5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

கச்சொடு சுரிகை காமுறப் புனைந்த வீரன்!

இலக்கணப்படி பிள்ளைத்தமிழ் நூல்கள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகிய பத்துப் பருவங்களைக் கொண்டமையும்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2026, 6:17 pm IST

இலக்கணப்படி பிள்ளைத்தமிழ் நூல்கள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் (பெண்பால் - அம்மானை, நீராடல், ஊசல்) ஆகிய பத்துப் பருவங்களைக் கொண்டமையும். இருப்பினும், பிங்கல, திவாகர நிகண்டுகள் அதிகப்படியான பருவங்களைப் பாடலாம் எனப் பரிந்துரை செய்கின்றன. அதன்படி, சில பிள்ளைத்தமிழ் நூல்களில் அரிதாக அதிகப்படியான பருவங்களையும் காண்கிறோம்.

இவ்வாறானதே 'கச்சொடு சுரிகை காமுறப் புனைதல்' எனும் ஆண்பால் பிள்ளைப்

பருவம். இதை 'உடைவாள் செறித்தல்' எனவும் கூறுவர். அரியணை ஏற வேண்டிய இளவரசன், அரசுகட்டில் ஏறுமுன் போர்க்கலைகள் பயின்று, காண்போர் (பெரும்பாலும் இளம் கன்னியர்) காதல் கொள்ளுமாறு இடைக்கச்சில் வாளினைத் தரித்துக்கொண்டு வீரம் பொங்கக் காட்சியளிப்பதே இப்பருவத்தின் சிறப்பாகும்.

இந்தப் பருவத்தைப் பற்றிய மூன்று பாடல்களை 'உடைவாள் செறித்தல்' எனும் பருவமாக (இலங்கை) கதிர்காம பிள்ளைத்தமிழ் என்ற முருகப்பெருமான் மீதான பிள்ளைத்

தமிழில் காண்கிறோம்.

மேலும் பார்போற்றும் அரசனான

இராசேந்திர சோழன்மீது அண்மையில் (2025) இயற்றப்பட்ட இராசேந்திர சோழன் பிள்ளைத்தமிழ் நூலிலும் இப்பருவம் பாடப்பட்டுள்ளது. இந்த நூல் பருவத்திற்கொரு பாடல்வீதம் பதினோரு பருவங்கட்குப் பதினோரு பாடல்களைக் கொண்டமைந்தது.

பரந்தாமன் எனப்படும் திருமால் பாற்கடலில் படத்தைக்கொண்ட பாம்பின் மீது படுத்து உறங்கியவண்ணமே அனைத்தையும் அறிந்தபடி உலகத்தைக் காவல் செய்வான். இதையே திருமாலின் 'அறிதுயில்' என்பர். அதுபோல, பொருத்தமாக, இடையில் கச்சில் கட்டிக்கொண்டுள்ள வாள் ஒன்றின் வலிமையைக் கொண்டே புலியைப் போன்ற திறமையுடனும் வீரத்துடனும் இந்தப் புவிக்கு எல்லாம் அரசனான இவன் (இராசேந்திரன்) தனது குடிமக்களைக் காப்பாற்றுவான்.

இராசேந்திரனின் ஒரு சிறப்புப்பெயர் திரிபுவனச் சக்கரவர்த்தி. கற்க வேண்டும் கடமை கொண்ட இளமைப் பருவத்தில் பலவிதமான போர்க்கலைகளில் பயிற்சிபெற்று அவற்றில் சிறந்து விளங்கிய வீரனே! கடற்போர்களிலும் கடல்கடந்து செய்யும் வாணிகத்திலும் சிறந்து விளங்கிய வீரனே! 'கங்கை கொண்ட சோழன்' எனும் பெயரைக்கொண்டவனே! அந்த மாரவேள் (காமவேள்) போன்று அழகானவனே!! கடாரம் எனும் நாட்டின் அரசனே! யானைமீது ஏறி வரும் வேந்தனே!

கன்னியர் உனது அழகான வடிவைக் கண்டு காதலால் ஏக்கம் கொள்ளும்படி இளங்காளை போன்ற நீ உனது இடைக்கச்சிலணிந்த ஒழுங்காக அமைக்கப்பட்ட வலிமையான குறுவாளைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றாய். உன் தாயாகிய வானவன்மாதேவி இறைவனிடம் வரம் வாங்கிவந்து பெற்றெடுத்தவனே! அருமையான வில்லைக் கையில் ஏந்திய வீரனே! வந்து உன் எதிரில் நிற்கத் துணிந்த கொடிய பகைவர்களை அழிக்கும் உடைவாளினை நீ தரித்துக் கொள்ள வருவாயாக! என அமைந்த பாடல்.

படந்தாங்கு பாம்பின்மேல் பாற்கடலிற்

கிடந்துறங்கு

பரந்தாமன் புவிதன்னை யறிந்து

காவல்செய்யும்

.................................

திடங்கொள் தோள்செம்மல் திருவுடை

இராசராசன்

திகழ்சோழ வளநாட்டின் திறமிகுந்த

பெருவீரன்

தகைமைசால் தனயனாய் தனித்துயர்ந்தே

விளங்கி

திரிபுவன முழுதாணைத் திகிரிதனைச்

செலுத்தி

கடங்கொண்ட இளவயதில் போர்க்கலை

பலகற்று

கரைகண்ட கடல்வீர! கங் கைகொண்ட

சோழமார!

.................................

வானவன்மா தேவிவரங் கொண்டு

பெற் றெடுத்த

வளர்சிலை வீர! வந்தெ திர்நிற்கு

வெம்பகை

யறுக்கஉடை வாளினை நீசெறிக்க

வருகவே!

இவ்வாறு இராசேந்திர சோழனை

வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.