திருக்குறளும் நீதி இலக்கியங்களும்

திருக்குறள் எல்லாக் காலங்களுக்கும் உரியனவற்றை எடுத்துரைப்பதாகக் கருதப்பட்டாலும் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப, நாம் பொருள் கொள்ளும்விதத்தில் மாற்றத்துக்கும் மறுபரிசீலனைக்கும் உரியதான கருத்துகளும் அதில் உள்ளன.
திருக்குறளும் நீதி இலக்கியங்களும்
Published on
Updated on
2 min read

திருக்குறள் எல்லாக் காலங்களுக்கும் உரியனவற்றை எடுத்துரைப்பதாகக் கருதப்பட்டாலும் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப, நாம் பொருள் கொள்ளும்விதத்தில் மாற்றத்துக்கும் மறுபரிசீலனைக்கும் உரியதான கருத்துகளும் அதில் உள்ளன. அதனை உரிய வகையில் விளங்கிக்கொள்வதற்கான போக்கினையும் நாம் ஆழ்ந்தறிய வேண்டும். இஃது எல்லா நீதி நூல்களுக்கும் உரிய பொதுவான ஒரு நெறி முறை. இந்திய நீதி நூல்கள் அந்தந்த காலத்துக்கு ஏற்ப, நீதிகளை வகுத்திருப்பதை உணர வேண்டும்.

மகாபாரதத்தில் சபா பருவத்தில் வரும் கருத்தொன்றை, வள்ளுவர் கருத்தோடு பொருத்திக் காணலாம். "ஒரு வேலையைத் தொடங்கும் முன் அது குறித்த தெளிவான அறிவு வேண்டும்.

அதே வேளையில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தையும் வகுத்துக் கொண்டு செயல்படவேண்டும். அவ்வாறு செயல்படுவதற்குத் தக்கவரைத் தேர்ந்து கொள்ளவும் வேண்டும் ' என்கிறது.

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளங் கொளல் (677)

என்ற குறள் கருத்தின் எதிரொலியை மேலே குறிப்பிட்டுள்ளதோடு இணைத்துப் பார்க்கலாம்.

மகாபாரதத்தின் சாந்தி பருவம், இன்பமும் துன்பமும் பற்றிய கருத்தொன்றைப் பதிவு செய்யும்போது, "இன்பத்துக்குப் பிறகு துன்பமும், துன்பத்துக்குப் பின் இன்பமும் மாறிமாறி வந்து செல்லும்' என்கிறது. "மகிழ்வோ அல்லது துயரமோ எதுவாயினும் அதனை ஏற்கும் பண்பு ஒருவருக்கு வர வேண்டும். இரண்டையும் ஒன்றாகப் பாவிக்கும் பக்குவம் வேண்டும். அவற்றை ஒன்றாகவே ஒருவன் கருதவேண்டும்' என உரைக்கிறது. இதனைத் திருவள்ளுவர்,

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன் (628)

என்று உரைப்பர்.

மகாபாரதம் உத்தியோகப் பருவத்தில், தூது பற்றிய கருத்தை விதுர நீதியாக வியாசர் உரைப்பதாவது:

"செருக்கற்ற குணம்; சாமர்த்தியம், சமயோசிதம், பேராசை இன்மை, உடல் வலிமை; மாற்றாரிடம் உரையாடும்போது பணிவு, மரியாதை இவையெல்லாம் வேண்டும்' என்கிறார். தூதுக்குரியவன் பண்புகளை வால்மீகி இராமாயணம், " மாற்றார் அவையில் அச்சமற்று உரையாடல்; தன் மன்னனோடு நெருங்கி அன்போடும், பணிவுடனும் கௌரவத்தோடும் இருத்தல்; சாமர்த்தியம்; அரசியல் ஞானம்; பேச்சு வல்லமை; பூகோள அறிவு ஆகியவற்றைப் பெற்றிருக்கவேண்டும்' எனத் தெரிவிக்கிறது. திருவள்ளுவர் தூது பற்றிய அதிகாரத்தில், தூதுவனுக்குரிய பண்புகளை பலவாறு விரித்துரைக்கிறார்.

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு

இன்றியமை யாத மூன்று (682)

சாணக்கியரின் அர்த்த சாத்திரம், அரசன், "ஒரு செயலை எண்ணிச் செயல்படத் தொடங்கினால் அது பிறருக்குத் தெரியக் கூடாது. முடிவெடுத்த பின், அதனை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு மட்டுமே அந்தச் செயலின் இரகசியத்தைத் தெரியப்படுத்த வேண்டும். அச்செயல் நிறைவடைந்த பின்னரே அனைவருக்கும் தெரிவிக்கலாம். இடையில் தெரியப்படுத்தினால் எண்ணம் நிறைவேறாது போய்விடும்' என்கிறது.

திருவள்ளுவர்,

கடைகொட்கச் செய்வது ஆண்மை இடைகொட்கின்

எற்றா விழுமம் தரும் (663)

என்ற குறள் மூலம் இக்கருத்தைத் தெரிவிப்பர்.

அர்த்த சாத்திரம் குற்றம் செய்பவரை அரசன் தண்டிப்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. " மன்னன் தண்டிக்க வேண்டியவரைத் தண்டிக்க வேண்டும். தண்டிக்க வேண்டியவரைத் தண்டிக்காவிட்டாலும், தண்டிக்கக் கூடாதவரைத் தண்டித்தலும் பழியும் நரகமும் வந்து சேரும்' என்கிறது.

கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் என்ற குறள் வழி இதனை இணைவிக்கலாம்.

இந்திய நீதி நூல்களிலும் இதிகாசங்களிலும் அறநெறிக்கான பொதுமை உணர்வு ஒப்புநோக்குதலுக்கு உரியது. அறச்சிந்தனைகளில் ஒருமித்த கருத்துரு இந்தியச் சிந்தனை மரபில் வேரூன்றி இருப்பதை இவற்றால் அறிய முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com