பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சிறுகதையல்ல நாடகக் கவிதை!

கலைகளுள் இரண்டு வகைகள் உண்டு; நாடகம், ஓவியம், சிற்பம் முதலியன காட்சி வடிவக் கலைகள்; கவிதை, உரைநடை முதலியன எழுத்து வடிவக் கலைகள்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 11:51 am

கலைகளுள் இரண்டு வகைகள் உண்டு; நாடகம், ஓவியம், சிற்பம் முதலியன காட்சி வடிவக் கலைகள்; கவிதை, உரைநடை முதலியன எழுத்து வடிவக் கலைகள். இரண்டு கலைவடிவங்களும் ஒரு வாசகன் அல்லது பார்வையாளனின் மனத்தில் ஏற்படுத்தும் தாக்கமே கலைகளின் பயனும் விளைவும் ஆகும். ஒன்றைக் கூறும்போது, கூறப்படும் சொற்களிலேயே உணர்வைக் கொண்டுவருவது சிறப்பான கவிஞர்களின் தனிச்சிறப்பான பண்பாகும் என்று பல திறனாய்வாளர்கள் கூறுவதுண்டு.

நாடகம் பற்றிக் குறிப்பிடும் அரிஸ்டாடில் ஒரு நாடகத்தில் கதைப்பின்னல் , எதிர்த்திருப்பம், நாடகச் செயல்கள், பாத்திரப் படைப்பு, சொல்லாட்சி, பாத்திரங்களின் கருத்து வெளிப்பாடு முதலிய கூறுகள் குறித்து மிக விரிவாகக் கூறுகிறார்.

தமிழ் மொழியின் தொன்மைக் கவிதைகள் தன்னுணர்ச்சிப் பாடல்கள் எனினும் அவற்றில் நாடகப் பண்புகள் இருக்கின்றன; அதனாலேயே அவை இன்றளவும் வாசிப்பதற்குச் சுவையுடையனவாக இருக்கின்றன. சங்க இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகையின் பாடல்கள் பல நாடகத்தன்மை உடையவை. சான்றாக ஒரு பாடலைக் காணலாம்:

சுடர்த் தொடி! கேளாய்- தெருவில்

நாம் ஆடும்

மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய

கோதை பரிந்து வரிப்பந்து கொண்டு ஓடி,

நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,

அன்னையும் யானும் இருந்தேமால் இல்லீரே

உண்ணுநீர் வேட்டேன்என வந்தாற்கு,

அன்னை

அடர்பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!

உண்ணுநீர் ஊட்டிவா என்றாள், என யானும்

தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை

வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு

அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!

என்றேனா

அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்

உண்ணுநீர் விக்கினான் என்றேனா, அன்னையும்

தன்னைப் புறம் பழித்து நீவ, மற்றெ ன்னைக்

கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி

நகைக் கூட்டம்

செய்தான் அக்கள்வன் மகன்

-(கலித்தொகை, குறிஞ்சி, 51)

இது அகப்பாடல் தலைவி ஒருத்தியின் கூற்றாக அமைந்தது. ஒளிவிடும் வளையல்களை அணிந்த பெண்ணே! இன்று எங்கள் இல்லத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது; நாம் சிறுமியர்

களாக இருந்த காலத்தில் நம் மனத்தை நோகச் செய்த குறும்புக்காரச் சிறுவன் இப்போது இளைஞனாக இருக்கிறான். அவன் ஒருநாள் பகற்போதில், நானும் அன்னையும் தனித்திருந்தபோது வீட்டுக்கு வந்தான்; 'இல்லத்தில் இருப்போரே சிறிது குடிதண்ணீர் தருக' என்று வேண்டினான். என் தாய், 'நீ சென்று சிறிது உண்ணும் நீர் ஊட்டி வா' என்று பணித்தாள்.

