உள்ளினும் உள்ளம் சுடும்...

'உள்ளினும் உள்ளம் சுடும்' என்ற தொடர் வள்ளுவரைப் பாதித்த அல்லது சமுதாயத்துக்கு அவர் அறிவுறுத்த நினைக்கும் நிகழ்வுகளின் தொடர்ச்சியாகும்.
வள்ளுவர்
வள்ளுவர்
Published on
Updated on
2 min read

சாரதாம்பாள்

'உள்ளினும் உள்ளம் சுடும்' என்ற தொடர் வள்ளுவரைப் பாதித்த அல்லது சமுதாயத்துக்கு அவர் அறிவுறுத்த நினைக்கும் நிகழ்வுகளின் தொடர்ச்சியாகும்.

இத்தொடர் என்பது உள்ளத்தின் செயல்பாடுகளைக் குறிக்கிறது. வள்ளுவர் உள்ளினும் உள்ளம் என்ற தொடரை, பொருட்பாலிலும் (293, 799) காமத்துப் பாலிலும் (1207) என மூன்று இடங்களில் எடுத்துப் பேசுகிறார்.

'உள்ளினும்' என்பது மீள நினைத்தலின் உளச் செயற்பாடு. அதற்கு அடுத்து வரும் உள்ளம் என்பது நினைத்தல் என்ற செயல்பாடு நிகழ்வதற்குரிய உள்ளத்தைக் குறிக்கிறது. 'உள்ளத்தின் செயல்பாடுகளும், அவை நிகழ்வதற்குரிய இடத்தையும் இணைந்தே குறிக்கும் தன்மையே' இத்தொடரின் இன்றியமையாப் பண்பாகும். மேலும் 'உளப்பகுப்பாய்வு' என்ற உளவியல் நோக்குடனும் தொடர்புடையது.

அறத்துப்பாலில்...

'தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்' (வாய்மை: 293)

என்ற குறளில் பொய் சொல்லக் கூடாது என்கிறார்.

உள்ளத்தின் இயங்கு திறன்தான் மனித நடத்தைகளுக்கெல்லாம் ஆணிவேர். ஒருசில நேரங்களில் உள்மனம் பேசுவதை நாம் உணரமுடியும். நெஞ்சறிய உள்ளம் சொல்வது பொய் என்று உள்மனம் மெளன மொழியால் உணர்த்தியும், பொய் சொன்னால் அந்த ஆழ் மனமானது சாகுமளவும் தீச்சுட்டது போல உள்ளே இருந்து வருத்துமாம். இந்த நனவிலி மனச் செயற்பாட்டைத்தான் வள்ளுவர் எடுத்து மொழிகிறார். ஒருவன் 'நெஞ்சழிந்து பொய் சொல்வது, அவனது வாழ்க்கைக்கு இழுக்கு' என்பது வள்ளுவர் உணர்த்தும் வாழ்வியல் நெறியாகும்.

வள்ளுவரைப் பாதித்த இன்னொரு செயல் பலகாலம் நண்பனாகப் பழகிவிட்டு, மிகுந்த, தாங்கொணாத் துன்பம் வரும்போது, ஒருவனை விட்டு விலகுவது. அதைப் பொய் நட்பு என்கிறார்.

இன்பமாக, மகிழ்வாக ஓடும் வாழ்க்கைப் பயணத்தில் நண்பர்கள் உடனிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், உயிர்த் தோழன் ஒருவன் தன் நண்பனுக்குத் துன்பம் வரும் போது விலகிச் செல்வதை,

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளம் சுடும். (நட்பு ஆராய்தல் 799)

என்று வள்ளுவர் வருந்தி வார்த்தையாடுகிறார். துன்பம் வரும்போது, ஒருவரை விட்டு விலகிச் செல்லும் பொய் நட்பு இருக்கிறதே அது இழிசெயலாகும். அது நினைக்குந்தோறும், நினைக்குந்தோறும் தீயாய்ச் சுடும் என்ற மனிதநேயமில்லாச் செயலை நினைத்து வள்ளுவர் குமுறுகிறார்.

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும் (1207)

என்று கற்பியலில், 'நினைந்தவர் புலம்பலில்' தலைவி கூற்றாகப் பேசுகிறார்.

தலைவி, தலைவனின் பிரிவுத் துயரால் படும் வேதனையை நினைத்து வருந்துகிறாள். எப்படி? அவனை மீண்டும் மீண்டும் இடைவிடாது நினைப்பதினால், தலைவனுடன் உடனிருக்கும் போது பெற்ற இன்பத்தை உணர முடிகிறது. ஆனால், இப்போது கிடைக்கவில்லையே என்று நினைக்கும் போது, அவள் மனம் படும் வேதனையை 'தீயாய்ச் சுடும் ' என்கிறார் வள்ளுவர்.

'உள்ளுதல்' என்ற மனச்செயல்பாடானது, ஒன்றை நினைத்து வருந்துதல். ஒரு சிறிதும் மறவாது இருத்தல். மனத்தால் முழுமையாக எண்ணுவது. ஆராய்ந்து அறியும் நோக்குடன் இருத்தல். இடைவிடாது நினைத்தலுடன் கூடிய முயற்சி. பாதிக்கப்பட்ட சிந்தனைகள் நிறைந்த உணர்வுகளின் குவி மையம் போன்ற ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய நிலைக் களன்களைச் சுட்டுகிறது. இவை தனிமனித நனவிலி உளச்செயல்பாடாகும்.

தான் வாழ்ந்த சமுதாயத்தில் பொய் சொல்லுதல், பொய் நட்பு, அன்பின் பிரிவு நீட்சி போன்ற செயல்கள் வள்ளுவரின் மனதைப் பாதித்த சிந்தனைகளாகும். இவை அவர் மனத்தில் தங்கி சமுதாயச் சீர்திருத்தம், சமுதாயம் பற்றிய ஆழ்ந்தறியும் நோக்குகளையும் தூண்டி இருக்கின்றன. அதனால்தான், சமூக நிலைப்பாடுகள் பலவற்றுள் தன்னைப் பாதித்த மூன்று செயல்களைச் சுடும் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

ஒன்று வள்ளுவர் மிகவும் வருந்துவது நெஞ்சறிந்து பொய் சொல்லும் மனித குலத்தைப் பற்றியது; மற்றொன்று, பொய் நட்பு; பிறிதொன்று, புலனுணர்வு சார்ந்த காதலும் காமமும் இணைவதால் வரும் பிரிவுத்துயர்.

வள்ளுவரைப் பாதித்த இம்மூன்று செயல்பாடுகளும் ஒவ்வொரு மனிதரினுள்ளும் செயல்படும் தனிமனித நனவிலிச் செயல்பாடுகளாகும். சமுதாய நலன் குறித்து ஆழ்ந்து அறியும் நோக்கும், அதை மனிதகுலம் முழுமையும் தனக்கே அறிவுறுத்துவது போன்று உணர வைக்கும் செவ்வியல் இலக்கியங்களுக்கே உரித்தான 'பொதுமைப் பார்வையும்'தான் வள்ளுவத்தை 'உலகப் பொதுமறை' என்று உரத்த குரலில் சொல்ல வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com