கள் விற்கும் கொடியைத் தனியாகக் குறிப்பிட்டு, அந்தக் கடை ஒதுக்குப்புறமாக இருந்துள்ளது என்பதை உணர்த்தியுள்ளார். வேறு பொருள்கள் விற்கும் கடைகள் பொதுவிடத்தில் வரிசையாக இருந்துள்ள தன்மையையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். எனவே அந்தக் கொடிகள் எல்லாம் குழுவாக இணைந்து பறந்தன எனப் பாடியுள்ளார்.

பிற பொருள்கள் விற்ற கடையைக் காட்டும் கொடிகளை நல்ல கொடிகள் என்றும் மாங்குடி மருதனார் குறிப்பிட்டுள்ள காரணத்தால் கள்ளுக் கடையை இழித்துக் காட்டும் அவரது எண்ணமும் வெளிப்பட்டுள்ளது.

இவ்வாறு பல கொடிகள் அடையாளக் கொடிகளாகப் பறந்து கொண்டிருந்தாலும் பாண்டியனின் மீன் கொடி இந்தக் கொடிகளுக்கு எல்லாம் மேலாக உயரத்தில் பெரிய பதாகை அளவில் பறந்தது என்றும் பாடியுள்ளார். மன்னனின் மாளிகையை விடவும் உயரமாக வீடுகள் கட்டக் கூடாது என்னும் எண்ணம் இருப்பதைப் போல, பிற அடையாளக் கொடிகளை விடவும் மன்னனின் ஆட்சிக் கொடியே உயரத்தில் பறக்க வேண்டும் என்பதை இந்தப் பகுதி உணர்த்துகிறது.

இந்தக் கொடிகள் எல்லாம் மதுரையில் கட்டப்பட்டிருந்த மாடங்களின் அருகில் வரிசையாகப் பறந்துள்ளன. மாடங்களுக்கு மேல் தெரியும் வகையில் பறந்த இந்தக் கொடிகளைப் பார்க்கும்போது மலையில் பாயும் அருவிபோல் காட்சி அளித்தன எனவும் மாங்குடி மருதனார் குறிப்பிட்டுள்ளார்.

சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல்கொடி

வேறுபல் பெயர ஆரெயில் கொளக்கொள

நாள்தோறு எடுத்த நயம்பெறு புனைகொடி

நீர்ஒலித்தன்ன நிலவுவேல் தானையொடு

புலவுபடக் கொன்று மிடைதோல் ஓட்டிப்

புகழ்செய்து எடுத்த விறல்சால் நன்கொடி

கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல

பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇ

பெருவரை மருங்கின் அருவியின் நுடங்க

(அடி 366-374)

(சாறு - திருவிழா, எயில் - கோட்டை, தானை - படை, புலவு - புலால், தோல் - தடித்த தோல் கொண்ட யானை, விறல் - வெற்றி, வரை - மலை)

என்னும் மதுரைக் காஞ்சி அடிகள், மதுரையில் பறந்த கொடிகளைக் காட்சிப்படுத்தியுள்ளன.

பேரா. முகிலை இராசபாண்டியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com