உலக உயிரினங்கள் பொதுவாகவே தன்னினத்திற்கு ஊறு வரும்பொழுது அவை ஒருங்கிணைந்து தற்காத்துக் கொள்ளும் குணமுடையனவாகவே உள்ளன.
அஃறிணை உயிரினங்களைப் பொறுத்தவரையில், உணவுப் பகிர்வின்பொழுது தத்தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதுண்டு. உணவுக்கான இப்போராட்டம் தவிர்க்கவியலாததாகி விடுகிறது. ஆனால், அஃறிணை உயிரின வகைகளுள் சில தன்னினத்தின் அழிவுக்குத் தாமே காரணமாகிவிடுகின்றன. அதாவது, சில தன்னினத்தைத் தானே உண்டுவிடுகின்றன; சில அழித்துவிடுகின்றன. அவற்றுள் குறிக்கத் தக்கன நண்டும் முதலையும் ஆகும்.
தாய் நண்டின் வயிற்றில் வளர்ந்து வரும் அதன் குஞ்சுகள் உரிய வளர்ச்சிக்குப் பின் பிறக்கும் தருணத்தில், தாய் நண்டின் வயிற்றுப் பகுதி இரண்டாகப் பிளவுபட்டு தாய் நண்டு இறந்துபோய்விடும். அதாவது, தாய் நண்டின் இறப்பிற்கு அதன் சேய் (குழந்தை) நண்டுகளின் பிறப்பே காரணமாகி விடுகிறது.
அதுபோலவே, முதலைகளும் தாம் ஈன்ற பிள்ளைகளையே (முதலைக் குஞ்சுகளில் சிலவற்றை) தின்றுவிடும் குணம் உடையன. ஆக, குஞ்சுகளால் தாய் இறப்பதும் தாயே குஞ்சுகளை உண்டுவிடுவதும் சில இனங்களில் உண்டு.
அக்கொடுங்குணங்களை ஒரு தலைவன் மேல் ஏற்றி, 'ஐங்குறுநூறு' இலக்கியத்தில், தோழி கூற்றில் வைத்துப் பாடுகின்றார் 'ஓரம்போகியார்' என்ற புலவர்.
சங்ககாலத் தலைவன் ஒருவன், தலைவியை விட்டுப் பரத்தையிற் பிரிகிறான். அத்துடன் நில்லாமல், வெவ்வேறு பரத்தையரைப் பற்றியொழுகுகிறான். இதனைக் கேள்வியுற்ற தோழி, தலைவன் பொருட்டு வாயிலாய் (தூதாய்) வந்தவர்க்குக் கேட்குமாறு தலைவியிடம் சொல்லுவாள் போலச் சொல்லுகின்றாள்.
''அன்னையே! தன்னைக் கருக்கொண்டுள்ள தாய் சாகும்படி பிறக்கின்ற புள்ளிகளை உடைய நண்டுகளோடு, தாம் ஈன்ற பிள்ளையையே தின்னும் கொடுங்குணமுடைய முதலைகளையும் உடையது அத்தலைவனின் ஊர்.
ஆதலால், நம்முடைய தலைவனும், அவனது ஊர் கொண்டுள்ள கொடுமைகளையெல்லாம் தானும் பெற்றவனாயினான் போலும்! அது உண்மையில்லையென்றால், பொன்வளையல்கள் ஒலிக்கும்படி தன்னால் தழுவப் பெற்ற மகளிருடைய அழகினை நுகர்ந்து, பின்னர் அவரை நினைக்காமல் துறந்து போவதற்குக் காரணம் தான் யாது?'' என்று கேட்கிறாள் தோழி. சுவையான அப்பாடல் இதுதான்-
தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனோடு
பிள்ளை தின்னு முதலைத்து அவனூர்
எய்தின னாகின்று கொல்லோ மகிழ்நன்
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்பது எவன்கொல் அன்னாய்
(பா.24)
இத்தலைவனானவன், தலைவி உள்ளிட்ட பெண்ணினத்தை ஏமாற்றும் கொடுமைக் குணம் பெற்றமைக்குக் காரணம், தன்னினத்தைத் தானே அழிக்கும் நண்டு, முதலை ஆகிய அவற்றைத் தனது நிலத்திலேயே அறிந்து பழகியமையே என்பது இப்பாடலில் நயம்படப் புனையப்பட்டுள்ளது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.