நானும் வந்திருப்பவன் யாரென்று அறியாமலேயே சென்று அவனுக்கு நீரை வார்த்தேன்; அப்போது அவன் என் கைகளைப் பற்றினான். நான் திடுக்கிட்டு, 'அன்னையே! இவன் செய்ததைப் பார்' என்று கூச்சலிட்டேன்; அன்னை அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தாள். அதற்குள் வந்தவன் இன்னானென்று நான் அறிந்து கொண்டதால், 'உண்ணும் நீர் விக்கிக் கொண்டது' என்று பொய் கூறி அவனைக் காப்பற்ற முயற்சி செய்தேன்; அன்னை அவன் முதுகைத் தடவி விட்டு அறிவுரை கூறிச் சென்றாள். அப்போது, அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான்; அச்சிரிப்பு என்னைக் கொல்வதுபோல இருந்தது; அவன் ஒரு கள்வன்! என்று மகிழ்ச்சியும் கேலியும் கலந்து கூறுகிறாள் தலைவி. இதுவே இப்பாடலின் கருத்து.

இதில் ஒரு சுவையான, நினைவில் நிற்கக் கூடிய நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது; கதை மாந்தர்களின் செயல்கள், எண்ணவோட்டங்கள், எதிர்

பாராத திருப்பங்கள், உணர்வுகள், பின்னோக்கு உத்தி முதலிய நாடகக்கூறுகள் அமைந்திருக்கின்றன.

தமிழில் சிறுகதையின் தோற்றம் குறித்து

70-களில் எழுதிய பல

பேராசிரியர்கள் இந்தப் பாடலை ஒரு சிறுகதை என்றே கூறி விளக்கியுள்ளனர். இதுவே நாடகக் கவிதை என்று கூறத்தக்கது. இந்தப் பாடலில் நிகழ்ச்சிகள் விவரிக்கப்படும்போதே, அவை ஒரு காட்சியாக வாசகன் மனத்தில் விரிகின்றன. கவிதை எடுத்துரைப்பியலில் இதைக் காட்சிப்படுத்துதல் என்று திறனாய்வாளர்கள் கூறுவதுண்டு. சங்க இலக்கியங்களில் இதைப் போன்ற சுவை மிகுந்த நாடகக் கவிதைகள்

பலவுள.

நாடகத்தின் இன்றியமையாத கூறுகளுள் ஒன்று உரையாடல் என்பதாகும். உரையாடல் என்பது ஓர் இலக்கியப் படைப்பில் கருத்து விளக்கமாகவும் செய்தியைக் கூறுவதாகவும் நிகழ்ச்சியை முன்னோக்கி நகர்த்துவதாகவும் இருக்கும். இத்தகைய உரையாடல் அமைந்திருக்கிற புறநானூற்றுப் பாடல் ஒன்றைக் காணலாம்:

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

யாண் டுளனோ என வினாவுதி ; என்மகன்

யாண்டு ளன் ஆயினும் அறியேன் ஓரும்

புலி சேர்ந்தது போகிய கல்லளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவான் மாதோ போர்க்களத்தானே

-புறநானூறு 86

பழந்தமிழ்நாட்டில் ஒரு வீட்டுக்கு வந்து அந்த வீட்டின் இளைஞன் ஒருவனைப் பற்றி அவனுடைய தாயிடம் வினவும் ஒரு பெண்ணுக்குத் தாய் கூறிய விடைதான் இப்பாடல். வந்தவள் அவ்வீட்டின் தூணைப் பற்றி நின்று கொண்டு வினவுகிறாள்; தாய் தன் வயிற்றைக் காட்டி 'புலி இருந்துவிட்டு வெளியேறிய குகை போல இதோ என் வயிறு; மகன் ஒருவேளை போர்க் களத்தில் இருப்பான்' என்று பதில் கூறுகிறாள்.

வீரயுகக் காலத்தில் மாந்தர் பண்பாடு , பெண்டிர் நிலை, வீர உணர்ச்சி போன்ற ஓராயிரம் செய்திகளை இப்பாடல் தாங்கி நிற்கிறது. இந்தப் பாடலின் கதைமாந்தர்களின் உடல் மொழி, வருணனை முதலியவை காட்சிப்படுத்தல் முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

தன்னுணர்ச்சிப் பாடல், நாடகம், காப்பியம் போல்வன தனித்தனி இலக்கிய வகைகள்! எனினும், ஒரு படைப்புக்குள் பல்வேறு இலக்கிய வகைகளின் பண்புகள் இடம்பெற்றிருப்பது அரிதான புனைவுமுறைக்குச் சான்று; இங்கு காட்டப்பட்ட பாடல்கள் போல அரிதான பாடல்கள் பல சங்க இலக்கியங்களில் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.