

இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது. கற்பனை வளம் நிறைந்திருக்கும் போதும் வெற்றி பெறுகிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கிறதே என்ற எண்ணம் தோன்றலாம். இலக்கியம் பேசும் கருப்பொருளில் உண்மை இருக்க வேண்டும். அதைச் சொல்லும் விதத்தில்
கற்பனை நயம் இருக்க வேண்டும். சங்க இலக்கியங்கள் இந்த இரண்டையும் கொண்டிருப்பதாலேயே நிலைத்து நிற்கின்றன.
காதல் மனித குலத்தில் என்றைக்கும் அழியாத உண்மை அதை சங்க இலக்கியம் பாடுபொருளாக எடுத்துக்கொண்டுள்ளது. அந்த நிரந்தர உண்மையை எடுத்துச் சொல்ல இயற்கை முதலாக புலவர்கள் கையாண்டுள்ள கற்பனைத் திறம் பாடுபொருளான
உண்மைக்கு மேலும் வலிமையும் அழகும் சேர்கின்றன. அதைப் பேசுவதற்கு வகுத்துக் கொண்டுள்ள முறை இயற்கையும் அழகியலும் சார்ந்த கற்பனைகள். உவமை சொல்லி ஓர் உண்மையை உணர வைக்கும் இலக்கிய உத்தியை தொல்காப்பியம் வகுத்துத் தந்துவிட்டது.
உவமை கூறும் போது உயர்ந்தவற்றையே உவமையாக வைக்க வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை'' - (தொல். 274) சிங்கம்போல் பீடுநடை என்பது போல இதற்கு உதாரணங்கள் சொல்ல முடியும்.
இலக்கியத்தில் கற்பனை, உவமைகள் மூலமாக அதாவது அணிநலன் மூலம் அழகு சேர்க்கிறது. வாசகன் மனதில் ஒரு புதிய காட்சியை ஏற்கெனவே அறிந்த ஒரு செய்தி அல்லது காட்சியைக் கொண்டே உருவாக்குவது அணிநலனின் சிறப்பு.
உலகில் இயல்பாக நிகழும் ஒரு நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் கற்பனையை ஏற்றிப் பொருள் பொருத்தமுற உவமை கூறுவது தற்குறிப்பேற்ற அணி என்கிறோம்.
சங்க காலத்தில் பெண்பாற் புலவர் காமக்கணிப் பசலையார் ஒருநாள் திண்ணையில் காற்று வாங்கிக்கொண்டு அமர்ந்திருக்கிறார் போலும். அவருக்குள் மனித வாழ்க்கையின் நிலையாமையும் வாழ்வதற்கான ஆவலும் நிரம்பிய மனித மனதின் தவிப்பு குறித்த சிந்தனை தோன்றியிருக்கிறது. அப்போது மென்மையான தென்றலோடு இனிமையாகக் குயில் கூவுவது கேட்கிறது. அந்த இனிய இசைமயமான கூவல் நற்றிணை புலவருக்குள் புதிய சிந்தனையை மலர்ச்சியைத் தருகிறது.
தேம்படு சிலம்பில் தெள் அறல் தழீஇய
துறுகல் அயல தூமணல் அடைகரை,
அலங்குசினை பொதுளிய நறுவடி மா அத்துப்
பொதும்புதோறு அல்கும் பூங்கண் இருங்குயில்
'கவறுபெயர்த் தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!' என,
கையறத் துறப்போர்க் கழறுவ போல,
மெய்யுற இருந்து மேவா நுவல....
(நற்றிணை 243)
அதாவது, தேன் இருக்கின்ற மலை, அதன் பக்கத்தில் தெளிந்த நீர் சூழ்ந்த உருண்டைக்கல் உண்டு. அதன் அருகில் தூய மணல் நிறைந்த கரையில் மாமரங்கள் வளர்ந்து நிற்கின்றன. அவற்றின் கிளைகள் காற்றில் அசைந்து கொண்டிருக்கின்றன.
மாமரத்தில் சிறந்த மாவடுக்கள் நிரம்ப இருக்கின்றன. மாமரச் சோலை தோறும் தங்கியிருக்கும் பூப்போன்ற கண்களையுடைய கரிய குயில்கள் 'ஆணும் பெண்ணும்' கூடி இருந்து கூவுகின்றன.
அறிவுடையீர்! வாழ்க்கை சூதாட்டக் கருவி மாறிமாறி விழுவது போல நிலையில்லாதது.
எனவே, நிலையற்ற பொருளைத் தேடும் முயற்சியைக் கைவிட்டு, உம் தலைவியரை விட்டுப் பிரியாமல் சேர்ந்து வாழ்வீர்' என்று பொருள்வயிற் பிரிய நினைக்கும் காதலர்களுக்கு அறிவுரை சொல்லி காதலியோடு கூடி மகிழச் சொல்கின்றன.
இந்தக் கவிதையின் பாடுபொருள் நிலையாமைத் தத்துவமும் காதலின் நிலைத்த தன்மையும், அதனை மாஞ்சோலைக் குயிலின் கூவலில் கொண்டு வந்து காட்டிய கற்பனையும் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இந்தப் பாடலை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.