'இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து, அதனை அவன்கண் விடல்' என்கிறான் வள்ளுவன். "இதனை' என்னும் சொல்லும், "அதனை' என்னும் சொல்லும் எவற்றைக் குறிக்கின்றன என்று வள்ளுவன் சொல்லவில்லை. "செய்து முடிக்க வேண்டிய வேலை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; அதைக் குறையில்லாமல் செய்து முடிக்கும் திறமை இருப்பவனுக்கு அந்த வேலையைக் கொடு' என்பதே வள்ளுவனின் அறிவுரை.
ஓர் அலுவலகத்தில், வரவேற்பாளர் வேலை பெண்களுக்குத்தான் வழங்கப்படும். பார்க்க வருபவர்களிடம், அன்பாகவும் பேச வேண்டும்; உறுதியாகவும் பேசவேண்டும்; பொறுமையுடனும் பேச வேண்டும்; இதற்கெல்லாம் ஆண்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள் என்பதாலேயே இளம்பெண்களுக்கு வாய்ப்பு.
அதே நேரத்தில், அலுவலகத்துக்கோ அல்லது அடுக்குமாடி குடியிருப்புக்கோ பாதுகாப்புக் காவலர் வேலைக்கு யாரும் பெண்களைத் தேடுவதில்லை. மிகப் பெரிதாக மீசையை வளர்த்து, முரட்டுத் தோற்றத்துடன் இருக்கும் ஆண்களுக்கு எளிதாக அந்த வேலை கிடைத்துவிடும். கையில் உருட்டுக் கட்டையுடன் பாதுகாவலர் இருக்கும் இடத்தை, தவறு செய்யும் எண்ணத்துடன் எவரும் நெருங்குவதில்லை. சில குறிப்பிட்ட வேலைகளுக்கு, குறிப்பிட்ட ஆடை குறியீடுகளும் உண்டு. இவற்றையெல்லாம் குறிப்பால் உணர்த்தும் கம்பன் காட்சி ஒன்று.
இராமன் சீதை திருமணம். இரு அரச குடும்பங்களின் திருமணம் அல்லவா? பெண் வீட்டை நோக்கி, மிகப் பெரிய ஊர்வலமாகவே மாப்பிள்ளை வீட்டார் கிளம்பினர். பேரரசன் தயரதன்; இரு இளவரசர்களான பரதன், சத்துருக்கனன்; அரச தேவியர் மூவர், அவர்களுக்குத் துணையாக வரக் கூடியவர்கள்
தொடங்கி, சாதாரண குடிமக்கள் உட்பட அனைவரும் கிளம்பினார்கள்.
அரச குடும்பங்களுக்குத் தரப்படும் யானைப் படை, குதிரைப் படை மற்றும் காலாட் படை வீரர்களின் பாதுகாப்புடன் ஊர்வலம் தொடங்கியது. அரச தேவியர் ஒவ்வொருவரும் தனித்தனி பல்லக்கில் சென்றனர். மூவரைத் தவிர, அரச குடும்பத்தின் வேறு பல பெண்களும் தொடர்ந்து பல்லக்குகளில் சென்றனர்.
ஊர்வலம் முழுமையும், படைவீரர்களின் பாதுகாப்பில் சென்றாலும், பல்லக்கில் செல்லும் அரச குடும்பத்தின் பெண்களுக்குத் தனியாக சிறப்பு பாதுகாப்புப் படையினர் சென்றார்கள். இந்த சிறப்புப் பாதுகாப்புப் படையினருக்குத் தனி ஆடை குறியீடுகள் இருந்தன.
அதுமட்டுமின்றி, அவர்களின் தோற்றமும் தனித்துத் தெரிந்தது. அவர்களுக்குள் சற்று உயர்நிலையில் இருப்பவர்கள் குதிரைகளில் வர, மற்றவர்கள், நடந்து வந்தனர். எப்போதும் பிறரை அதட்டுகின்ற சொற்களை உதிர்த்துக் கொண்டே வந்தனர். அவர்கள் அணிந்திருந்த உடை, தாழ்வாகவும், நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்றாற்போல் விரிந்து அகலமாகவும் இருந்தது. ஒவ்வொருவர் கைகளிலும் பிரப்பங்கோல் இருந்தது. இவை, சாதாரணமான பிரம்புக்குச்சியைவிட உறுதியானவை.
இப்படி அவர்களது ஆடை குறியீடுகளைச் சொன்ன கம்பன், அவர்களது தோற்றத்தையும் சொன்னான். எந்த நேரமும், எந்தக் காரணமும் இல்லாமலேயே அவர்கள் கண்கள் நெருப்பினை சிந்திக்கொண்டிருந்தன. இப்போது, கம்பன் பாடலைப் பார்க்கலாம்:
காரணம் இன்றியேயும் கனல் எழ
விழிக்கும் கண்ணார்,
வீர வேத்திரத்தார், தாழ்ந்து விரிந்த
கஞ்சுகத்து மெய்யார்,
தார் அணி புரவி மேலார், தலத்து உளார்,
கதித்த சொல்லார்,
ஆர் அணங்கு அனைய மாதர், அடி
முறை காத்துப் போனார்.
பாடலின் இறுதி வரியில், அரச குலப் பெண்களைக் காவல் காத்துப் போன செய்தி குறிப்பிடப்படுகிறது. "கதித்த சொல்லார்' என்றால், அதட்டுகிற சொற்களைச் சொல்லிக்கொண்டே இருப்பவர்கள் என்று பொருள். "தலத்து உள்ளார்' என்றால், தரையில் நடந்து செல்பவர்கள்; "தார் அணி புரவி மேலார்' குதிரை மீது அமர்ந்து செல்பவர்களைக் குறிப்பது. "தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார்' அவர்கள் அணிந்திருந்த ஆடைக்கான குறிப்பு. உறுதியான பிரப்பங்கோலைக் கைகளில் வைத்திருந்தார்கள் என்பதைச் சொல்வது, "வீர வேத்திரத்தார்'.
எந்தக் காரணமும் இல்லாமல், நெருப்பு சிந்தும் கண்களால் விழித்துப் பார்த்தபடி இருந்தார்கள் என்பதைச் சொல்வது, பாடலின் முதல் வரி.
கண்களுக்கு அழகு கருணை என்பதெல்லாம், காவல் காப்பவர்களுக்குப் பொருந்துமா என்ன? அப்படி கருணையும் இரக்கமும் பொங்கும் கண்களுடன் காவலர்கள் இருந்தால், ஏமாற்றுபவர்களுக்கு எளிதாக இருக்குமே? தவிர, பாதுகாப்பு எப்படி இருக்கும்? "காரணம் இன்றியேயும் கனல் என விழிக்கும் கண்ணார்' என்பது, காவலுக்கு ஆட்கள் தேடுபவர்களுக்குக் கம்பன் காட்டும் ஓர் எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதையும் நோ்வழியில் அடைய காத்திருத்தல் அவசியம்: நீதியரசா் என். ஆனந்த் வெங்கடேஷ்

இந்த வாரம் கலாரசிகன் - 29-03-2026
காலம்தோறும் கம்பன்
முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


