
உலகத்தார் போற்றும் அறங்களுள் காலத்தால் மாறாததும் கருத்தால் அழியாததுமான உன்னத அறம் ஈகையாகும். உடையோர் இல்லாதார்க்கு வழங்குதலே ஈகை என்பதை அனைவரும் அறிவோம்.
இப்பண்பு சமுதாயத்தில் நீக்கமற நிறைந்திருந்தால் சமதர்மம் உருப்பெற வழிவகுக்கும்; எல்லோரும் எல்லாச் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை என்ற கம்பன் கனவு நனவாகும்.
சங்ககால சமூகத்தில் பழுமரம் நாடிச் செல்லும் பறவை போல புலவர்கள் வள்ளல்களை நாடிச் சென்று அவர்களைத் தங்கள் புலமைத்திறத்தால் பாடி, பரிசில் பெற்று தங்கள் வறுமையைச் களைந்தனர்.
அக்காலத்தில் வள்ளல்கள் புலவர்க்குப் பொருள் வழங்கும் போது அவர்களின் புலமைத் தகுதியறிந்து வழங்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். அவ்வாறு அவரவர் தகுதியறிந்து வழங்குவதை 'வரிசையறிதல்' என்றனர். நான்கு திசைகளிலிருந்தும் வள்ளல்களை நாடிப் பரிசில் பெற புலமை மிக்கோரும் புலமை அற்றோரும் என இரவலர் பலரும் வருவர். வள்ளல் தன் வள்ளண்மையால் அனைவருக்கும் ஈதல் எளிது. ஆனால் புலவர்தம் புலமைத் தகுதி அறிந்து ஈதல் அரிதாகும். இதனைப்
'பரிசில் மாக்கள் வரிசையறிதலோ அரிதே;
பெரிதும் ஈதல் எளிதே' (புறநானூறு 121)
என்பார் புலவர் கபிலர்.
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர் (குறள். 528)
என்பது குறள். மேலும் 'வரிசையின் அளிக்கவும்' என ஒளவை (புறம்.331) 'வரிசையறிதலின்' (புறம் 140) என முதுகூத்தனார் போன்ற புலவர்பெருமக்கள் கூறுவதும் அக்கருத்தை வலியுறுத்தும்.
சங்க காலத்திற்குப் பிறகும் இவ்வழக்கம் இருந்ததை 'தத்தம் வரிசையான் இன்புற' (நான்மணிக்கடிகை பா.67) என விளம்பிநாகனார் கூறுவதும் வரிசையறிதலின் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கும். பரிசிலர் என்ற முறையில் புலமைத்திறம் உடையவரோடு, புலமைத்திறம் அற்றவரையும் ஒன்றாக நோக்குதல் அறிவுக்கு ஒவ்வாது என்பதால் வரிசையறிந்து ஈக என்றனர்.
வரிசையறியும் நோக்கில் வள்ளலும் புலவரையொத்த புலமையுடையவராய் இருத்தல் வேண்டும். இல்லையெனில் புலவர் தகுதி நோக்க இயலாது என்பதும் சிந்திக்கத்தக்கது (புறம் 21). 'புலமை மிக்கவரை புலமையறிதல் புலமிக்கவர்க்கே இயலுவதொன்றாகலின் வரிசையறிதல் அரிதாயிற்று' என ஒளவை துரைசாமி பிள்ளை தம் விளக்கவுரையில் (புறம் 21) கூறுவதும் அக்கருத்தை வலியுறுத்தும்) சோழன் நலங்கிள்ளி, பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற வள்ளல்கள் அக்காலத்து கவி பாடும் புலமை மிக்கோராய் விளங்கினர் என்பதும் குறிக்கத்தக்கது.
எனினும் அக்காலத்து, வரிசையறியாது ஈக என மனித நேயத்துடன் வழங்கும் வழக்கமும் வலியுறுத்தப்பட்டது. ஈகை என்பது புலமை எனும் தகுதி நோக்கி அமையாமல் அவர் வறுமை நோக்கி அமைய வேண்டும் என்றனர். புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், 'ஈவோரின் மனம் இரப்போரின் உண்ணா மருங்குல் (வயிறு) நோக்கி நிற்க வேண்டுமேயல்லாது தகுதி நோக்கி நிற்றலாகாது' என்பார். இதனை,
வல்லா ராயினும் வல்லுந ராயினும்
வருந்தி வந்தோர் மருங்கி நோக்கி
அருள வல்லை யாகுமதி (புறம். 27)
என்ற பாடலடிகள் உணர்த்தும். இங்கு வரிசையறிதல் வேண்டாம், வறுமை நோக்கி ஈக எனும் அறம் வலியுறுத்தப்படக் காண்கிறோம். மேலும் இரவலர்கள் வள்ளல்களிடம், 'பெரும! என் சிறுமை கருதி இழிவாக நோக்காது உன் பெருமையறிந்து வரிசை அறியாது வழங்குக' என வேண்டுவதை,
என் சிறுமை யினிழித்து நோக்கான்
தன் பெருமையின் தகவு நோக்கி (புறம். 387)
என்ற பாடல் வரிகள் உணர்த்தும். இரப்போர் துயரத்தோடு இரங்கி நின்று வேண்டுகையில் 'தகுதி நோக்காது யாவரேயாயினும் வழங்குக' என்ற உயர்பண்பினைப் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு உணர்த்துவது சிறப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.