
வேள் எவ்வி என்னும் குறுநில மன்னன் மிகச் சிறந்த கொடையாளனாக விளங்கியவன். புலவர்களுக்கும் பாணர்களுக்கும் கொடை கொடுத்துச் சிறந்த சீர்மை கொண்டவன். போரொன்றில் மாண்டு போனான் அவ்வள்ளல்.
அதைப் புலவர் வெள்ளெருக்கிலையாரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. தான் வாழும் காலத்தில் வரையாது கொடுத்த வள்ளலின் பிரிவுத்துயர் புலவரைப் பெரிதும் மன வருத்தத்திற்கு உள்ளாக்கியது. அடையாத நெடுங்கதவுடைய வேள் எவ்வியின் இறப்பிற்குப் பின் மன்னனின் மனைக்குச் சென்றார் புலவர்.
மன்னனின் மனைவி மிகப் பெரிய துயரத்தில் ஆழ்ந்த போதிலும், இறந்தவர்க்குப் பிண்டமிடும் மரபின்படி அதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தார். அச்சூழலில் கையறுநிலையில் புலவர் வெள்ளெருக்கிலையார் பாடுவதாகப் பாடல் அமைந்துள்ளது.
நோகோ யானே தேய்கமா காலை
பிடி அடி அன்ன சிறுவழி மெழுகித்
தன்அமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குஉண் டனன்கொல்
உலகு புகத் திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇ யோனே
(புறம் 234)
"வேள் எவ்வியின் இழப்பினை நினைக்கும் நேரத்தில் என் மனம் நோகின்றது. என் வாழ்நாள் கழிவதாக. பெண் யானையின் காலடியைப் போன்ற சிறிய இடத்தினை மெழுகி, அவ்விடத்தில் புற்களைப் பரப்பி, அன்பு மிகுந்த மனைவியானவள் படைத்த இனிமையான சிறு அளவிலான பிண்டத்தை அவன் எவ்வாறு உண்பான்?
அவனுடைய அரண்மனையின் வாயில் எப்போதும் திறந்தே இருக்கும். பலரும் வந்து கொண்டே இருப்பர். அவர்களோடு சேர்ந்து உண்ணப் பழகியவன். இந்த இனிமையான சிறு உணவை எவ்வாறு உண்பான்? உண்ணான்!' என்பதாகக் கையறு நிலையில் பாடல் இடம் பெற்றுள்ளது.
பலருடனும் சேர்ந்துண்ணும் வழக்கம் கொண்ட எவ்வியின் மனநிலையைப் பாடல் பதிவு செய்துள்ளது; தனித்து, தான் மட்டும் உண்ணாத நிலை கூறப்பட்டுள்ளது; இறந்து போனவர்களுக்குப் பிண்டமிடும் மரபு கூறப்பட்டுள்ளது.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு
(குறள் 86)
தம் வீட்டிற்கு வந்தவர்களை உபசரித்து வழியனுப்பும் தமிழர்களின் மரபு குறிக்கப்பட்டுள்ளது.
வாழ்ந்த காலத்தில் ஒருவர் சிறப்பானதொரு வாழ்க்கையை வாழ்ந்தால், இறப்பிற்குப் பின்னரும் நினைக்கப்படுவார் என்பதைப் புலவரின் வரிகள் உணர்த்தியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.