
திருக்குறள் எளிய சொற்களால் ஆகிய அரிய நூல். ஆயினும் சில குறட்பாக்கள் உணர்வதற்கு அரியன. உரையாசிரியர்கள் ஒரு குறளுக்கே பலவாறாகப் பொருள் கண்டுள்ளார்கள். இதற்குக் காரணம் அக்குறளைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட இடர்ப்பாடே ஆகும். அத்தகைய குறட்பாக்களில் ஒன்று:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம் (85) என்பது.
இதற்கு, ''முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு, வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா'' என்பது பரிமேலழகர் கண்ட பொருள். இதனையே மணக்குடவர் முதலிய பண்டைய உரைகாரர்களும் இக்கால உரையாசிரியர்களில் சிலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், இக்கால உரையாசிரியர் சிலர் இவ்வுரையை ஏற்கவில்லை. அதற்கு வித்தின்றி எவ்வாறு நிலம் தானே விளையும் என்னும் சிந்தனையே காரணம்.
நாமக்கல் கவிஞர் ''வயலுக்கு விதை கூடப் போட வேண்டாம்' என்று கூறியுள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம், விருந்திட்டு மிச்சமிருந்தால் உண்போம் என்ற மனப்பான்மையுள்ளவனுக்கு அவனுடைய சொந்த நிலத்தில் விளைந்துதான் தானியம் வர வேண்டும் என்பதில்லை'' என்கிறார். இதற்குக் கருத்து விருந்தோம்புவதில் நெல் தீர்ந்துவிட்டால் பிறரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பதாகும்.
புலவர் குழந்தை அவன் புலத்தில் ஊரவர்களே தத்தம் வித்தைத் தாங்களே விதைத்துவிடுவர் என்கிறார். இதே கருத்தினையே குன்றக்குடி அடிகளாரும் ஊரார் அவனுக்காக வேளாண்மை செய்து விளைச்சலை வீடு கொண்டுவந்து சேர்ப்பர் என்று குறித்துள்ளார்.
இதுவும் இயல்பான விளக்கமாக இல்லை. இக்குறள் தெரிவிப்பது யாது?.
இஃது உழுதுண்டு வாழ்வான் செய்யும் அறச்செயல். ஆதலின் அவன் ஒழுகலாற்றை அறிதல் வேண்டும். அதற்குச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் மீது ஆடுதுறை மாசாத்தனார் பாடியுள்ள கையறுநிலைப் பாட்டு துணைபுரிகிறது. ''கூற்றுவனே! நீ மிகவும் அறிவற்றவன். விதை நெல்லையே குற்றி உண்டுவிட்டாயே? இந்த உண்மையைப் போகப் போக நீ உணர்வாய்.
இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போர்க்களத்தில் வீரர்களையும், குதிரை யானைகளையும் கொன்று உன்னை வருத்தும் பசியைப் போக்கியவன் கிள்ளிவளவன். அவன் கொலைத் தொழிலில் உனக்கு நிகரானவன். அவனைக் கொன்றுவிட்டாயே! இனி உன் பசியைத் தீர்க்க யார் உள்ளார்?' என்கிறார் அவர்.
நனிபேதையே, நயனில் கூற்றம்!
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை!....
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி
இளையோற் கொண்டனை ஆயின்
இனியார் மற்றுநின் பசி தீர்ப்போரே?
(புறம், 227)
இதனால் ஒன்றிலிருந்து பல நெல்மணிகளைத் தரும் விதை நெல்லை உண்பது அறிவற்ற செயல் என்பது உணர்த்தப்படுகிறது. உழவன் பட்டினி கிடந்தாலும் விதை நெல்லைச் சோறாக்கி உண்ண மாட்டான். இதற்கு இளையான்குடி மாற நாயனார் வாழ்க்கையே சான்று.
காலையில் வயலில் விதை நெல்லை விதைத்து வந்துள்ளார். ஆனால் அவரும் அவருடைய மனைவியும் பட்டினியாகக் கிடக்கின்றனர். விதை நெல்லில் சிறிது எடுத்துச் சோறாக்கி இருக்கலாமே? ஏன் செய்யவில்லை? உழவன் விதை நெல்லை எந்நிலையிலும் உணவாக்கித் தான் உண்ண மாட்டான் என்பதைத் தவிர வேறு காரணம் உண்டோ?
அத்தகைய உழவன் விருந்தினர் வந்தால் விதை நெல்லையும் உணவாக்கிப் படைப்பான். ஒப்புரவுக்காகத் தன்னையே விற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவன் விதை நெல்லைப் பயன்படுத்தத் தயங்குவானா?
திருக்குறளில் வேண்டும் என்னும் சொல் தேவை என்னும் பொருளிலும், விருப்பம் என்னும் பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்ணாமை வேண்டும் புலால் (257) என்பது உண்ணாது ஒழிதல் வேண்டும் என்றும், அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை (343) என்பது ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும் என்றும், இன்னா எனத் தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் (316) என்பது துன்பந் தருவன என்று அறிந்தவற்றைப் பிறரிடம் செய்யாமை வேண்டும் என்றும் பொருள்படும். இவற்றில், 'வேண்டுதல்' என்பது தேவை என்னும் பொருளில் வருகிறது.
வேண்டுதல் வேண்டாமை இலான் (4) என்பது விருப்பு வெறுப்பு இல்லாதவன் என்றும், வேண்டின் உண்டாகத் துறக்க (342) என்பது துன்பம் இல்லாத வாழ்க்கையை விரும்பினால் பொருட்பற்றைக் கைவிடுக என்றும், வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் (362) என்பது ஒருவன் ஒன்றை விரும்புவதானால் பிறவா நிலையை விரும்புதல் வேண்டும் என்றும் பொருள்படும். இவற்றில் 'வேண்டுதல்' என்னும் சொல் விரும்புதல் என்னும் பொருளில் பயில்கிறது.
'வித்தும் இடல் வேண்டும் கொல்லோ' என்பதில் பயிலும் வேண்டும் என்பது தேவை என்னும் பொருளிலன்றி விருப்பம் என்னும் பொருளில் அமைந்துள்ளதாகக் கொள்வதே சாலும்.
இவ்வடிப்படையில் நோக்கின் இக்குறளுக்கு, 'விருந்தினரை உபசரித்து எஞ்சியவற்றை உண்ணும் இல்லறத்தான் தன் விளைநிலத்திற்கு வித்தும் இடுவதற்கு விரும்புவானோ? மாட்டான். விதை நெல்லையும் உணவாக்கி விருந்தளிப்பான்' என்று பொருள்கொள்வதே நேரிதாக அமையும். இதற்கு, 'விதையையும் குற்றி விருந்தளிப்பான்' என்று கருத்துக் கூறியுள்ளார் பேராசிரியர் இலக்குவனார். அதுவே தக்கதும் ஏற்புடையதும் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.