
காலம், பன்முகத்தன்மை கொண்ட சிலரை ஒரு விதத்தில் மட்டும் அடையாளப்படுத்தி நிகரற்ற உச்சத்தில் ஏற்றி வைத்து விடுவதுண்டு. அப்படித் தமிழ் இலக்கிய உலகில் உச்சம் பெற்றிருப்பவர் 'கல்கி' என்று அனைவராலும் அறியப்பட்ட இரா.கிருஷ்ணமூர்த்தி. இலக்கியம் படித்தவர்களிடம் மட்டுமே இருந்த தமிழ் இலக்கியத்தை சிறுகதை, புதினம், கட்டுரைகள் என வெகுஜன இலக்கியமாக எளிய மக்களிடமும் கொண்டு சென்ற பெருமை கல்கி கிருஷ்ணமூர்த்திக்கு உண்டு.
சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பாடலாசிரியர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். தற்போது அவரது புகழ் மிக்க புதினமான 'பொன்னியின் செல்வன்' இன்றைய தலைமுறையினருக்கு அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' புதினம் இன்றும் இலக்கிய வாசிப்பில் முதலிடத்தில் இருக்கிறது.
ஆனால், ஒரு புதினம் மட்டுமில்லை, 15 புதினங்களை, ஏறத்தாழ 75 சிறுகதைகளை எழுதியிருக்கிறார். எண்ணற்ற கட்டுரைகளைப் பயண இலக்கியமாக, விமர்சனமாக, சிந்தனையைத் தூண்டுவதாக அளித்துள்ளார்.
அவரது புதின மாந்தர்களின் பெயர்களைத் தமிழகத்தில் பலரும் தங்களின் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர் என்பதில் அவரது எழுத்தின் வீச்சினைப் புரிந்து கொள்ளலாம். வரலாற்றைத் தனது கற்பனையோடு கலந்து தந்திருக்கும் கதைகள், அதற்கென அவர் உருவாக்கி அளித்துள்ள பாத்திரங்கள், புதின இலக்கியத்தின் இலக்கணமாக எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியும் உயர் தரத்தை லட்சியப்படுத்தியும் நிற்கின்றன. வரலாறு தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை வாசிப்பவர்களுக்கு ஏற்படுத்துவதில் இவரின் வரலாற்றுப் புதினங்கள் பெருவெற்றி பெற்றுள்ளன.
இன்றளவும், பல்லவர் வரலாற்றை, சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்ட மர்மத்தை, அதற்கான சான்றுகளைத் தெரிந்து கொள்ள ஆர்வ மேலீட்டால் இளைஞர்கள் அந்தந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்று கல்வெட்டு ஆய்வுகளை மேற்கொள்வதை சமூக வலைதளங்களில் பார்க்கிறோம். 'வந்தியத்தேவன் பயணித்த பாதை' என்று சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர்.
ஒரு புதினம் எழுதப்பட்டு ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இத்தகைய தாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தி வருகிறது. கல்கி அவர்களின் எழுத்து நடை இந்த மாயத்தை சாத்தியமாக்கியுள்ளது. இன்றைக்கு நாம் சங்க இலக்கியங்களைப் படித்து இன்புறுவதைப் போல இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கல்கியின் பொன்னியின் செல்வன் அன்றைய இளைஞர்களால் படிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
திரு.வி.கல்யாணசுந்தரனாரின் 'நவசக்தி'யில் 1923-ஆம் ஆண்டு உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். 'அகஸ்தியர்' என்ற புனைபெயர் வைத்துக் கொண்டார். 'யங் இந்தியா' பத்திரிகையில் மகாத்மா காந்தியின் சுயசரிதை தொடராக வெளிவந்தபோது, 'நவசக்தி'யில் கல்கியின் மொழிபெயர்ப்பில் தமிழில் தொடராக வெளிவந்தது. முதன்முதலில் இந்த உன்னதப் பணியைத் தமிழகத்தில் மேற்கொண்ட பெருமை இவருக்கே உண்டு.
திரு.வி.க.வின் பட்டறையில் பண்பட்ட எழுத்தைக் கற்றுக்கொண்டவர், ராஜாஜி மதுவிலக்கை வலியுறுத்தவென ஆரம்பித்த 'விமோசனம்' பத்திரிகையில் உதவி ஆசிரியராக இணைந்தார்.
