பெண்ணொருத்தி கிள்ளிவளவன் என்ற சோழ அரசன் மீது காதல் கொண்டாள். செங்கோலாட்சி நடத்தி வந்த சோழன் வீதி உலா வந்தபோது அவன் பின்னே அவளது மனம் சென்று விட்டது.
உண்ணவும் உறங்கவும் முடியாமல் தவித்தாள். அத்தருணத்தில் அவள் தன் தோழியிடம், தான் அடைந்த துயரத்தைச் சொல்லிப் புலம்புவதாகப் பாடலொன்று முத்தொள்ளாயிரத்தில் இடம் பெற்றுள்ளது.
அறைபறை யானை
யலங்குதார்க் கிள்ளி
முறைசெயு மென்பராற் றோழி -
யிறையிறந்த
அங்கோ லணிவளையே
சொல்லாதோ மற்றவன்
செங்கோன்மை செந்நின்ற வாறு
- (முத்தொள்ளாயிரம் - பா.எ.36)
'தோழீ! ஊரார் கேட்கும்படியாகக் கொல்லுகின்ற கொடிய மதயானைகள் வருகின்றன. எல்லோரும் விலகிச் செல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டு பறையை அடிப்பவர்கள் முன்னே சென்றனர். அதற்குப் பின்னர் மதயானைப் படைகளையும், நன்றாக அசைகின்ற தொங்கல் மாலையையும் உடைய கிள்ளி என்ற சோழ மன்னன் செல்கின்றான். ஒழுங்காக முறை செய்கிறானென்று பலரும் கூறுகின்றனர். அவர்கள் ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் எனத் தெரியவில்லை. மன்னன் செல்லும் போது என் அழகான அணிவளையல்கள் கழன்று சென்று தொலைந்து விட்டன. அவ்வாறிருக்க, மன்னனை செங்கோலாட்சி செலுத்துபவன் என ஏன் சொல்லுகிறார்களோ?'' என வருத்தப்படுகிறாள் தலைவி.
கிள்ளிவளவனிடம் கொண்ட காதலால் உருகினாள் அப்பெண். அதனால் அவளுடைய உடல் மெலிந்து வளையல்கள் கைகளிலிருந்து கீழே விழுந்து தொலைந்தன. அவனை நேர்மையாக செங்கோலாட்சி செலுத்துபவன் எனப் பலரும் புகழ்ந்ததை அவள் மனம் ஏற்க மறுத்துவிட்டது.
'தோழீ, இந்த கிள்ளி ஏதோ நல்ல முறைமை செய்கின்றானாமே? என்ன முறை செய்கின்றான்? என்னுடைய மனம், வெட்கம், நலம், கைவளையல்கள் இவற்றையெல்லாம் கவர்ந்து பெரிய முறைகேடல்லவா செய்து விட்டான்? அந்த முறைகேட்டை என் கைவளையல்கள் உணர்த்துகின்றனவே! அதற்கு வேறு சான்றும் வேண்டுமோ?'' என்கிறாள்.
உள்ளம் கவர்ந்தவன், வளையலும் கவர்ந்தானே எனத் தன் துயரத்தை அப்பெண் வெளிப்படுத்துகின்றாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.