

தமிழ் இலக்கியங்களில் மனிதர்களின் வாழ்வியல் எந்தளவிற்குப் பேசுபடுபொருளாக உள்ளதோ அதே அளவிற்குப் பிற உயிரினங்களின் வாழ்வியலும் பேசப்பட்டுள்ளது. இது தமிழ்மொழியின் சிறப்புகளுள் ஒன்றாகும். சங்க இலக்கியங்களில் இயற்கையெனும் அரங்கில் மனித உணர்வுகள் நாடகங்களாக ஆக்கப்பட்டுள்ளன. அதற்குப் பாதை வகுத்துக்கொடுத்தவர் ஒல்காப் புகழ் தொல்காப்பியர்.
அவர் முதற்பொருள் (நிலமும் பொழுதும்), கருப்பொருள் (மனிதர்கள், விலங்குகள், பறவைகள்), உரிப்பொருள் (உணர்வுகள்) என்று உயிர்களின் சூழலியலை முப்பகுப்பாக வரையறுத்துள்ளார்.
கருப்பொருள்களில் வளர்ப்புயிர்களுக்குச் சிறப்பிடம் உண்டு. கால்நடை வளர்ப்புச் சமூகத்தில் ஆடு, மாடு, எருமை ஆகியவை பெரும்பங்கு வகித்தன. அவற்றை வளர்த்தவர்கள் ஆயர்கள் எனப்பட்டனர். அவர்களில் ஆடுகளை வளர்ப்போர் "புல்லினத்து ஆயர்' (கலித்தொகை, 103:47 110:1; 110:1; 111:5; 113:7; 115:4), மாடுகளை வளர்ப்போர் நல்லினத்து ஆயர் (104:6; 113:10) அல்லது "கோவினத்து ஆயர்' (கலித்தொகை, 103:37), எருமைகளை வளர்ப்போர் "கோட்டினத்து ஆயர்' (கலித்தொகை, 103:33; 105:58) என மூவகையினர் உண்டு.
மலைக்கும் காட்டிற்குமான இடைநிலத்தில் வாழ்ந்தமையாலும் இவர்கள் இடையர் எனப்பட்டனர். அவ்வாறு கோட்டினத்தைச் சார்ந்த எருமையொன்று வயிறுமுட்ட சாப்பிட்டபிறகு தன் கன்றினை நினைத்துக் கனைக்கிறது. இதனை ஆண்டாள்
ஆ(நா)ய்ச்சியார் (திருப்பாவை, 12),
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
என்று பாடியுள்ளார். இவ்வடிகளுக்கு இளங்கன்றுகளுக்குத் தாயாகிய எருமைகள் தம்முடைய கன்றுகளின்மேல் இரக்கம்கொண்டு அவற்றை நினைத்துப் பாசத்துடன் ஒலியெழுப்பி மடியிலுள்ள பாலைத் தாமாகவே வழியவிடுகின்றன; அப்பாலானது இல்லத்தை நனைத்துச் சேறாக்குகின்றது; அத்தகைய (தேடாமல் கிடைத்த) செல்வம் நிரம்பியவனின் தங்கையே! என்று பொருள். அது சரி, குதிரை கனைக்கும் என்பதை அறிவோம். அவ்வாறே எருமையும் கனைக்குமா? என்றால், ஆம் என்கிறார் கணிமேதாவியார்.
இருள்நடந்த(து) அன்ன இருங்கோட்(டு) எருமை
மருள்நடந்த மாப்பழனம் மாந்திப் பொருள்நடந்த
கற்பெரும் கோட்டால் கனைத்துதன் கன்றுள்ளி
நெற்போர்வு சூடி வரும்
எனப்படும் இத்திணைமாலை நூற்றைம்பதுப் பாடலில் (பா.148) வயலில் விளைந்துள்ள குவளை முதலானவற்றை உண்ட எருமையானது, தனது கன்றை நினைத்துக்கொண்டு கனைத்தவாறு வைக்கோல் போர் இருக்கும் பகுதிக்கு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, எருமையின் ஒலியைக் கனைப்பொலி என்பது முன்னோர் மரபு என்பது தெரிகிறது. எருமை மட்டுமன்று, பசுமாடும் கனைக்கும் என்பதைக் "கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப'
(சிலம்பு.
மதுரை.15:204) என்று இளங்கோவடிகள் பதிவுசெய்துள்ளார். வயிறு நிறைய உண்டபின் தன் கன்றுக்குப் பசிக்குமே என அதனை நினைத்துப் பசுவும் எருமையும் எழுப்பும் ஒலிக்குக் "கனைப்பொலி' என்று பெயர்.
ஆண்டாளைப் போலவே எருமைகளின்
ஈர மடியினைக் குறித்து,
"ஈரநீர் படிந்து இந்நிலத்தே சில
கார்கள் என்ன வரும் கருமேதிகள்,
ஊரில் நின்ற கன்று உள்ளிட, மென்முலை
தாரை கொள்ள, தழைப்பன சாலியே'
(பால காண்டம், நாட்டு.25)
எனும் இப்பாடலில், ஈரநிலத்தில் விளைந்தவற்றை மேய்ந்த கார்மேகங்களையொத்த மேதி(எருமை)கள் தம்முடைய கன்றுகளை நினைத்துப் பாலைச் சொரிவதால் செந்நெற்பயிர்கள் தழைக்கின்றன என்று கம்பர் பாடியுள்ளார். அவரைப் போலவே திரிகூடராசப்பக் கவிராயரும்,
சூழமேதி இலங்குந் துறையிற்
சொரியும் பாலைப் பருகிய வாளை
கூழை வாசப் பலாவினிற் பாயக்
கொழும்ப லாக்கனி வாழையிற் சாய
வாழை சாய்ந்தொரு தாழையில் தாக்க
வருவிருந்துக் குபசரிப் பார்போல்
தாழை சோறிட வாழை குருத்திடும்
சந்திர சூடர்தென் ஆரிய நாடே
(நாட்டுவளம் கூறல், 3)
என்று குற்றால மலையில் வாழும் எருமைகளின் பால் வளத்தைப் பாடியுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் ஆண்டாள் ஆய்ச்சியாரே உந்துதலைக் கொடுத் திருப்பார் எனலாம். கோதையிடமிருந்து ஒரு கை எடுத்தாண்ட கம்பர், பாலை வீணாக்குவானேன் என நினைத்து நெற்பயிர் வளர்ச்சிக்கு அப்பால் உதவுவதாய்ப் பாடினார். கவிராயரோ பாலை, வாளை பருகியதாய்ப் பாடியுள்ளார். கோதையும் பாலை வீணாக்கவில்லை. கோவலர்தம் செல்வச் செழிப்பிற்கு அப்பாலைக் குறியீட்டுப் பொருளாக்கித் தேனாய்த் தந்துள்ளார். தமிழும் அப்படித்தான் தானாய்ப் பெருகும் தாய்ப்பாலைப் போன்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.