அதே சமயத்தில், எஸ்.எஸ்.வாசன், 'ஆனந்த விகடன்' பத்திரிகையை வாங்கி ஜனரஞ்சகமாக நடத்துவதில் முனைந்திருந்தார். ஆனந்தவிகடனுக்குக் கட்டுரைகள் அனுப்பி வந்தார் கல்கி. 'ஏட்டிக்குப் போட்டி' என்ற கட்டுரை அமோக வரவேற்பைப் பெற்றது. அந்தக் கட்டுரைதான் முதன்முதலில் 'கல்கி' என்ற புனைபெயரில் வெளியானது. புகழோடு புனைபெயரும் நிரந்தரமாகிவிட்டது.
ஆனந்த விகடன் இதழில் 1931-இல் பணிக்குச் சேர்ந்தார். எழுத்துலகில் தன்னிகரற்றவராக இந்தக் காலகட்டம் அவரை உருவாக்கியது. கதைகள், கட்டுரைகள் என எழுதிக் குவித்தார். 'கள்வனின் காதலி' விகடனில் தொடராக வெளிவந்து மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இலங்கைக்குப் பயணம் செய்து 12 வாரங்களுக்கு பயணக் கட்டுரைகள் எழுதினார். இனிமையாக, 'குழந்தைகள் மாநாடு' போன்ற நகைச்சுவையோடு உண்மையை அழுத்தமாகப் பேசிய கல்கி, விமர்சனக் கட்டுரைகளில் கடுமை காட்டவும் தயங்கியதில்லை.
'அலை ஓசை', 'தியாகபூமி' போன்ற புதினங்கள் காந்திய சிந்தனையை, அன்றைய சுதந்திரப் போராட்ட வரலாற்றை இலக்கியமாகப் பதிவு செய்திருக்கின்றன. நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் சிறுகதைகள் புதிய இலக்கணத்தை வரையறுத்தன. அவரது கதைகளில் வரும் பாடல்கள் இசையுடன் பாடக் கூடியனவாக அமைந்து இசைத் தமிழ் வளர்த்தன. 'மீரா' திரைப்படத்திற்கென அவர் இயற்றிய பாடல்கள் இன்றும் தமிழிசை மேடைகளில் இன்பம் சேர்க்கின்றன.
தான் புகழ் அடைந்ததோடு பல நல்ல எழுத்தாளர்களையும் புகழ்பெறச் செய்ததில் கல்கியின் விசாலமான மனம் வெளிப்படுகிறது. நகைச்சுவை எழுத்தாளரான தேவன் கல்கி அறிமுகப்படுத்திய எழுத்தாளரே.
சத்யாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு மூன்றாம் முறையாக சிறை சென்று மீண்டதும் 1940-ஆம் ஆண்டில் டி.சதாசிவத்துடன் இணைந்து 'கல்கி' பத்திரிகையைத் துவங்கி ஆசிரியரானார். 1941-இல் மாதமிருமுறை பத்திரிகையாகத் துவங்கப்பட்டு 1944-இல் வாரப் பத்திரிகையாகவும் இந்தியாவின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றாகவும் உருவெடுத்தது.
அதற்கு கல்கியின் தொடர்கள் காரணமாக அமைந்தன. பத்திரிகை துவங்கியதும் 'பார்த்திபன் கனவு' தொடரும் ஆரம்பமாயிற்று. இதற்குப் பிறகு 'சிவகாமியின் சபதம்' தொடராக வெளியானது. 1954-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அவர் காலமானது வரை தனது எழுத்துப் பணியைத் தொய்வின்றித் தொடர்ந்தார்.
பாரதி மீது அன்பு கொண்டவர், எட்டயபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென எழுதிய தலையங்கம் தமிழ் மக்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியது. கல்கியே முன்னின்று இந்தப் பணியை மேற்கொண்டார்.
மக்கள் பணத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அதோடு வசூலான தொகையிலிருந்து ஒரு தொகையை வைப்புநிதியாக்கி அதன் வட்டித் தொகையை பாரதியின் மனைவி செல்லம்மாள் காலம் வரை அவருக்குக் கிடைக்கும்படி செய்தார்.
பத்திரிகையாளராக, எழுத்தாளராக, கலை விமர்சகராக, சுதந்திரப் போராட்ட வீரராக அவரது ஆளுமை விரிவானது. கல்கியின் கதைகள் ஒருபுறம் மக்களை மயக்கினவென்றால் அவரது தலையங்கங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தின. இவரது எழுத்துக்கள் எளிய மொழிநடையை அறிமுகப்படுத்தி சிறந்த ரசனையை ஏற்படுத்தி மக்கள் மனங்களில் அமர இலக்கியத்தின் அடையாளமாக நிற்கின்றன.
செப்டம்பர் 9 'கல்கி'யின் 125-ஆவது பிறந்த தினம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.