பாரதியின் இந்த வரிகள் நமக்குப் புதியதல்ல:
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று
எண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார்!
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்
இந்த வரிகளுக்கு இருக்கும் சிறப்பு, கடந்தகால வரலாற்றினைத் தன்னுள் புதைத்து வைத்திருப்பதுதான்.
"பெண்கள் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும்; வெளியே வரவே கூடாது; அவர்கள் படிக்கவும் கூடாது; பெண்கள் படித்தால், அது தீமைகளையே உருவாக்கும்' என்னும் சிந்தனை, பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்தது என்பதற்கான வரலாற்றுக் குறிப்பு இந்தக் கவிதை. இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், பெண்கள் கல்வி பெறுவதில் அவ்வளவு சிக்கல்கள் இருந்தன. தடைகளை மீறி படித்து மேலே வந்த மிகச் சில பெண்கள் சாதனையாளர்களாகவே பார்க்கப்பட்டார்கள்.
இன்றைய நிலையில் பெண்கள், கல்வியில் மட்டுமல்ல; வேலைக்குச் சென்று சம்பாதிப்பதுவரை ஆண்களுக்கு நிகராகத் திகழ்கின்றனர். வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்கள், இன்று பொருளாதார அடிப்படையில் ஓரளவுக்கேனும் உறுதியாக இருக்கிறார்கள். சுயமாக சொத்து வாங்கிக்கொள்ளும் சூழல் இருக்கிறது.
சொத்து தொடர்பாகவும் பெண்களுக்குப் பெருமளவில் உரிமைகள் இருந்ததில்லை. 1874}ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட "திருமணமான பெண்களின் சொத்துரிமைச் சட்டம்'தான், பெண்களுக்கான சொத்து தொடர்பாகக் கிடைத்த முதல் சட்ட அங்கீகாரம். அதன் பின்னரே பெண்கள் சொத்துகளைப் பெறுவது மற்றும் அனுபவிப்பது தொடர்பான வளர்ச்சிகள் இருந்தன.
இந்தப் பின்னணியில், கம்பன் தனது காப்பியத்தில் பெண்கள் தொடர்பாகச் சொல்லியிருக்கும் கருத்து ஒன்றைப் பார்த்துவிடலாமா..? கோசல நாட்டின் பெருமையைப் பலவாறு விளக்கிச் செல்லும் கம்பன், இப்படி ஒரு கவிதையை இடையில் வைக்கிறான்.
பெருந் தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,
விருந்தும், அன்றி, விளைவன யாவையே?
பொருளாதாரத் தேவையுடன், உதவி கேட்டு வருத்தத்துடன் வீட்டுக்கு வரும் எவருக்கும் உதவி செய்யும் நிலையில் பெண்கள் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் வீடுகளில் மகிழ்ச்சியாக விருந்து உபசாரங்களும் நடந்தன. வருந்தி வருபவர்களுக்குத் தேவையான உதவிகளையும், வீட்டுக்கு வரும் விருந்தினர் எவருக்கும் தினமும் விருந்துபசாரமும் பெண்களால் செய்ய முடிந்தது என்று சொன்ன கம்பன், அதற்கான காரணங்கள் இரண்டு என்கிறான்.
கவிதையைப் பாருங்கள். முதல் வரியில், பெண்களின் அழகை வருணிக்கிறான். "அழகிய, பெரிய கண்களையும், பிறைச் சந்திரனைப் போன்ற அழகிய நெற்றியையும் உடையவர்கள்' என்பது வருணனை. கவிஞன் என்பதால், இப்படிப்பட்ட வருணனைகள் தவிர்க்க முடியாதவைதான். அடுத்த வரியில்தான் உயிர் இருக்கிறது. தேவைப்படுபவர்களுக்கு உதவவும், நாள்தோறும் விருந்துபசாரம் செய்யவும் பெண்களால் முடிந்ததற்கான இரண்டு காரணங்களை இங்குதான் சொல்கிறான் கம்பன்.
"பொருந்து செல்வம்' என்பது ஒன்று; "கல்வி' என்பது மற்றொன்று. பொருந்து செல்வம் என்னும் சொற்றொடரால், "பெண்களுக்கு இருந்த தனிச்சொத்து' என்ற ஆழமான ஒரு செய்தியை நமக்குச் சொல்லிவிடுகிறான் கம்பன்.
செல்வத்துக்கான உரிமை மட்டுமல்ல; கல்வி பெறும் உரிமையும் பூரணமாக பெண்களுக்கு இருந்தது. பெண்களிடத்தில் இவை இரண்டும் ஏற்றம் பெற்றிருந்தன என்பதனை, "பூத்தலால்' என்னும் சொல்லால் நமக்கு விளங்கப்படுத்துகிறான் கம்பன்.
சொத்து தொடர்பாகவும், கல்வியறிவு பெறுவதிலும் பெண்களின் நிலைமை எப்படியிருந்தது என்பதனைத் தொடக்கத்தில் பார்த்தோம். பெண்களின் சுயம் வெளிப்பட, அவர்களுக்குக் கல்வியறிவும், பொருளாதாரத் தன்னிறைவும் தேவை என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கும் கம்பனின் கருத்து வியப்பைத் தருகிறது!