முனைவர் ப. சுடலைமணி
சங்கப் பனுவல்கள் மிகவும் சிறப்பான படைப்பு மொழியைக் கொண்டு விளங்குகின்றன. குறிப்பாக, அகப் பாடல்கள் ஒவ்வொன்றும் தன்னகத்தே நுட்பமான வெளிப்பாட்டு உத்திகளையும் பெற்றுத் திகழ்கின்றன. இவற்றை மேலோட்டமான காட்சி சித்தரிப்புகளை மட்டுமே கொண்டுள்ளன என்று கூறி ஒதுக்கிவிடமுடியாது.
குறுந்தொகையில் குறிஞ்சித் திணையாக அமைந்த பாடல் ஒன்றில் பரணர், நன்னனைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஒன்றைக் குறிப்பிடுகிறார்.
நற்றாய், ஒருநாள் தலைவன் நம்மிடத்துக்கு வந்ததை அறிந்தாள்; அன்றுமுதல் முன்னையிலும் மிகப் பாதுகாத்து வருகிறாள் என்று தோழியானவள் தலைவியிடம் தலைவன் சிறைப்புறத்தானாக நிற்கும் போது கூறுகிறாள்.
தலைவனையும் தலைவியையும் கண்காணிக்கும் நற்றாயின் செயலைத் தோழி மிகவும் கொடுமையானதாகக் கருதுகிறாள். தலைவன்,
தலைவியைக் காணவரும் செயலை அறச்செயலாகப் போற்றுகிறாள். அதே சமயம் தலைவன், தலைவியை விரைவாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் விழைகிறாள்.
பரணர், தாயின் செயலைத் துலக்கம் அடைய செய்ய முயல்கிறார். தாய் இரவு முழுவதும் தூங்காமல் தலைவியைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகின்றாள். இந்த நிகழ்ச்சியைக் கவிதையில் சொல்லவரும் பரணருக்கு ஓர் ஐயம் ஏற்படுகிறது. தான் நினைத்ததை வெறும் அகப்
பொருள் மரபினையொட்டி மட்டுமே கூறிவிடமுடியாது என்று நினைக்கிறார்.
கவிதையின் தொடக்க அடிகளில் தான் அறிந்த வரலாற்று நிகழ்வு ஒன்றைப் புனைகதை பண்பு தொனிக்க அமைத்து, அந்த நிகழ்வைக் கூறிமுடிக்கும் இடத்தில் 'பெண் கொலை புரிந்த நன்னன்போல' என்ற புகழ்மிக்க உவமையை அமைத்து விடுகிறார்.
கவிதையில் நன்னனை உவமையாக மட்டுமே பயன்படுத்தியுள்ளார். ஆனால், நற்றாயின் சித்திரத்தை அழுத்தி வரைவதற்கு 'ஆவணப்படுத்துதல்' என்ற உத்தியைச் சிறப்பாக அமைத்துள்ளார். பரணரின் கவிதையில் எடுத்துரைப்பு சார்ந்த கதைமொழி சற்றுத் தூக்கலாக இருப்பதால், இதைக் கதைமொழி என்றே கூறிவிடலாம்.
கதையின் இடையே ஆசிரியர், தான் அறிந்த கருத்துகளைப் புகுத்துதல் 'ஆவணப்படுத்துதல்' என்ற உத்தியாகும். கதை எழுதுபவர் கதைப்போக்கை இடையே நிறுத்திக் கதைமாந்தர் பற்றிய தன்னுடைய விமர்சனங்களைக் கூறித் தன் கருத்தைப் பதிவு செய்வார்.
இதனால், வாசகர் கதையை ஆழமாக விளங்கிக் கொள்ளமுடியும் என்ற வாலஸ் ஹில்டிக் கூற்றை அடிப்படையாகக் கொண்டு பரணரின் எடுத்துரைப்பை விளங்கிக் கொள்ளலாம்.
மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே.
(குறுந்தொகை- 292)
ஒள்ளிய நெற்றியையுடைய பெண் நீராடுவதற்குச் சென்றாள். அந்நீரில் அடித்து வரப்பெற்ற பசுங்காயைத் தின்றாள். அவள் செய்த பிழைக்காக நன்னன் அவளைக் கொலை செய்தான். ஒருநாள் நகைமுகத்துடன் தலைவன் விருந்தினனாக வந்ததற்காக, பகை மூண்டுவிட்ட ஊரில் உறங்காதவனைப் போன்று தாயும் உறங்கவில்லை. எனவே, நன்னனைப் போலத் தாயும் நரகத்துக்குச் சென்று நீக்கமில்லாத துன்பத்தை அடைவானாக என்பது பாடலின் கருத்தாகும்.
நன்னன் தன்னுடைய சுயநலத்துக்காகப் பேதை பெண்ணொருத்தியைக் கொலை செய்தான். அந்தப் பழிச்சொல் அவனை விடாமல் பிடித்துக் கொண்டது. அதுபோல நற்றாயின் செயலும் பழிக்கத்தக்கதாகும். ஆகையால், அவளும் நரகத்துக்கே செல்வாள் என்று தோழி கூறுவதாகப் புலவர் அமைத்துள்ளார்.
நல்ல படைப்பு என்பது முதலில் வாசகனின் கவனத்தை ஈர்க்கவேண்டும். மேலும், ஏதேனும் ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி வாசகமனத்தில் நீங்காத இடத்தைப் பிடிக்க வேண்டும். படைப்பைப் படித்து முடித்த பின்னரும் படைப்பு சார்ந்த ஏதேனும் ஒரு விஷயத்தை மனத்தில் அசைபோட வேண்டும். அது குறித்து சிந்தித்து தொடர்ச்சியான விவாதத்தையோ உரையாடலையோ நிகழ்த்த வேண்டும். அந்தவகையில், பரணர் நற்றாயின் குணத்தை விளக்குவதற்கு 'நன்னன்' என்ற குறுநில மன்னனின் வாழ்க்கையில் நடந்ததை ஆவணமாக மாற்றி, கவிதையை வெற்றியடையச் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரயில் சிநேகம்

திமுகவுக்கு ஆதரவாக கமல் குரல்! வெளியானது தலைவன் இருக்கிறான் பாடல்!

புத்தாண்டில் புதிய நம்பிக்கை

பேரவைத் தேர்தலில் போட்டியில்லை என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


