வேம்பின்புழு வேம்பன்றி உண்ணாது

முனைவர் கண்ணனின் உயிரோட்டமான உவமைகள்
வேம்பின்புழு வேம்பன்றி உண்ணாது

திருமங்கை ஆழ்வார் எம்பெருமானிடத்தில் உண்மை உரைத்து உய்விக்க வேண்டிய மனோபாவத்தில், பிறவித்துயரிலிருந்து மீள்வதில் தன் இயலாமையைப் பல வாழ்வியல் உவமைகள் வாயிலாக எடுத்துரைக்கும் பாங்கு, படிப்போரை வியப்பில் ஆழ்த்தும். மாற்றமுள ஆகிலும் சொல்லுவன் (பெரிய திருமொழி - 11-8) எனும் பதிகத்தில் பல வாழ்வியல் உவமையைக் கையாண்டு, உய்யும் வகையை எம்பெருமானிடம் வேண்டுகிறார்.

பதிகத்தின் முதல் பாசுரத்தில் ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகிறேன் எனும் உவமை இடம் பெறுகிறது.

மாற்றமுள ஆகிலும் சொல்லுவன்

மக்கள்

தோற்றக்குழி தோற்றுவிப்பாய் கொல்

என்று இன்னம்

ஆற்றங்கரை வாழ்மரம்போல்

அஞ்சுகின்றேன்.

நாற்றச்சுவை ஊறு ஒலியாகிய நம்பீ!

என்று தன் ஆற்றாமையை வெளிப்

படுத்துகிறார்.

ஆற்றங்கரையிலுள்ள மரம், ஆற்றுவெள்ளம் ஏற்படின், தான் வேருடன் சாய்ந்து விடுவோமோ என்று அஞ்சும் . அதற்கு தன்னைத்தானே காத்துக் கொள்ளும் திறமை கிடையாது. அந்த மரம் போலவே, அடியேனும் அஞ்சுகின்றேன்.

தேக சம்பந்தம் உள்ளவரை புலன்களால் ஆபத்துண்டு. துயரமான இவ்வுலகில் மீண்டும் பிறக்க நேரிடுமோ என்று அஞ்சி எம்பெருமானிடத்தில் சரண் அடைவதாகப் பாடுகிறார்.

இதே உவமையைப் பயன்படுத்தும் ஒளவையார் (சோழர் காலம்) தம்முடைய "நல்வழி' பாடலில், உலகோருக்கு உழவுத் தொழிலின் நிலைத்த தன்மையினையும், உயர்வினையும் இவ்வுவமை வாயிலாக எடுத்துரைக்கிறார்.

ஆற்றங்கரையின் மரமும் அரசு அறிய

வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே -

ஏற்றம்

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை

கண்டீர்

பழுதுண்டு வேறுஓர் பணிக்கு

(நல்வழி.12)

ஆற்றின் கரைகளை அலங்கரிக்கின்ற மரங்கள், ஆற்றில் அளவிற்கு மேலாக வெள்ளம் பாயும்போது அடித்துச் செல்லப்படுவது உண்டு. அதுபோன்றே, அருமை பெருமையோடு உலக சுகபோகங்களை அனுபவித்து வருகின்ற அரசபோக வாழ்க்கையும் ஒருநாள் அழிந்துபடும். ஆனால் வேளாண்மை எனும் பயிர்த்தொழில் செய்து வாழ்வதற்கு இருக்கும் நிலைத்த சிறப்பானது, வேறு எந்தத் தொழிலுக்கும் இருக்க முடியாது என்று அறுதியிட்டு உறுதிபடக் கூறுகிறார் ஒளவையார்.

இரண்டாம் பாசுரத்தில் புயலில் சிக்குண்ட கப்பலில் உள்ளவர் மனநடுக்கத்தை உவமையாக்குகிறார். "மீண்டும் இவ்வுலகில் பிறந்து துன்பப்படுவேனோ என்று அஞ்சும் நான் பெருங்காற்றில் அகப்பட்டுக் கொண்ட கப்பலில் உள்ளவர் மனம் போல் நடுங்குகின்றேன்' என்று சொல்ல வந்தவிடத்து, காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல் ஆற்றத்துளங்கா நிற்பன் என்று மனம் பதறுகிறார்.

கடல் மல்லையில் (மாமல்லபுரம்) பல்லவர் காலத்தில் நிரைநிரையாகக் கப்பல்கள் நின்றதாகக் கூறும் கலியனின் பாசுரத்தை ஈண்டு நினைவுகூரல் தகும்.

புலங்கொல் நிதிக்குவையோடு

புழைக்கைம்மா களிற்றினமும்

நலங்கொள் நவமணிக்குவையும் சுமந்து

எங்கும் நான்றொசிந்து

கலங்கள் இயங்கும் மல்லைக்

கடல்மல்லைத் தலசயனம்

வலங்கொள் மனத்தார் அவரை

வலங்கொள் என் நெஞ்சே

(பெரிய திருமொழி 2-6-6)

மூன்றாம் பாசுரத்தில் "ஒரே வீட்டில் பாம்போடு வசித்தல்' உவமையாக்கப் படுகிறது. என்னை இப்பிறவித்துயரிலிருந்து மீட்காமல் இருந்து விடுவாயோ என்று அஞ்சுகிறேன். பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற் போல் தாங்காது உள்ளம் என்று பாசுரமிடுகிறார். ஆழ்வார் காலத்திற்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த வள்ளுவப் பெருந்தகை, "உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று' (890) என்று இல்லற வாழ்வின் இலக்கணத்தை எடுத்தியம்புகிறார்.

மற்றொரு பாசுரத்தில் மற்றுமொரு சிந்தனையைத் தூண்டும் வாழ்வியல் பழமொழி இடம் பெற்றுள்ளது. வேம்பின்புழு வேம்பன்றியுண்ணாது அடியேன் நான்பின்னும் உன்சேவடியன்றி நயவேன் எனும் பாசுரவடிகளின் மூலம் வேம்பின்புழு வேம்பன்றி யுண்ணாது எனும் பழமொழியை ஆழ்வார் கையாளுகிறார்.

இப்பழமொழி கசப்புச் சுவை மிகுந்த வேப்ப மரத்தினுள்ளும் ஒருவகைப் புழு உற்பத்தி ஆக வாய்ப்புண்டு; அப்புழு வேம்பின் சாற்றினையே உணவாகக் கொண்டு வாழும் எனும் தாவரவியல் உண்மையினையும் உணர்த்துகிறது. வேம்பின் புழு வேம்பையே விரும்புதல் போல, எம்பெருமானே நான் உன்னையன்றி வேறு யாரிடமும் செல்லேன் என்று கலியன் கூறும் திண்ணிய உரை பாராட்டுக்குரியது.

இவ்வாறு திருமங்கை மன்னன் பல்வேறு வாழ்வியல் உண்மை கலந்த உயிரோட்டமான பழமொழிகள் பலவற்றைத் தம்முடைய ஒரே பதிகத்தில் இணைத்திருக்கும் திறனை என்னென்பது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com