மாடு என்பதற்கு செல்வம் என்ற பொருளும் உண்டு. மாடல்ல மற்றையவை என்பார் திருவள்ளுவர். அக்காலத்தில் கவர்ந்து கொள்ளுதற்குரிய களவுப் பொருளாக விளங்கியது ஆநிரை.
நாட்டின் எல்லையில் இருக்கும் ஊர் மறவர் பக்கத்து நாட்டிலுள்ள ஆநிரையைக் கவர்ந்து வருவர். இந்த முயற்சியில் இரண்டு பக்கத்தாரிடையே பூசல் நிகழும். இது மாடு பிடிச் சண்டை என இக்காலத்தில் பெயர் பெறும். இதை வெட்சிப் போர் எனத் தொல்காப்பியம் கூறும்.
இவ்வாறான வெட்சிப் பூசல் சோழநாட்டின் எல்லையூர் ஒன்றில் நிகழ்ந்தது. வீரன் ஒருவன் பகைவர் ஊரில் புகுந்து கன்றும் ஆவுமாய் ஒரு பெருந்திரளையே கொண்டு வந்து விட்டான். அப்படிக் கொண்டு வரும் முயற்சியில் பகைவர் வாளும் வேலும் அவன் உடலில் பல புண்களை ஏற்படுத்தியிருந்தன. எல்லாம் மார்பில் பட்ட புண்கள்தாம். அப்புண்பட்ட நிலையிலும் அவன் பகைவரை எதிர்நின்று போரிட்டு அவர்களை அஞ்சி ஓடச் செய்தான்.
அவன் தன் ஊரகத்தே நிரைகளைக் கொண்டு வந்து நிறுத்தினான். தன் ஊராரைப் பார்த்து இவற்றை எல்லாரும் பங்கிட்டுக் கொள்ளுங்கள். என்னோடு வந்து போரில் ஈடுபட்டவர்கள், பகை நிலத்தின் நிலையை ஆராய்ந்து வந்து கூறிய ஒற்றர், நம் சுற்றத்தார், புலவர் ஆகிய எல்லாரும் கொள்ளுங்கள் என்று கூறி வீடு போய்ச் சேர்ந்தவன், புண்
களின் தாக்கத்தால் இயற்கை எய்தினன்.
ஊரவர் அம்மறவனின் இறப்புக்கு இரங்கினர். தமக்கெல்லாம் பெருங்கொடை நல்கிய அப்பெருமகனை நினைத்து கண்ணீர் சொரிந்தனர். பரற்கற்கள் பரவிக் கிடக்கும் அந்தக்
குறிஞ்சி நிலத்தில் ஒரு பகுதியை மேடாக்கினர். அம்மேட்டில் ஒரு கல்லை நீராட்டிக் கொண்டு வந்து அவன் நினைவாக நட்டனர்.
அதற்கு வெட்சிப் பூக்களாகிய சிவந்த மலர்களை மரல் நாரிலே தொடுத்து அந்த மாலையோடு மயிலின் பீலியையும் சேர்த்துக் கட்டினர்.
அந்த நெடுந்தகையாம் பெருவீரனைக் காணப் பாணர் சுற்றம் இன்றும் வருவார்கள். அவன் இறந்தது அவர்களுக்குத் தெரியாது. அப்போது அவன் இருப்பதாகவே நினைத்து பாடவும் கூடும். அப்பாட்டைக் கேட்டு ஊராரும் உறவாரும் ஐயகோ அவன் போயினன், கல்லாகி விட்டான் ஐயா என்று கதறவும் கூடும்.
பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி,
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர் பொறித்து
இனி நட்டனரே! கல்லும்; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே?
(புறம்.-264)
இவ்வாறு பெயரறியா அவ்வீரனின் பீடும் வீரமும் பேசுகிறார் உறையூர் இளம் பொன் வாணிகர். அவ்வீரன் பெயர் தெரியாதது போலவே இப்புலவர் பெயரும் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுகதையல்ல நாடகக் கவிதை!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்

ஆம்புலன்ஸில் வந்து மூதாட்டி வாக்களிப்பு
உறவுப்பாலம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


